Ambedkar's Preamble - Book Review

Ambedkar's Preamble - Book Review





 ‘The Constitution which has been given to this country is a wonderful document’ - DR B R AMBEDKAR


  “சட்டத்தின் சட்டைக்கு மூளை கொடுத்தவன்” என்று கவிஞர் யுகபாரதி அம்பேத்கரை பற்றிய பாடலில் எழுதியிருப்பார்.  அந்த வரிகள் அவ்வளவு உண்மைத்தன்மை கொண்டவை. இந்த புத்தகம் அதற்கு மாபெரும் சாட்சி. 


இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்ட வரைவின் தலைவராக இருந்தவர் பாபாசாஹேப், ஆனால் சட்ட புத்தகத்தின் முகப்பிற்கு[Preamble] நேருவின் பங்களிப்பு அதிகம் என்பது பொதுப்புத்தி, சில ஆய்வாளர்களும் இதையே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நூல் அந்த கருத்தை உடைத்து அம்பேத்கரின் பங்களிப்பை வீரியமாக போதிய ஆதாரங்களுடன் விளக்குகிறது. 


நூல் முழுக்க பல இடங்களில் அம்பேத்கரின் உழைப்பையும்,அறிவு நாணயத்தையும்,வார்த்தை பயன்பாட்டையும்  எண்ணிப்பார்த்து மயிர்சிலிர்ப்படைந்தேன். ஒருவொரு வாசகனுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என நம்புகிறேன். 


புத்தகம் முழு அரசியல் அமைப்பு சட்ட முகப்பையும் அலசாமல் 6 சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் அம்பேத்கரின் தாக்கத்தையும், அந்த சொற்கள் உருவான வரலாறையும் விளக்குகிறது. JUSTICE, LIBERTY, EQUALITY, FRATERNITY, DIGNITY, NATION இவை தான் அந்த ஆறு சொற்கள், சட்ட முகப்பிலேயே  சக்திவாய்ந்த ஆறு சொற்கள் என்று இவற்றை கூறலாம், இதன் பின் உள்ள வரலாறும், உழைப்பும் அதை நியப்படுத்தும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 



“JUSTICE” என்ற வார்த்தை மற்றும் அதனை தொடர்ந்து வரும் social,economic and political இவை அனைத்தும் தான் அம்பேத்கர் தனது வாழ்க்கையில் தேடியவை, இந்த சமூக பொருளாதார அரசியல் நீதியை சுற்றி தான் அவரின் வாழ்க்கையே சுழன்றது எனலாம். வாழ்க்கை முழுக்க இந்த நீதிக்காக அவர் எவ்வளவு வருந்தினார் என்பது அண்ணலின் "விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்ற நூலை படித்தால் புரியும்.


LIBERTY இந்த சொல் நிச்சயம் நேருவின் சிந்தனையிலோ அல்லது  BN RAU விடமிருந்தோ உதித்தது கிடையாது. இதன் பின்னே ஒரு வரலாறு உள்ளது, பிரெஞ்சு புரட்சி, புத்தர், காந்திய எதிர்ப்பு,சாதியிலிருந்தும் ஆதிக்கித்திலிருந்தும் விடுதலை போன்ற பல வரலாற்று படிமங்களின் காரணமாய் இந்த வார்த்தையை நேரு பரிந்துரைத்த “FREEDOM”க்கு பதிலாக பயன்படுத்தினார். காந்தியின் “Swaraj i.e freedom”  சாதிய வாதம் நிறைந்த தேசத்தின் பொருளாக தான் விளங்கும் ஆனால் அதற்கு பதிலாக “LIBERTY” என்ற புரட்சிகர வார்த்தை பயன்பாடு என்பது சாமர்த்தியமான அறிவு கூர்மையின் வெளிப்பாடு. 


“EQUALITY” பார்ப்பனியத்திற்கு  எதிராக நடத்தப்பட்ட அறிவு போர் தான் இந்த சமத்துவம், அம்பேத்கரின் நிறுவடையாத புத்தகமான  “Revolution and counter-revolution” என்ற நூலின் அடிப்படை பௌத்தம் vs பார்ப்பனீயம், பௌத்தம் ஆதிக்கத்தை எதிர்த்து சமத்துவத்தை நிறுவியது. இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு  ஒரு மதம் செய்த புரட்சி மட்டும் அல்ல மாபெரும் சமூக புரட்சி என்கிறார் அம்பேத்கர்.


