RSS எனும் Octopus!
21-ஆம் நூற்றாண்டில் ஒரு அமைப்பு பதிவு செய்யப்படாமலே சகல துறைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறதென்றால் அதன் சமூக வலைப்பின்னலை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா?
நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கோவில் நிலம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்து அவற்றைக் கையாடல் செய்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான கட்டிடத்தைத் தலைநகரில் எழுப்பி இருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் பின்னணியை அலசுகிறது இம்மாத(July 2025) The Caravan Magazine கட்டுரை.
எப்படி இது சாத்தியமானது என்ற வியப்பு ஒருபுறமும், இந்தப் பூதத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற அச்சம் மறுபுறமும் தொற்றிகொள்கிறது. தன்னார்வ அமைப்பாகவோ, அறக்கட்டளையாகவோ, சங்கமாகவோ கூடப் பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவருக்கும் அதன் தலைமை அலுவலகத்திற்கும் Z +பாதுகாப்பு எப்படிச் சாத்தியப்பட்டது?
கோயில், சாகாக்கள், சார்பு அமைப்புகள், சர்வ துறைகளிலும் நிறைந்திருக்கும் சங்கிகள், பெரும் முதலாளிகள், நினைத்துப்பார்க்க முடியாத அளவில் கிட்டும் நன்கொடை இவற்றைக் கடந்து ஒரு கோட்பாட்டிற்காக அதிதீவிரமாக இயங்கும் கூட்டம் இவை தான் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பை இயக்குகின்றன.
அதனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையும், அங்கு நடைபெறும் தேர்தலையும் தீர்மானிக்கமுடிகிறது. நீதிமன்றங்களுக்குச் செல்லாமலே உருட்டல் மிரட்டல் மூலம் ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அதே பெயரில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்ய முயன்றவரின் அடையாளத்தையே அழித்து எரிய முடிகிறது.
ஒரு காலத்தில் மஹாராஷ்டிராவை மட்டுமே மையம் கொண்டிருந்த இந்த இயக்கம் இந்திய முழுக்க வளர தொடங்கியது பிரிவினைக்குப் பிறகு தான். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பெரிய அளவிலான பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற பார்ப்பனரான கோட்ஸே தன்னுடைய கடைசிக் காலம் வரை ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தான். காந்தி கொலை, அவசரநிலை பிரகடனம், பாபர் மசூதி தகர்ப்பு என மூன்று வெவ்வேறு தருணங்களில் இந்த அமைப்புத் தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்று மிக வீரியமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கோயிலின் பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இந்த அமைப்பே சான்றாக விளங்குகிறது. இன்றைய பிரதமர் தொடங்கி ஒன்றிய அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பெரும் பணக்காரர்கள், கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர்கள் எனச் சகல துறையும் காவிமையம் ஆகி கொண்டிருக்கிறது.
அதிகார இழப்பு ஏற்படுத்தும் வெறுமையில் இருந்து மீள்வதைக் காட்டிலும் பெருந்துயர் இவுலகில் இல்லை, இந்திய ஒன்றியத்தில் இடதுசாரிகள் அதிகாரத்தை இழந்துவருவதற்கான மற்றுமொரு சமிஞை தான் இக்கட்டுரை. இடதுசாரிகள் இதை உணர்ந்துள்ளார்களா? என்றுதான் தெரியவில்லை.
Comments
Post a Comment