அறிவாளர்களை நோக்கி ஒரு விசில்!
அறிவாளர்களை நோக்கி ஒரு விசில்!
ஆங்கிலத்தில் spin doctor என்ற சொல்லுக்கு merriam-webster சொல்லகராதி இப்படியான விளக்கத்தை வழங்குகிறது, a person (such as a political aide) responsible for ensuring that others interpret an event from a particular point of view. ஒரு நிகழ்வை அல்லது ஒரு சிக்கலை இப்படி மட்டும் தான் பார்க்க வேண்டும் என்பதை லாவகமாக எடுத்துரைப்பது. அதன் மூலம் இச்சிக்கலை அணுகும் அனைவரது பார்வையையும் ஓர்மைப் படுத்துவது, அவர்களை நம்பவைப்பது ஆகியவை இத்தகைய Spin-doctors-களுக்கு வழங்கப்பட்ட பணி. சமகால இணைய வலைப்பின்னலில் இப்படியானவர்களின் குரல் வலுத்து ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
இத்தகைய குரல்கள் அர்த்தமற்ற ஒன்றின் மீது பல அர்த்தங்களைக் கற்பித்து அதன்மூலம் ஒரு கதையாடலை நிறுவ முயல்பவையாக திகழ்கின்றன. நடிகர் விஜயின் அரசியல் வருகையையும், அதன் பிறகு நடைபெற்ற கரூர் துயர் சம்பவத்தையும், டிஜிட்டல் வெளியில் Virtual Warriors என்ற பெயரில் விஜய் ரசிகர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போக்கிரித் தனங்களையும் ஒருவரும் முகச்சுளிப்பின்றி கடந்திருக்க முடியாது. இத்தகைய சமூகச் சீரழிவுகளுக்கு வரலாற்று ரீதியிலான தொடர்ச்சி இருப்பதாக ஒரு கதைடயலை வடித்து, பல்வேறு வரலாற்று பிழைகளுடன் விஜயின் அரசியலைத் திராவிட அரசியலின் நீட்சி என்று நிறுவ முயல்கிறது தோழர் ர. முகமது இலியாஸ் எழுதியிருக்கும் ‘ஜன நாயகன் (பிம்பச் சிறை 2.0)’ எனும் நூல்.
விஜயைப் பற்றியாக நூலாக மட்டுமின்றி சமகால அரசியல் சமூகத்தின் மீதான மதிப்பீடாக முன்னிறுத்தப்படும் இந்நூல் அடிப்படையிலேயே பல சிக்கலைக் கொண்டிருக்கிறது. கதையாடலைக் கட்டமைக்க உகந்த சம்பவங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே சார்ந்த ஒன்றாக இருப்பது முதல் சறுக்கல். எம்.ஜி.ஆர். - ரஜினி - விஜய் என்று நடிகர்களைக் கொண்டு சினிமாவின் காலத்தையும் அந்தச் சமகால சமூகத்தையும் அதற்கேற்ப வரலாற்று நிகழ்வுகளையும் பகுப்பது இரண்டாவது சறுக்கல். தி.மு.க. என்ற அடிப்படை கட்டமைப்பு கொண்ட 75 ஆண்டுகால இயக்கத்தைத் தனது இயக்க நடைமுறையைக் கூட ரகசியம் போல் பாதுகாக்கும் த.வெ.க. என்ற கட்சியுடன் ஒப்பிடுவது மூன்றாவது சறுக்கல். உலகம் முழுக்க கோலோச்சும் Attention economy-யையும் அதன் பிரதான பயனாளிகளான ஊடகங்களையும் தமிழ் அரசியல் சமூகச் சிக்கலாகச் சுருக்க முயல்வது நான்காவது சறுக்கல். எழுத்து - பேச்சு - நாடகம் - சினிமா என கலை சார்ந்த ஒன்றாக மட்டுமே தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வதாகச் சுருக்க முயல்வது ஐந்தாவது சறுக்கல்.
இந்நூல் முன்வைக்கும் பல தள விமர்சனங்களுள் Political consultancies பற்றிய விமர்சனத்தைத் தவிர மற்ற அனைத்தும் ஏதோ ஒருவகையில் அபத்தம் நிறைந்தவை. இதற்கு ஆய்வாளர் எம்.எஸ்.எஸ் பாண்டியனின் எம்.ஜி.ஆர். குறித்த பகுப்பாய்வு நூலான ‘பிம்பச்சிறை’ (Image Trap: M G Ramachandran in Film and Politics) என்ற தலைப்பைத் துணை தலைப்பாகப் பயன்படுத்தியதன் காரணம் புழங்கவில்லை. காரணம் இந்நூல் விஜய் என்ற நடிகரையோ அவரது அரசியலையே பகுப்பாய்வதை விட அவரது போக்குக்கு நியாயம் கற்பிக்கும் Spin-doctorன் தலையாய கடமையைச் செவ்வனே செய்கிறது.
