தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை // Book Review




 ஆங்கிலத்தில் Encyclopaedia இருப்பதைப்போல், தமிழிலும் ஒரு நவீன தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் தமிழ் மண்ணில் நடந்துள்ளது. 1940களின் இறுதியில் தொடங்கி  1968 வரை, 10 தொகுதிகளாக ஒருவொரு தொகுதியும் 700+ பக்க அளவில் மொத்தம் சுமார் 7000 பக்கங்களுக்கு வெளியாகியுள்ளது. ஏனோ இந்த கலைக்களஞ்சியம் சில அரசியல் காரணங்களால் பின்னாட்களில் தொடர்ந்து மறுபதிப்பு செய்யப்படவோ மாற்றங்கள் செய்யப்படவோ இல்லை. 


பாரதியின் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்குவதில் தீர்க்கமான முயற்சிகளை மேற்கொண்ட கல்வி அமைச்சர்  தி.சு அவினாசிலிங்கம் செட்டியார், இந்த தமிழ் கலைக்களஞ்சியத்தை வெளிக்கொண்டு வருவதிலும் அத்தகைய ஆர்வத்தையும் மெனெக்கெடலையும் செலுத்தியுள்ளார். இந்திய மொழிகளிலேயே  தமிழில் தான் முதன் முதலாக இத்தகைய முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிதி பொது மக்களின்  “நன்கொடை” மூலமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் மூலமும் மேற்கொள்ளப்பட்டது . அப்போது காங்கிரஸ் அரசாங்கமே ஒன்றியத்தில்- மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது, ஆனாலும் பல நேரங்கள் இதற்கான முக்கியத்துவத்தை அளிக்காமல் தாமதமாகவே நிதி வாழங்கப்பட்டது. 


தமிழ் கலைக்களஞ்சியம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழுவில் அக்காலத்தை சேர்ந்த பல்வேறு அறிவுஜீவீகள் இடம்பெற்றிருந்தார்கள். முனைவர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்கப்பட்டது, தேவைப்படுமிடங்களில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஆங்கில Encyclopaediaவை  முன்மாதிரியாக கொண்டிருந்தாலும், இது வெறும் மொழிபெயர்ப்பாக அன்றி தமிழ் அறிஞர்களின் சுய முயற்சியாலும் உழைப்பாலும் மேற்கொள்ளப்பட்டது. தெ.பொ. மீனாட்சி சுந்தரம் போன்ற அறிஞர்கள் பல புதிய சொற்களை இதற்காக உருவாக்கினார்கள், "ஆளுமை - Personality" போன்ற வார்த்தைகள் எல்லாம் இதன் விளைவாக ஏற்பட்டவை தான். 


இந்த குழுவின் பிரதம ஆசிரியராக ம. ப பெரியசாமி தூரன் நியமிக்கப்பட்டிருந்தார், கூட்டாசிரியராக திரிகூட சுந்தரம் பிள்ளை செயல்பட்டார். மேலும் இந்த குழுவில் பல்வேறு அறிஞர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அப்படி இருந்தபோதிலும் பேராசிரியர் க.அன்பழகன் போன்றவர்கள் இதில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதாக சொல்லி விமர்சித்தனர், அவர் பார்ப்பனரல்லாதார் அறிஞர் குழு ஒன்றையும் பரிந்துரைத்திருந்தார். 


பாகுத்தறிவு இயக்கத்தார் எவரும் தமிழ் கலைக்களஞ்சிய குழுவில் இடம்பெறாமல் போனதற்கான எதிர்வினைகளாக பேராசிரியர் அன்பழகன் அவர்களின் விமரிசனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கா. அப்பாதுரையார் போன்ற  திராவிட இயக்கத்தவரும் இந்த போக்கை விமர்சித்து "பொன்னி" இதழில் எழுதியிருந்தனர். இந்த நிகழ்விலும் காங்கிரஸ்- திராவிட அரசியல் தாக்கம் இருந்தது என்பதை கவனிக்கவேண்டும். 


தமிழ் கலைக்களஞ்சியம் வெளியான பிறகு, குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியமும்(1968 -1976 ) “தமிழ் வளர்ச்சி கழகத்தால்” 10 தொகுதிகளாக வண்ண புகைப்படங்களோடு வெளியானது. தமிழ் கலைக்களஞ்சியத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் அறிவிப்பை  எம்.ஜி.ஆர் அரசு அறிவித்த போதிலும் அவர்களின் பிற திட்டங்கள் போலவே இதுவும் நடைமுறைக்கு வரவில்லை. 


நவீன இணைய பயன்பாடும் தகவல் தொழில்நுட்ப வசதிகளும் ஏற்பட்ட பிறகு தமிழ் கலைக்களஞ்சியத்தில் தேவை அவசியமாகவில்லை என்றாலும், 1940 களிலேயே இதற்கான செயல்பாடுகள் நடைபெற்றது என்பது தமிழ் நிலத்தின் தொலைநோக்கையும், அறிவின் மீது நாம் கொண்டிருந்த அக்கறையையும் மெச்சத்தக்க ஒன்றாகும். கலைக்களஞ்சியத்திற்கு எழுந்த  விமரிசனங்களை மேம்பாட்டுக்காக சொல்லப்பட்ட ஆக்கபூர்வமான  ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். 


வரலாற்றின் இந்த சிறு பகுதியை மிக எளிமையாகவும், அதே சமயம் தரவுகளுடனும், சுவாரசியமான  எழுது நடையிலும் பேராசிரியர் A.r. Venkatachalapathy எழுதியுள்ளார். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


மிக சிறு நூல், ஆனால் பிரமிக்கவைக்கும் வரலாற்று தகவல்களை கொண்டுள்ளது. 




தமிழ் கலைக்களஞ்சியத்தின் கதை

காலச்சுவடு 


Comments