பேட்டை நாவல் - ஒரு அறிமுகம்.
சார்பட்டா பார்க்கும் முன்பே தமிழ்ப்பிரபா எழுதிய “பேட்டை” நாவலை படித்து விட வேண்டும் என்று தொடங்கினேன் நேற்று தான் முடிக்கமுடிந்தது. 380 பக்க நாவல் என்பதால் நேரம் கூடுதலாக தேவை பட்டது. சென்னையை மையமாக வைத்து நகரும் கதைக்களத்தில் ஒரு புத்தகம் படிப்பது எனக்கு இது தான் முதல் முறை. சென்னை அழகு தமிழ் படிக்க படிக்க ஒரு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்டுசெய்தது.
வரலாற்று அறிமுகத்துடன் தான் தொடங்குகிறது இந்த நாவல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடந்தேறியது, எப்படி சிந்தாதிரிபேட்டை உருவானது, அங்கு பின்னாளில் எப்படி சாதி ரீதியிலான தெருக்கள் உருவானது என்பதை விளக்கமாகவே எழுதியுள்ளார்.
கதையின் நடுவில் சில தொய்வுகள் இருந்தாலும், கதை களமும் அதில் வரும் மனிதர்களும் நம்மை பிடிப்புடனும் ஈடுபாட்டுடனும் வைத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.
இந்த கதை எழுத்தாளரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் வைத்து எழுதிய ஒன்றாக தான் தெரிகிறது,"பெரும்பாலும் முதல் நாவல்கள் எழுத்தாளனின் வாழ்க்கையை பற்றியதே" என்று வரும் வசனம் அதை உறுதிப்படுத்துகிறது.கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையை தன்மை கொண்டாவையாகவும் புனைவு தன்மை குறைந்து காணப்படுவதும் அந்த வாதத்திற்கு வலு சேர்கிறது. எளிய மக்களின் வாழ்வியலை பேசுவது, அவர்களை புரிந்துகொள்ள உதவும் என்றே நினைக்கிறேன்.
மேலும் சார்பட்டா படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒத்துப்போகிறார்கள், குறிப்பாக டாடி, ரெஜினா போன்ற துணை கதாபாத்திரங்களின் சாயல் படத்திலும் தென்படுகிறது.
எழுத்து நடை, கதை சொல்லும் விதம், நடுநடுவே வரும் இலக்கிய மேற்கோள்கள் எல்லாம் இதனை ஒரு நல்ல நாவலாக மாற்றியள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
Author: தமிழ்ப்பிரபா
Publisher: காலச்சுவடு
Comments
Post a Comment