வேலாயுதம் திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன் டெல்லியின் ராமலீலா மைதானத்தில் ‘ஊழல்’ போராளி அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார் நடிகர் விஜய். விஜயின் அரசியல் வாழ்வில் முக்கியத்துவம் கொண்ட, அகில இந்திய அளவில் பேசு பொருளான நிகழ்வுகளுள் ஒன்றான இந்த ஊழல் உண்ணாவிரத ஆதரவு குறித்து இந்த நூலின் ஓரிடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. பா.ஜ.க. தன்னைப் பயன்படுத்திக்கொண்டதாக 2019-ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே பேட்டியளித்து குறிப்பிடத்தக்கது.
மாநில சுயாட்சி தீர்மானம்- அவசரநிலை எதிர்ப்பு (மிசா) என்பதில் காட்டிய உறுதியால் அன்றைய தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் முஜிபுர் ரஹ்மான் என்று வர்ணிக்கப்பட்ட 1970-களில் திராவிட கட்சிகள் தேசிய அரசுக் கட்டமைப்பின் நிர்வாகிகளாக மாறியிருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுவது பிழையானது. தனது பெயரில் அனைத்திந்திய என்பதை இணைத்து கொண்ட அ.இ.அ.தி.மு.க.வை அந்தச் சட்டகத்திற்குள் அடைக்க முடியுமே ஒழிய, அதிகாரத்தை குவிக்க துடிக்கும் இந்தியத் தேசியம் என்கிற மையநோக்கு விசைக்கு எதிரான மையவிலக்கு விசையாகச் செயல்பட்ட/ செயல்பட்டுவரும் தி.மு.கழகத்தை அந்தச் சட்டகத்திற்குள் அடைக்க முடியாது.
1980களிலும் இந்தித் திணிப்பிற்கு எதிராக இந்திய அரசியல் அமைப்பு சட்ட எரிப்பு போராட்டத்தை முன்னெடுத்த இயக்கம் தி.மு.க. அதிகார குவிப்புக்கு எதிரான மையவிலக்கு விசையாக இன்றுவரை செயல்பட்டு வரும் ஒரு இயக்கத்தின் வரலாற்றை கதையாடலுக்காக வளைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்நூல் முழுக்கவே புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் த.வெ.க. என்ற அரசியல் கட்சிக்கு ஏதோ ஒரு வகையில் ஆலோசனை வழங்கும் தொணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அர்த்தமற்ற ஒன்றின் மீது ஒரு அர்த்தத்தைத் திணிப்பது போல், அரசியலற்ற ஒரு பிம்பத்தின் மீது காலத்தின் அரசியலை நூல் அசிரியரின் எதிர்பார்ப்பைத் திணிக்கும் செயலை இந்நூல் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாகக் கீழக்காணும் சிலவற்றைப் பட்டியலிடலாம்.
பக் 68. ஊடகங்களின் வழியாக வெகுமக்கள் ஆதரவைத் திரட்ட முடிந்த விஜயால், அதனைத் தனது நிர்வாகத் திறனோடு இணைக்க முடிந்தால் மட்டுமே அவரால் அரசியலில் நீடித்து இயங்க முடியும்.
பக். 69 - விஜயின் அரசியல் வருகையில் அவர் முன் இருக்கும் சவால்களில் முதன்மையானவை, திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல. வெகுமக்களின் உணர்வுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, எளிதாகத் தூண்டப்படும் சூழலில் அவர்களோடு உரையாடும் அரசியல் தொடர்பியல் தளங்களை மீளுருவாக்கம் செய்வதே அவர் முன் இருக்கும் முதன்மைச் சவால்.
பக். 124 - கட்சி தொடங்கிய சில நாள்களிலேயே த.வெ.க. தலைவர் விஜய் இஃப்தார் நிகழ்வில் கலந்துகொண்டதோடு, இஸ்லாமியர்களோடு நோன்பு வைத்தார்; தொழுகையும் நடத்தினார். தன்னையே ஒரு இஸ்லாமியராக அடையாளப்படுத்திக்கொள்ளவும் செய்தார். இவை இந்து ஓரியண்டலிசத்திற்கு எதிரான வெகுஜனவிய அரசியல் நடவடிக்கைகள்.
பக். 132 - தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையிலானது, ஒரு செக்யூலர் அரசியலுக்கும் மற்றொரு செக்யூலர் அரசியலுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும்போது ஆரோக்கியமான மக்களாட்சியை நோக்கி நகர முடியும்.
