சுய கருத்து சாம்பிராணி

 




சுய கருத்து சாம்பிராணி, இதுவரை தமிழ்நாடு கேட்டிராத ஒரு கருத்தை அண்மையில் உதிர்த்துள்ளார். 

தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்குப் பேச வேண்டுமா என்ன?  திராவிட இயக்கம் மொழி உரிமை போராட்டத்திற்குச் சொந்தம் கொண்டாடுவது அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதென்று அவர் கூறியுள்ளார். 


புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘செய்திக்கு அப்பால்’ என்ற நிகழ்ச்சியில் மொழிப் போராட்டம் குறித்து இவர் நிறுவ முயலும் கருத்துக்கள் அப்பட்டமான உள்நோக்கம் கொண்டவை. இந்த இயக்கம் நடத்திய போராட்டங்களையும் அதற்காக போராடிய 


இப்படி தான் பெரியார் குறித்த விவாதம் எழுந்த போது, பிற்படுத்தப்பட்ட மக்களின் God Father என்று அடையாள ரீதியாகப் பெரியாரை OBCகளின் தலைவராக மட்டும் சுருக்க முயன்றார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமோ, தலித் தரப்பாரிடமோ இருந்து இதற்கு எதிர்வினை கிளம்பு என்று எதிர்பார்த்தேன், ஏமாற்றமே மிச்சம். 


மொழிப்போரில் முதல் கள பலியான 18 வயதே ஆன ல.நடராசன் குறித்து பேசும்போது, “அவர் எந்த இயக்கத்தில் இருதவர், அவருடைய கட்சி பின்னணி என்ன” என்று முட்டாள் தனமான கேள்விகளை எழுப்பிவிட்டு, நடராசன் தமிழ் உணர்வின் காரணமாக போராட வந்தவர் என்கிறார். 1937-39 மொழிப்போர் தனிமனிதர்கள் பலரால் தொடங்கப்பட்டது போலவும், அதற்கும் திராவிட இயக்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும் ஒரு போலி கருத்தை மிக தைரியமாக உற்பத்தி செய்கிறார். 


ஒரு செய்தி நிறுவனத்தின் ஆசிரியராக இருந்துகொண்டு சகிக்க இயலாத பொய்களை தொடர்ந்து உதிர்த்து வரும் ‘சுய கருத்து சாம்பிராணிக்கு’ சில செய்திகளை தெளிவு படுத்துவது அவசியமாகிறது. 


நடராசன் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பதை நிறுவ மூன்று புள்ளிகள்: 


1. மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில்,  நடராசனுக்கு மருத்துவம் பார்த்த வல்லுநரின் தகுதியைப் பற்றி எம்.சி.ராஜா வினா எழுப்பினார். தொடர்ந்து சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஏன் முன்பே அவருடைய நோய் இனங்காணப்படவில்லை என்ற கேள்விக்கு, ‘தெரிந்திருந்தால் அவரை ஏன் மறியலுக்கு அனுப்பியிருக்கப் போகிறார் அந்த கனவான்’ என்று தந்தை பெரியாரைச் சுட்டிக்காட்டிய ராஜாஜி, சிறைக் கண்காணிப்பாளரின் அறிக்கையை அவையில் வழங்கினார். இத்தருணத்தில் இடையிட்ட முத்தையா செட்டியார் நடராசனுக்கு உற்ற நோயின் தீவிரத்தை மருத்துவர்கள் அறிந்திருந்தனரா, ஏன் உடனே விடுவிக்கவில்லை; அவர் உடல்நிலையைப் பற்றிய முதல் அறிக்கைகள் எப்போது கிடைத்தன என்று சரமாரியாகத் துணைக் கேள்விகளை எழுப்பினார். // இதில் ராஜாஜி குறிப்பிடும் கனவான் தந்தை பெரியார் என்பதும் அவர் தான் நடராசன் போர்க்களம் செல்ல காரணமாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 



2. சர்க்காரால் சிறையிலிடப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்ட நடராசன் 15.01.1938 அன்று பகல் சுமார் 2:45 மணிக்கு மறைவெய்துகிறார். அவரது உடல் குமார ராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து காரில் கறுப்புக் கொடி போர்த்தி, பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மறுநாள் ஜனவரி 16இல் 10,000 அதிகமானோர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் தர்மாம்பாள், அ.பொன்னம்பலம், கு.மு.அண்ணல்தங்கோ, ஆல்பர்ட் ஜேசுதாசன், காஞ்சி பரவஸ்து ராஜகோபாலாச்சாரி, நாராயணி அம்மை முதலானோர் புகழுரையாற்றினர். 22.01.1938 குடிஅரசு இதழ் நடராசனின் மறைவைச் செய்தியாக வெளியிட்டிருந்தது. மேலும் நடராசனின் தந்தை கோ.லட்சுமணன் எழுதிய உணர்வுப்பூர்வமான கடிதம்  ஒன்றும் படிக்கக் கிடைத்துள்ளது. அதில் அவர்  “மரண செய்தி கேட்டு மனம் நொந்து மதிமயங்கி வாழ்ந்து வந்தேன், இந்த பத்திரிகை செய்தியைப் பார்த்ததும் நான் என் வாழ்நாளில் அடையமுடியாததும் அடைந்திடாததுமான மகிழ்ச்சியுற்றேன் என்று குறிப்பிட்டு இறுதியில் ‘திராவிடம் வாழ்க ஆரியம் வீழ்க!’ என்று கடிதத்தை நிறைவு செய்துள்ளார். // நடராசன் மட்டுமல்ல அவரது தந்தையும் திராவிட இயக்க பற்று கொண்டவர் என்பது தெளிவு.


