ராஜமன்னார் குழு அறிக்கை ஒரு பார்வை!
ராஜமன்னார் குழு அறிக்கை ஒரு பார்வை!
19 ஆகஸ்ட் 1969 சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது, மாநில அரசின் அதிகாரங்களை அதிகரிக்க ஓய்வு பெற்ற நீதி அரசர் திரு ராஜமன்னார் தலைமையில் மூன்று நபர் குழு ஒன்றை அறிவிக்கிறார்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர். இப்படி நடப்பது இந்தியாவில் அது தான் முதல் முறை, டெல்லி சென்ற கலைஞரிடம் இந்த குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சொன்னது,” ஒன்றிய அரசின் சிரமங்களை அதிகார பகிர்வின் மூலம் தான் சரிசெய்ய முடியும் அதற்கு இத்தகைய குழு அவசியமான ஒன்று தான்” என்றார். இந்த குழு அறிக்கை கலைஞருக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது(Tribute). அவரின் தொலைநோக்கு பார்வையையும் இந்தியவின் கூட்டாட்சியின் மேல் அவர் கொண்டிருந்த அக்கறையையும் சுட்டிக்காட்டி இதை கலைஞருக்கு சமர்ப்பித்துள்ளார்திரு. ராஜமன்னார்.
Dr. PV. Rajamannar
சுயமரியாதையின் நீட்சி தான் மாநில சுயாட்சி, மாநிலங்கள் ஒன்றியத்தின் அடிமைகள் போல் நடத்தப்படாமல் இருக்க அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதும், அண்ணாவின் நீண்ட நாள் கோரிக்கையான அரசியலை அமைப்பு சட்டத்தை மறுஆய்வுக்குட்படுத்தி திருத்தங்கள் செய்வதும் ஆகிய இரண்டின் விளைவாக அமைக்கப்பட்டது தான் இந்த குழு. மேலும் இந்த குழு ஒன்றிய அரசின் வயிற்றில் புளியை கரைத்தந்து என்பதற்கு 1976 இல் நடந்த ஆட்சிக்கலைப்பு ஒரு சாட்சி. அந்த ஆட்சி கலைப்புக்கு ராஜமன்னார் குழு அறிக்கையும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த குழு சில கேள்விகள் மற்றும் பரிந்துரைகளை பிற மாநில முதல்வர்களுக்கும், தலைமை செயலருக்கும் இந்தியாவில் உள்ள மற்ற முக்கிய தலைவர்களுக்கும்(காங்கிரஸ் தலைவர்கள் உட்பட) அனுப்பிவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிக்கை வெளியான பிறகு இதில் உள்ள சில கோரிக்கைகளை திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை கொள்கையில் இணைக்க இரா.செழியன் மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் தலைமையில் திமுக ஒரு குழுவும் அமைத்தது. இதற்கு பிறகு தான் மாறன் அவர்கள் "மாநில சுயாட்சி" என்கிற புத்தகத்தை எழுத தொடங்குகிறார். ராஜமன்னார் குழு ஏற்படுத்திய தாக்கம் மிக பெரியாதது என்பதற்கு இந்த இரு நிகழ்வுகளும் சாட்சி. ராஜமன்னார் குழு அறிக்கை என்பது அதிகார மையப்படுத்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு அமைதி போர் என்று சொன்னால் அது மிகையல்ல .
1967ல் தான் முதல்முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வருகிறது, அதற்கு முன் வரை பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் அரசு தான் ஆட்சியில் இருக்கிறது ஒன்றியத்திலும் காங்கிரஸ் ஆட்சி தான், இதன் விளைவாக மாநில அரசுகள் தங்களின் உரிமை குரலை பெரிதாக எழுப்பவில்லை, ஒன்றிய அரசு கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியா இருந்தன, மேலும் மையப்படுத்தப்பட்ட திட்டக்குழு இந்த சுயாட்சி கோரிக்கை எழுவதற்கு பெரும் தடையாக இருந்தது. 1967க்கு பிறகு காட்சிகள் மாற தொடங்கின, இன்று பல்வேறு மாநில அரசுகள் உரிமை குரலை எழுப்ப தொடங்கியுள்ளன, 1970களை ஒப்பிடுகையில் தற்போது கல்வி உட்பட பல்வேறு அதிகாரங்களை ஒன்றிய அரசு அபகரித்து வைத்துள்ளது, ராஜமன்னார் அறிக்கை தூசி தட்டி எடுப்பதற்கான காலமும் சூழலும் மீண்டும் அமைந்துள்ளதது எனலாம்.