பக். 163 - பிற எல்லா நேரங்களிலும் மௌனம் காப்பது என்னும் உத்தி ஒருவகையில் விஜயின் பிம்பத்தை வலுப்படுத்துவதோடு, அவரின் ஆதரவுத் தரப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. பெரும்பாலும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைஞர்களே அவருக்கு ஆதரவு என்னும்போது, புரிவதற்குக் கடினமான அரசியல் உரைகளை அவர் நிகழ்த்துவதைவிட, அவரது மௌனத்தை அவரது ஆதரவுத் தரப்பால் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் நடவடிக்கையாக உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.
பக். 172 - அம்பேத்கரையும் பெரியாரையும் தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததும் சமகாலச் சூழலில் பெரும் இளைஞர் திரளை இந்துத் தேசியத்திற்கு எதிராகத் திருப்புவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் எனலாம்.
திரைப்படங்களில் விஜய் எனும் நடிகருக்குக் கொடுக்கப்படும் ‘Build-up’ போல் இந்த நூலின் சில பகுதிகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நூல் ஆசிரியரே ஓரிடத்தில் தனக்கு ஏற்பட்டிருக்கும் தெளிவை வெளிப்படுத்துகிறார், அதாவது “ஒரு வகையில், விஜய் போன்ற திரை நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுகள், இந்த நூல் உட்பட, நாம் ஆராய விரும்பும் அதே நட்சத்திரங்களை மீண்டும் காப்பதாகவே மாறிவிடுகிறது. விஜய் குறித்து எழுதப்படும் ஒவ்வொரு வரியும் மீண்டும் அவரது பிம்பத்திற்கே வலுச்சேர்க்கிறது; அவரது தொன்மத்தில் கூடுதல் பண்புகளை இணைத்துக்கொள்கிறது. திரைநட்சத்திரத் தன்மை இயங்குவதன் ரகசியமே இதுதான். அது தன்னை விமர்சிப்பவர்களையும், ஆராய்பவர்களையும்கூட செரித்துக் கொள்ளும். திரை நட்சத்திரங்களைப் போற்றுவது மட்டுமல்ல, விமர்சிப்பதும் ஆராய்வதும்கூட அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கக்கூடியவையே.”
ஆய்வு என்பது சார்புகளற்றதாக இருந்தல் வேண்டும். விலகி இருந்து அவற்றை அணுகி, முடிவை எட்டுவதே ஆய்வின் நோக்கமாக இருக்கமுடியும். ஓர் ஆய்வு பொருள் ஆய்வாளரையும் உட்செரித்துக் கொண்டால் அது அந்த ஆய்வுப்பொருளுக்கான புகழுரையாக இருக்குமே ஒழிய நிறைவாக இருக்காது. முன்னுரையிலேயே தன்னை விஜய் ரசிகர் என்று அடையாளப்படுத்தி கொள்ளும் நூல் ஆசிரியர் இந்நூலின் பல பக்கங்களிலும் ரசிகராகவே வெளிப்படுகிறார். ஆய்வாளராக இதை அணுக முற்பட்ட போதெல்லாம் குழப்பத்தில் உழல்வதை அவதானிக்க முடிகிறது.
தி.மு.க. மீதான உட்சபட்ச விமர்சனமாக, அது கருத்தியலை மூலதனமாக வைத்து, தலைமை குடும்பங்களின் மேம்பாட்டையும் முதன்மை தலைவர்களின் பொருளாதார நலன்களையும் காக்க செயல்படுவதாக சொல்கிறார். தி.மு.க.வின் கட்டமைப்பு அலகுகளான கிளை-ஒன்றியம் -நகரம்-பகுதி-பேரூர் செயலாளரின் ஒப்புதலின்றி மிக பெரிய மாற்றங்களைக் கட்சிக்குள் இன்றளவும் நிகழ்த்திவிட முடியாது. அதன் கட்டமைப்பு வலிமைக்குக் கீழிருந்து மேல் பரவியிருக்கும் அதிகாரம் பிரதான காரணம். அதிகாரம் என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல அது மக்கள் திரள் சார்ந்தது. செல்வக் குவிப்பு என்பது தி.மு.க.வில் மட்டும் நிகழ்வதல்ல, பாரம்பரிய அரசியல் கட்சிகள் அனைத்திலுமே இந்த சிக்கல் இருக்கிறது. புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்நூல் விதந்தோதும் த.வெ.க.-வில் கூட பண பலத்தை கொண்டும் சாதிய பின்புலத்தைக் கொண்டுமே பொறுப்புகள் வழங்கப்படுவதாக விமர்சனம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக அரசியலின் பிரச்னையை ஒரு கட்சியின் பிரச்சனையாக ஒரு குடும்பம் தான் அதற்கு காரணம் என்று சுருங்குவது நியாயமற்றது. கெரியரின் உச்சத்தை உதறிவிட்டு மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வரும் விஜயைச் சுற்றி இருப்பவர்கள் எளிமையானவர்கள் அல்ல செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அதிகாரத்தை நுகர்ந்தே பழக்கப்பட்டவர்கள், அதிகாரத்தை அடைவோம் என்ற பேராசையால் அக்கட்சியில் இணைபவர்கள். விஜயை மட்டுமே கவனப்படுத்தும் இந்நூல் அவர் உருவாக்கி இருக்கும் அமைப்பை அவர் சார்ந்திருக்கும் மனிதர்களைக் கேள்விக்குட்படுத்த மறுக்கிறது. எம்.ஜி.ஆர். என்ற பிம்ப உருவாக்கத்திற்கு பின்னணியில் ஆர்.எம். வீரப்பன் என்பவர் செல்வாக்கு பெற்றவராக இருந்தார். அப்படி திகழும் பலரை இந்நூல் அடையாளம் காட்ட மறுக்கிறது.
