முரசொலி மாறன் - Book Review

"முரசொலி மாறன்" க. திருநாவுக்கரசு - Book Review



ஒரு அறிவியக்கத்தின் போக்கில் சில நபர்களின் இழப்பு என்பது ஈடு செய்யமுடியாத ஒன்றாகும், அந்த வெளியை நிரப்ப மற்றுமொரு ஆளுமை கிடைப்பது அரிதினும் அரிது. திராவிட இயக்கத்துக்கு அத்தகைய பேரிழப்பாக நான் கருதும் சிலரில் முரசொலி மாறன் அவர்கள் முக்கியமானவர் . 69 வயதில் இயற்கை எய்தினார். இன்னும் 20  ஆண்டு காலம் வாழ்திருப்பின் இந்த இயக்கத்தின் போக்கு இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும். 


அவரின் மறைவு கலைஞருக்கும் பெரிய இழப்பாக இருந்தது என்றும், அதன் பிறகு கட்சிக்குள் ஒருவித நிலையற்ற தன்மை நிலவியதையும் சமீபத்தில் வெளியான “Karunanidhi A life” என்ற புத்தகத்தில் திரு. A.S. Panneerselvan பதிவு செய்கிறார். 




கலைஞரை முன்னோடியாக கொண்டு சிறுவயது முதலே இயக்கத்துக்காக எழுத தொடங்கியவர், மக்கள் தொடர்பில் பெரியஅளவுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், திமுக கொள்கை  பாசறையை செதுக்கியதில் மாறனுக்கு பெரும்பங்குண்டு, பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். முரசொலியில் ஆசிரியராக பல ஆண்டு காலம் தீவிரமாக இயக்கியுள்ளார். 


இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் சமயங்களில் தொண்டர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள முரசொலியில் சிறந்த தலையங்கங்களை தீட்டியவரும் இவரே. 1967ல் அண்ணா நின்று வெற்றிபெற்ற தென் சென்னை மக்களவை தொகுதிக்கு(அண்ணாவின் ராஜினாமாவுக்கு பிறகு ) நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வென்றவர் மாறன் தான். அந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணா இவ்வாறு கூறியிருப்பார் "மாறனை பார்க்கிற போது டெல்லியில் உள்ளவர்களுக்கு மாறன் தெரியமாட்டார் - என் நினைவு தான் வரும்". அண்ணாவின் இந்த நம்பிக்கையை கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் காப்பாற்றியிருப்பர்.



 தோஹா மாநாட்டில்(Doha conference) அவர் ஆற்றிய அந்த உரையிலும் அதன் மூலம் ஏற்பட்ட ஒப்பந்ததின் மூலமும் தான் இன்று வரை வளரும் நாடுகளில்(Developing countries) வர்த்தக துறை நிலையான ஒன்றாக இருந்து வருகிறது. 


அவரின் படைப்புகள் எல்லாம் மிகுந்து கருத்தாழம் மிக்கவை, திராவிட நாடு கோரிக்கை உச்சத்தில் இருக்கையில் மாறன் அவர்கள் முரசொலியில் எழுதிய "ஏன் வேண்டும் இன்பத்த திராவிடம்" என்னும் தொடர் அப்படிப்பட்ட ஒன்று தான். Mazzini, Nehru, Ambedkar என பலரது எழுத்துக்களை மேற்கோளிட்டு எழுதி இருப்பார். 


ராஜமன்னார் குழு அறிக்கை வெளியான பிறகு, அதை அடிப்படையாக வைத்து திமுகழகம்  இரா.செழியன் மற்றும் மாறன் ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்து சில பரிந்துரைகளை கட்சி கொள்கையில் இணைத்திருக்கும். இதன் பிறகு தான் மாறன் அவர்கள் "மாநில சுயாட்சி" என்னும் பேராயுதத்தை எழுதி இருப்பார், இரண்டாண்டுகள் உழைப்பின் வெளிப்பாடு தான் அந்த புத்தகம்.


 பிறகு மிசா சமயத்தில் சிறையில் இருக்கும்போது இவர் எழுத தொடங்கிய புத்தகம் தான் "திராவிட இயக்க வரலாறு", 1912-1920 வரை நடந்த நிகழ்வுகளை மட்டும் முதல் பகுதியாக எழுதி வெளியிட்டிருப்பார், அதற்கு அவர் கூறிய காரணம் திராவிட இயக்கத்தின்  தோற்றத்துக்கும் தி.க- திமுக பிரிவுக்கும் இடையிலான வரலாறை ஆவணம் செய்யவேண்டும் என்பது தான், பெரியார் காங்கிரசிலும், அண்ணா மாணவனாக இருந்த சமயத்தில் திராவிட இயக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை பதிவுசெய்யும் நூலாக இது இருந்தது, மீதி வரலாறு மாறனால் எழுதப்படுவதற்கு முன்பே அவரின் மறைவு ஏற்பட்டு விட்டது. 


அவர் வாழ்ந்த காலத்தில் இயக்கத்துக்கு தன்னாலான அறிவுசார் பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது தான் அவர் வாழ்க்கையில் இருந்து நாம் அனைவரும் கற்க வேண்டிய பாடம். அவரின் படைப்புகளை வாசிக்க தொடங்கினால் மாறன் உங்களையும் கவர்ந்து விடுவார். 


அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம், நூலில் பின்  இணைப்பாக மாறன் அவர்கள் எழுதிய "இந்தி என்றால் என்ன?" என்ற ஆய்வு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. 


இந்த சிறு நூலை எழுதி வெளியிட்ட அய்யா க. திருநாவுக்கரசு  அவர்களுக்கு அன்பும் நன்றியும். 


BOOK: முரசொலி மாறன் 

AUTHOR:க திருநாவுக்கரசு 



A must read. 

 


Comments