ராஜமன்னார் குழுவில் கூறியுள்ள சில முக்கிய அம்சங்களை இங்கே குறிப்பிடுகிறேன் .
Inter-state council ஒன்று அமைக்கப்பட வேண்டும், அதில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அல்லது அவர்களின் சார்பாக யாரேனும் ஒருவர் இடம்பெறவேண்டும், மேலும் இந்த அமைப்பின் தலைவராக ஒன்றியத்தின் பிரதமர் தான் இருக்க வேண்டும், பிற அமைச்சர்களுக்கு இந்த அமைப்பில் இடம் தாரா கூடாது என்பது குழுவின் பரிந்துரை, மேலும் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து சட்ட வரைவுகளும் இந்த அமைப்பின் பரிந்துரைகளை பெற்ற பின் தான் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். வெளியுறவு கொள்கை ராணுவம் சார்ந்த விசயங்கள் தவிர்த்து பிற சட்ட திருத்தங்கள் மற்றும் வரைவுகளுக்கு இந்த சபையின் பரிந்துரைகள் கேட்கப்பட வேண்டும். (1990 களில் அப்படி ஒன்று அமைக்கப்பட்டது அது எப்படி செயல்படுகிறது என்பதற்கு அதன் வலைதள பக்கம் ஒரு சாட்சி. Interstatecouncil.nic.in )
ஒரு High profile குழு அமைத்து Union list & Concurrent list இல் உள்ள மிகையான அதிகாரங்களை மாநிலங்களுக்கு பரிமாறப்பட்ட வேண்டும், தேவையில்லாத சில அதிகாரங்கள் நீக்க பட வேண்டும். மாநில அரசு உரிமைகளை மீறும் வகையில் எந்த சட்டமும் இயற்ற ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை, மேலும் ஒன்றிய அரசின் சட்டங்களை திருத்தவும் அவற்றை நிராகரிக்கவும் மாநில சட்டமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
பொருளாதார உறவுகளில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகமாகியுள்ளது எனவே அவற்றை சரியான வகையில் பகிரப்படுவதற்காக ஒன்றிய அரசின் முக்கிய வரிகளான Corporate Tax, customs and export duties, tax on capital values of assets போன்றவை எல்லாம் Divisible poolக்கு கொண்டுவரப்பட்டு மாநிலங்களுக்குபகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
Planning Commission என்பது துறை சார் நிபுணர்களை மற்றும் அறிவுஜீவிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாக இருக்கவேண்டுமே ஒழிய அரசின் தலையீடு அதில் இருக்க கூடாது, மேலும் திட்டமிடல் குழுவில்(Planning commission) இருக்கும் ஒருவர் நிதி குழுவில்(Finance commission) இடம்பெற வேண்டும், அவர்களின் பரிந்துரையின் பெயரில் தான் நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். (இப்போதுPlanning Commission என்பது NITI aayog என்று பெயர் மாற்றப்பட்டது மேலும் அதற்கு தலைவராக பிரதமர் தான் செயல்படுகிறார்)
நீதி துறையை பொறுத்தவரை Civil & Criminal வழக்குகளை எல்லாம் மாநில உயர்நீதிமன்றங்களே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும், அவை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் பட்சத்திலோ அல்லது ஒன்றிய அரசு சட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்திலோ உச்சநீதி மன்றம் தலையிடலாம் , மேலும் நீதிபதிகளை அடிக்கடி இடம்மாற்றும் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
மாநில அமைச்சரவையின்(Cabinet) ஆலோசனைக்கு பிறகு தான் ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும், மேலும் ஆளுநர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது அமைச்சரவையின் ஆலசோனைகளுக்கு கட்டுப்பட்டு தான் ஆளுநர் இயங்கவேண்டும். Article 239(2) போன்ற சில அதிகாரங்களை தவிர மற்ற அனைத்து முடிவுகளும் அந்த மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டு தான் எடுக்கப்படவேண்டும்.
சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி Emergency அமலாகும் முன் மாநில சட்டமன்றத்தின் பரிந்துரையை குடிஅரசு தலைவர் கேட்கவேண்டும். தேசிய அளவிலான எமெர்ஜெண்சியை அமல்படுத்த Inter-State Council உடனான அலசோனைக்கு பிறகு தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் Article 365,356,357 ஆகியவை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்க பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களே UPSCயின் வழிகாட்டுதலின் படி நடத்திக்கொள்ளலாம், மேலும் அவை ஒன்றிய அரசின் தேர்வு என்பதால் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட வேண்டும். Article 312இல் திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும் புதிய அகில இந்திய பணிகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அதன் எல்லைகளை பிரிப்பதோ, வகுப்பதோ, பெயரை மாற்றம் செய்வதோ கூடாது. மேலும் அந்த பிரிப்புக்கான நியாயங்களை ஆய்வு செய்ய தனியாக ஒரு தீர்ப்பாயம்(Tribunal) அமைக்கப்பட வேண்டும், அந்த மாநில மக்களின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு தான் மாநில எல்லை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
மாநிலங்களவையில்(council of states) அந்தந்த மாநிலங்களுக்கும் சம அளவில் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும், நியமன(Nomination of MPs) முறை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். 1951 இருந்த அளவிலேயே மக்களவை உறுப்பினர் எணிக்கை இருக்கவேண்டும், மக்கள்தொகை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதற்கேற்ப எணிக்கையை உயர்த்தி வழங்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மக்களவை உறுப்பினர்களின் எணிக்கையை குறைக்க கூடாது.
மக்களவை உறுப்பினர்கள் அவர்களின் விருப்பப்படி ஆங்கிலத்திலும், அல்லது 8ஆம் அட்டவணையில் உள்ள மொழிகளிலும் பேசும் உரிமை அளிக்கப்படவேண்டும். ஒன்றிய-மாநில அரசுகள் மற்றும் மாநில-மாநில அரசுகளுக்கு இடையான இணைப்பு மொழியாக ஆங்கிலமே பயன்படுத்தப்படவேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்படவேண்டும். மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களில் அந்தந்த மாநில அரசின் அலுவல்(Official) மொழியில் தான் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற வேண்டும், ஒன்றிய அரசின் அதிகாரிகளுக்கும் அந்த மாநில மொழி தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
எக்காரணத்தை கொண்டும் மாநில அரசின் அனுமதியின்றி CRPF பயன்படுத்தப்பட கூடாது, மாநிலங்களின் ஒப்புதலுடனோ அல்லது கோரிக்கையின் பெயரிலோ அவர்களை அனுமதிக்கும்வகையில் Article 355 திருத்தம்செய்யப்பட வேண்டும்.
ஒன்றிய அரசின் அமைச்சரவையில்(Union Cabinet) அனைத்து மாநில பிரதிநிதிகளும் இடம்பெறும் வகையில் ஒரு கொள்கையை வகுக்கவேண்டும். அந்தந்த மாநில உறுப்பினர்களின் எணிக்கையில்(MP) ஐந்தில் ஒரு பங்கு தான் அமைச்சர்கள் இடம்பெற வேண்டும். அனைத்து பகுதி மக்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் ஒரு அமைப்பாக தான் ஒன்றிய அமைச்சரவை இருக்கவேண்டும் என்ற பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.
இவை எல்லாம் சில முக்கிய பரிந்துரைகள், இது தவிர்த்து துறை வாரியாக அனைத்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் சட்ட துறை நிபுணர்கள் என்பதால் பிற அரசியல் அமைப்பு சட்டங்களோடு ஒப்பிட்டும் அவற்றை எடுத்துக்காட்டாக கூறியும் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள்.
1990 களில் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு ஒன்றிய-மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறை செய்ய அமைக்கப்பட்டது, அதிலுள்ள சில பரிந்துரைகள் ராஜமன்னார் அறிக்கையை அடிப்படையாக கொண்டது தான்.
(Refer http://interstatecouncil.nic.in/report-of-the-sarkaria-commission/)
மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிந்துரைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டிருப்பின் எமெர்ஜென்சியை தடுத்து இருக்கலாம், மாநிலங்கள் இன்னும் வேகமாக வளர்ச்சியை சந்தித்திருக்கும் , உலகம் முழுக்க அதிகார பரவலாக்கம் வேகமாக(Rapid decentralization) நடந்து வரும் இத்தகைய சூழலில், அரசியலமைப்பு சட்டத்தை மீளாய்வு செய்ய ஒரு குழு அமைத்து ஒன்றிய- மாநில அரசு இடையே உள்ள அதிகார போதாமையை/ ஏற்றத்தாழ்வை தீர்க்க முன்வர வேண்டும்.
மாநில சுயாட்சி என்பது மாநில மக்களின் சமூக-பொருளாதார காரணிகள் மட்டும் மனிதவள குறியீடுகளில்(HDI) முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் எழும் கோரிக்கை என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். மீண்டும் மீண்டும் சுயாட்சி கேட்பவர்களை பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்திக்கொண்டே இருந்தால் இந்தியா ஒருநாளும் வளரவே வளராது என்பது தான் நிதர்சனம்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும் !
மலர்க மாநில சுயாட்சி !
வாழ்க தமிழ் !
வளர்க பகுத்தறிவு !
Comments
Post a Comment