நா முத்துக்குமார் பிறந்தநாள் கடிதம் - - 2
பிறந்தநாள் கடிதம் 2
12/07/2021
எங்கு சென்றார் நா. முத்துக்குமார், கவிதை எழுதியே கண்ணீரை வரவழைத்த கவிஞர். இரவுகளில் எல்லாம் அழுதுகொண்டே கேட்ட பாடல்கள் எல்லாம் அவரது பிறந்தநாள் என்றதும் பின்னணியில் ஒலிக்கிறது. புதிய பாடலாசிரியர்களையும் பிடிப்பதில்லை, பிற கவிஞர்களின் கவிதைகளில் ஏதோ ஒன்று குறைகிறது.
ஒரு மனிதனை இறந்த பிறகு காதலிக்க தொடங்க முடியுமா? முடியும்! அதற்கு நானும் நீங்களும் சாட்சி. கடந்த ஆண்டு எழுதிய கடிதம் வந்தடைந்ததா? இந்த வருடமும் எதுவும் மாறவில்லை, சில மனிதர்களை தவிர .
தோழிக்கு "அனா ஆவன்னா" புத்தகத்திற்கு பதிலாக அணிலாடும் முன்றிலை அனுப்பி வைத்துவிட்டேன். அவளுக்கும் பிடித்திடுக்கும் என்று நினைக்கிறேன், கல்யாண்ஜி,கலாப்ரியா,சாம்ராட் என சில கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கும்போது நடுவில் வந்து நீங்கள் பேசுவது போல் யாரும் பேசுவதில்லை. உங்கள் கவிதையில் பெற்ற உத்வேகத்தில் நானும் "கவிதை என்கிற பெயரில்" சிலவற்றை எழுதி வைத்துள்ளதே உங்களின் அடுத்த பிறந்த நாளைக் குள்ளாவது அதை ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும்.
அவற்றில் சில கவிதைகள் இதோ!
// இப்போதெல்லாம் என் வீடு குப்பைத்தொட்டியில் கூட கவிதை பூக்கிறது, தண்ணீர் ஊற்றாமல் பூக்கும் கவிதைக்கு மணம் அதிகமாம்.
பறவைக்கும் ஏரோபிளான்களுக்கும் அடுத்து காற்றில் உயரமாக மிதக்கும் வரம் நான் எழுதிய பழைய கணக்கு நோட்டின் கிழிந்த பக்கத்திற்கு கிடைத்துள்ளது. என் கணக்கு பறக்கிறது திருத்துவதற்கு யாரேனும் கிடைப்பார்களா என்று.
விட்டு விட்டு பெய்கிறது மழை
நொடி முள்ளும் அப்படிதான்
வாழ்க்கையில் எல்லாம் விட்டு விட்டு தான் நடக்கும் போல்.//
உங்களிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது, கேட்பதற்கும் தான். ஆனால் நான் சொல்வதை கேட்பதற்கும், கேட்பதை சொல்வதற்கும் தான் நீங்கள் இல்லை.
இந்த கடிதத்திற்கேனும் பதில் வருகிறதா என்று, அடுத்த பிறந்தநாள் வரை காத்திருக்கிறேன், வரவில்லை என்றாலும் கவலை இல்லை உங்கள் கவிதையும் ,பாடல்வரியும், கதைகளும் உரையாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள் தினம் தினம் என்னுடன்.
பேரன்புடன்
கெளதம்
Comments
Post a Comment