வெகுஜன அரசியல் மீது பழி போடுவதன் மூலமும், தி.மு.க.வுடன் த.வெ.க.வை ஒப்பிடுவதன் மூலமும் விஜயின் நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கும் இந்நூல் அவரைச் சுற்றி இருக்கும் இரண்டாம் கட்ட மனிதர்களைப் பிம்பக் கட்டமைப்புக்குக் காரணமானவர்களாக அடையாளம் காட்ட மறுக்கிறது.
ஜனநாயகத்தின் முதல் தூணான சட்டமன்றத்திற்கும் நான்காவது தூணான ஊடகங்களுக்கும் வரலாறு நெடுக மரபார்ந்த தொடர்பு உள்ளது. 1967 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியில் அமர, சி. பா. ஆதித்தனாரின் தினத்தந்தி உள்ளிட்ட வெகுஜன அச்சு ஊடகங்கள் துணை நின்றதைப் பல்வேறு ஆய்வுகள் சுட்டி காட்டியிருக்கின்றன.
நவதாராளமய யுகத்தில் அந்த ஊடக வெளி ஆக்டோபஸ் போல் விரிவடைந்துள்ளது. மனித வாழ்வில் ரகசியங்களுக்கும் அந்தரங்கங்களுக்கும் துளியும் இடமளிக்காத அளவிற்கு அவை வளர்ச்சி அடைந்துள்ளன. ஊடகங்களின் விளைபொருள் விஜய் என்பதை விட, ஊடகம் இன்றைக்கு மனிதனின் அன்றாட வாழ்வில் செலுத்தும் தாக்கத்தின் வீச்சால் வெகுஜன மக்களைச் சென்றடைய ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே அரசியலர்கள் விரும்புகின்றனர். அதற்கு பொருள் அரசியல் என்பதே ஊடக விளம்பரத்திற்காக இயங்குவதாக ஆகாது. அரசியல் என்பது ஒரு திரையரங்கமாகச் செயல்படுவதாக இருக்கிறது என்று இந்நூல் சமகால அரசியல் மீது வைக்கும் மதிப்பீடு அதீதமானது. உலகம் முழுக்கவே PR என்பது அரசியலின் ஒரு பகுதி தானே ஒழியே அதுவே அரசியல் அல்ல. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் விஜய் போன்றவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வேண்டுமானால் ஊடகங்களே அரசியலாகத் தெரியலாம், அது காட்சி பிழை என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
நவதாரளயுகத்தில் மக்களை மேலாண்மை(New Public Management) செய்ய உருப்பெற்றிருக்கும் வியூக வகுப்பு நிறுவனங்கள் மீதும், அவை வழங்கும் பிரச்சார யுக்திகளின் பின்விளைவுகளையும் இந்நூலின் கடைசி பகுதி கவனப்படுத்துகிறது. அதைப்போலவே, ஊடக கல்வியறிவு திட்டங்கள் தீட்டப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. திரைப்படங்களிடம் சரணடையாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
விஜய் ரசிகரான நூல் ஆசிரியர் இந்நூல் முழுக்க ஆய்வாளராக இருந்து விஜயை அணுக முற்பட்டிருந்தாலும், விஜயின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதே அவரது முதன்மை பணியாக இருக்கிறது. அந்த வகையில் சீர்மை வெளியீடாக வந்திருக்கும் இந்நூலை அறிவுத்தளத்தில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு கேட்டு ஊதப்பட்டிருக்கும் ரசிகத்தனம் நிறைந்த விசில் என்றே கொள்ளமுடியும்.
#TVK #Vijay #Bookreview #JanaNayagan

Comments
Post a Comment