"தெய்வம் என்பதோர்" - நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்..." - தொ. பரமசிவன்




தொ. பரமசிவனை வாசிக்கும் முன் சமூக வலைதள பதிவுகளை மட்டும்  வைத்து யார் இவர் சிறு தெய்வம் என்கிறார், அதில்  ஜனநாயக பண்பு என்கிறார், தாய் தெய்வம் என்கிறார் என்றெல்லாம் நினைத்து கடத்ததுண்டு, அவரை பற்றி வாசிக்க வேண்டும் என்று புத்தக கண்காட்சியில் டெஸ்ட் பீஸாக வாங்கிய புத்தகம் தான் "தெய்வம் என்பதோர்" . ‘தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி’ என்கிற திருவாசக பாடலில் இருந்து தலைப்பை  எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். 


இந்நூலில் சமயம், மதம், வழிபாடு சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வாசிக்கும் போது வியப்பும் பூரிப்பும் ஏற்படுகிறது. சில இடங்களில் முரண்படவும் செய்கிறேன். இவரின் பிற புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் முதல் கட்டுரையை வாசித்ததுமே  ஏற்பட்டது.  


“தாய்த் தெய்வம்” கட்டுரை, முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன், பெரும்பாலான தாய்த் தெய்வ கோவில்கள் வடக்கு நோக்கியே அமைத்திருக்கும் என்பதில் தொடங்கி அதை பற்றிய கூடுதல் ஆய்வின் முக்கியத்துவத்தை "தமிழ் சமுதாய வரலாற்றின் உறுதியான அடித்தளத்தை அமைக்க பயன்படும்" என்கிறார்.

 

நீலிக்கும் - நீலி கண்ணீர் என்கிற சொல்லாடலுக்கும் இருக்கும் தொடர்பை பற்றி ஒரு சிறு கட்டுரை பேசுகிறது. சிறு சிறு சொற்களில் ஒளிந்திருக்கும் சுவாரசியமான கதைகளின் ஆழமான அர்த்தம், ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது. 


வள்ளலார் பற்றிய கட்டுரை சிதம்பரம் கோவிலில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை சுட்டிக்காட்டி, அதற்கு எதிராக  வள்ளலாரின் "சத்திய ஞான சபையை" தொடர்பு  படுத்தும் விதம் அருமை.   மேலும் வள்ளலார் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர்களையும் பட்டியிலிட்டுள்ளார். 


சிறுதெய்வ வழிபாட்டில் இருக்கும் ஜனநாயக பண்பை தமிழ் சமூகத்தின் ஆன்மீக அணுகுமுறையோடு ஒப்பிடுவது சால பொருந்துகிறது. பிற மதங்களில் இருக்கும் முக்கிய  கூறுகளை ஓதுக்கிவிடாமல் அவற்றையும் தங்களது வழிபாட்டு நம்பிக்கையோடு இணைத்துக்கொள்வது தமிழ் சமூகத்தின் ஜனநாயக பண்பு என்கிறார். மதவாத சக்திகளை தமிழகம் புறக்கணிப்பதற்கும் இந்த ஜனநாயக பண்பிற்கும் உள்ள தொடர்பை சேர்த்தே புரிந்துகொள்ளவேண்டும்.


சிறுதெய்வங்கள் ஜனநாயக பண்போடு இருந்தாலும் அதனிலும்  சாதிய பித்து இருப்பதை ஒரு கட்டுரை சுட்டி காட்டுகிறது. இந்திய விடுதலைக்கு பிறகு அதில் ஏற்பட்ட  மாற்றங்களையும் தலித்துகளின் எழுச்சியையும் கோவில் நுழைவு போராட்டங்களின் தொடர்ச்சியையும் ஒரு கட்டுரையில்  இணைகிறார். பல்வேறு நிகழ்வுகளை ஒரே புள்ளியில் இணைப்பதால் தான் இவரின் கட்டுரைகள் தெளிவான ஒன்றாக தெரிவதாக நான் அவதானிக்கிறேன். ஆனால் இவை அனைத்தும் ஆய்வுக்குட்பட்டவையே என்பதில் மாற்று கருத்தில்லை. 


பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் என்கிற கட்டுரை சிக்கலான ஒன்றாக தெரிகிறது.  "நகர்ப்புறம் சார்ந்த அறிவுஜீவிகள் தவிர பாரம்பரியமான முறையில் பொருள் உற்பத்தி செய்யும் மனிதரை தெய்வ நம்பிக்கையில்  இருந்து விடுதலை செய்ய இயலாது" என்கிறார். ஆழமான கருத்தாக இருந்தாலும் பொருள் உற்பத்தியோடு மட்டும் தெய்வ நம்பிக்கையை தொடர்புபடுத்தி புரிந்துகொள்வது சிக்கலான ஒன்று, தெய்விகம் சார்ந்த மூட நம்பிக்கைகள் எல்லாம்  பண்பாடு, பழக்கவழக்கம் என்கிற பெயரில் ஆழ்மனதில் பதியவைக்க  பட்டவையாகும். மனமாற்றம் மூலமாகவும் , பகுத்தறிவின் மூலமாகவும் தெய்வீக நம்பிக்கையை கடந்து வர முடியும். இன்றைக்கும் கிராமங்களில் பல திராவிடர் கழக தோழர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும் பகுத்தறிவின் துணை கொண்டும் இயங்கி வருகிறார்கள், அவர்களின் அடிப்படை தொழில் மரபு சார்ந்த விவசாயம் என்பது குறிப்பிடத்தக்கது. .


மத நல்லிணக்கம் திழைக்க இந்து என்கிற சொல்லுக்கு அரசியலை அமைப்பு சட்டம் ஒரு விளக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு இந்த நூல் நிறைவடைகிறது. நியாயமான ஒன்றும் கூட. 


பழமையில் மூழ்காமல், அவற்றை அறிந்து வைத்துக் கொண்டு ஆய்வு ரீதியாக அணுகுவது தமிழ் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கும் என்றே நினைக்கிறேன். 


ஆழமான கருத்துள்ள கட்டுரைகளும், வியக்கத்தக்க விளக்கங்களும் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


தொ. பரமசிவன் அவர்களின்  புத்தகங்களையும் இனி விரும்பி வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். 





Comments