“FRATERNITY”  சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை விட முக்கியம் சகோதரத்துவம் தான் என்கிறார் அம்பேத்கர், ஒன்று இல்லாமல் பிற இரண்டும் இயங்கவோ பொருள்தரவோ இயலாது. சாதி என்ற பெருநோய் மக்களிடையே இந்த சகோதரத்துவத்தை முற்றிலும் குழைத்து விட்டது, இந்தியர் என்ற மாய ஆடையாளத்திற்குள் ஒன்றாக வேண்டுமானால் அன்பு நிறைந்த சகோதரத்துவம் அவசியம்.


“DIGNITY” இந்த சொல்லை "மரியாதை" என்பதை விட "சுயமரியாதை" என்ற அர்த்தத்தில் தான் உணர வேண்டும். இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தை படித்தால் இதன் அர்த்தம் விளங்கும் “Fraternity, assuring the dignity of the individual and the unity of the Nation.” எந்த அடையாளங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதரத்துவம் நிறைந்த  சுயமரியாதை அவசியம் என்பதை இந்த வார்த்தையின் மூலம் உறுதியாகியுள்ளார் அண்ணல்.


“NATION”, அம்பேத்கருக்கு இந்த வார்த்தையை பயன்படுத்த பெரியளவில் உடன்பாடில்லை,காரணம் தேசியம் என்ற சொல்லை அவர் உள்வாங்கியிருந்த விதம். சாதியால் பிளவுபட்டு கிடக்கும் சமூகம் எப்படி ஒரு தேசமாக முடியும் என்பது தான் அண்ணலின் கேள்வி. ஆனால் என்றைக்கு சுதந்திரம்-சமத்துவம் சகோதரத்துவம்-சுயமரியாதை அனைத்தும் உறுதிசெய்ய படுகிறதோ அன்றைக்கு இந்தியா ஒரு ஒற்றுமை நிறைந்த தேசமாக உருவெடுக்கும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்ததனால் இவை எல்லாவற்றிற்கும் பிறகு கடைசியாக  “unity of the Nation” என்ற வாக்கியத்தை பயன்படுத்தி இருப்பார். 



நான் கூறிய செய்திகள் அனைத்தும் புத்தகத்தின் ஒரு சதம் தான் படிக்க படிக்க பல புதிய தகவல்கள் வியப்பூட்டும்  களஞ்சியமாக கொட்டி கிடைக்கின்றன. பலர் அரசியலமைப்பு சட்டத்திற்கு உரிமைகொண்டாடினாலும், அதில் இடம்பெற்றிற்கும் இந்த ஆறு வார்த்தைகள் அம்பேத்கரின் வாழ்க்கையின் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவை, காந்தி தன் வாழ்நாள் முழுவதும் பகவத் கீதையை தூக்கி சுமந்தார், ஆனால் அண்ணலோ இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை மட்டும் உறுதியாக நம்பினார்.  


அரசியலமைப்பு சட்டத்தில் மதம்,கடவுள்  சார்ந்த கருத்தோ அல்லது தனிநபர் புகழ்ச்சியோ இடம்பெறாமல் தவிர்த்ததற்கு அம்பேத்கர் முக்கிய காரணம், காந்தியின் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த கிராமங்கள் இந்த சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்டன. பார்ப்பனிய மனுநீதியை எதிர்த்து அண்ணல் எழுதிய மானுடநீதி தான் இந்த அரசியல் அமைப்பு சட்டம். இந்தியா தொடரவேண்டுமானால் இந்த அரசியலமைப்பு சட்டம் தொடரவேண்டும். 70 ஆண்டு காலம் வெற்றிகரமாய் ஒரே தேசமாய் விளங்கிதற்கு காரணம் இந்த சட்டமும் சட்ட முகப்பும் தான் என்பதை உறுதியாக கூற முடியும்.


இந்த ஆண்டு நான் புனைவு அபுனைவு உட்பட மொத்தம்  65 புத்தகங்கள் வாசித்துள்ளேன்,அனைத்தும் தேர்ந்தேடுத்து படித்தவை அதிலும் சிறந்த புத்தகமாக இதை கூறுவேன். 


இருட்டடிப்பு செய்யப்பட்ட அம்பேத்கரின் உழைப்பு இது போன்ற புத்தகங்களின் மூலம் வெளிக்கொண்டுவர படவேண்டும் என்பது எனது ஆசையும்,கோரிக்கையும்.  


இதனை சிறப்பான முறையில் எழுதிய AAKASH SINGH RATHORE அவர்களுக்கு மகிழ்ச்சியும் அன்பும்! 


இந்த கட்டுரையை வாசித்த தோழர்கள் அரசியலமைப்பு சட்ட முகப்பையும் எடுத்து வாசித்து விடுங்கள்,அது தரும் உணர்வே தனி!


BOOK: Ambedkar's Preamble A secret history of the Constitution of India


AUTHOR: Aakash Singh Rathore. 


#must_read







Comments