3. நடராசனை தொடர்ந்து 11.03.1939 அன்று சிறையில் அடைக்கப்பட்டு நோய்த் தொற்றுக்கு ஆளான 19 வயதே ஆன தாலமுத்துவும் மரணம் அடைந்தார். 19.03.1939 அன்று வெளியான குடிஅரசு இதழில் இந்த செய்தியும் வெளியாகி இருக்கிறது.  தாலமுத்துவின் இறுதி ஊர்வலத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு கொடி ஏந்தி பங்கேற்றனர். அந்த திரளில் ‘இந்தி ஒழிக, காங்கிரஸ் ஆட்சி ஒழிக, தமிழ் வாழ்க’ என்ற முழக்கம் அரை மணி நேரம் ஒலித்துள்ளது. இரவு 7:30 மணிக்கு மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு ஊர்வலம் வந்தடைந்தது, நடராசனின் சமாதி அருகே குழி எடுக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கேயே ஒரு இரங்கல் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உருக்கமாகப் பேசிய பேரறிஞர் அண்ணா “என்னைப் பொருத்தவரை தோழர்கள் நடராஜன், தாலமுத்து மரணத்தை எனது அண்ணன் தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்” என்றும், “தமிழன் ஆச்சாரியார் ஆட்சியில் ஏன் இறக்கிறான்? அவர் நினைத்தால் பல தாலமுத்துகள் மயானம் வர முடியும். ஏன்? ஆச்சாரியார் நினைத்தால் நீயும் நானும் மயானம் வர வேண்டியது தான். மிகவும் வெட்ககரமான நிலையில் தமிழர்கள் இருக்கின்றோம். எதைச் செய்து, எதைச் சொல்லி தமிழன் முன்னேறுவது - விடுதலை பெறுவது என்று தெரியவில்லை. இரண்டு மணிகளை இழந்தோம்.”  என்று ஆற்றாமையோடு சொல் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். 



திராவிட இயக்கம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு சொந்தம் கொண்ட முடியாது என்று கூறும் சமஸ், திருச்சியில் இருந்து சென்னைக்கு வரைக்கும் கால் கடுக்க ‘தமிழ் வாழ்க இந்தி வீழ்க’  என்று தமிழ் கொடியேந்தி வந்த பெரியாரின் தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியின் தீரத்தை வஞ்சத்தோடு தவிர்ப்பது ஏன். மொழி போரில் மாய்ந்த நடராசனை ‘அறிவற்றவர்’ என்று சொல்லியும், உயிர்பலி குறித்து எவ்வித குற்ற உணர்வும் இல்லாத ராஜாஜியின் புகழ்பாடுவதை பொழப்பாக கொண்டிருக்கும் சமஸ் இந்த சம்பவங்களை எல்லாம் ஏன் சொல்ல மறுக்கிறார் ? எது சொல்ல தடுக்கிறது ? தேட தெம்பில்லை என்றால் முகநூலில் கேட்க சொல்லுங்கள். தரவுகளை தூக்கி வீசுகிறோம்.  


நான் மேல எழுதி இருக்கும் ஒவ்வொரு வரிக்கும் என்னிடம் தரவுகள் உள்ளன. சமஸ் அளித்த 22 நிமிட பேட்டியில் அவர் உதிர்க்கும் அரை உண்மைகளுக்கு அவரிடம் தரவுகள் உண்டா?? 


P.S: 


இன்று காலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் வெளியாகி இருக்கிறது, திராவிட இயக்க வரலாற்றாளர் க. திருநாவுக்கரசு ஐயாவின் ‘சுயமரியாதை இயக்க வரலாறு -பாகம் 2’. திராவிட இயக்க வரலாற்றை உள்ளடக்கிய புதையல். 



இந்நூலில் முதல் மொழி போர் குறித்த பல்வேறு செய்திகளை நமக்கு வழங்குகிறது. இதில் நடராசன்-தாலமுத்து குறித்து இந்து தமிழ் திசையில் சலபதி எழுதிய இரண்டு கட்டுரைகள் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் இவை.


 நான் அறிந்த அளவில் சமஸ் பேட்டிக்காக இந்த கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டும் லாவகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார், மற்றவற்றையும் அவர் படிக்க வேண்டும். அல்லது இந்த நூலை அவருக்கு யாரேனும் பரிசாக வழங்க வேண்டும். படிங்க சமஸ். 


Comments