Karunanidhi A Life - AS Paneerselvan.

KARUNANIDHI A LIFE - AS PANEERSELVAN




  1967 -சட்டமன்ற தேர்தலில்  திமுக வென்றதில் இருந்தே இந்திய தேசிய அரசியல் தமிழகத்தை குறிவைக்க தொடங்கி விட்டது, அதற்கு முன்பே திமுகவின் வளர்ச்சி பல ஆதிக்க சக்திகளின் வயிற்றில் புளியை கரைத்தது என்பதை EVK.சம்பத்தின் திடீர் பிரிவை வைத்து புரிந்து கொள்ளலாம்[அவர் அப்போது நாடளுமன்ற உறுப்பினர்] . கிட்டத்தட்ட 50  ஆண்டுகள் கலைஞரை சுற்றி தான் இந்திய அரசியல் நிகழ்ந்தது என்றால் அது மிகையாகாது . இந்திய ஒன்றிய அரசியலில் எந்த பிரச்னைகளானாலும் சரி அதை சுமூகமாக தீர்ப்பதில் கலைஞரின் பங்கு மிகப்பெரியது. 


கலைஞரை பற்றி இதுவரை வெளிவந்த புத்தகங்களில் மிக சிறந்த புத்தகமாகவும் ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஊடகவியலாளர்திரு  AS Paneerselvan அவர்கள் எழுதிய “KARUNANIDHI- A LIFE” இருக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். கிட்ட தட்ட 30 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு தான் இப்புத்தகம். கலைஞரின் பல மேற்கோள்கள், சிக்கலான முடிவுகளுக்கு பின்னால் இருந்த புரிதல்கள் என தெளிவான பதில்களை படிக்கையில் நமது  முன்முடிவுகள் சுக்குநூறாக நொறுங்குகிறது. தேர்தல் சமயத்தில் இந்நூலை வெளியிட்ட அவருக்கு நன்றி.


ஈழம், தேசிய ஜனநாயக கூட்டணில்(NDA) அங்கம் , சர்க்காரியா கமிஷன், ஜெயின் கமிஷன், 2G என பல்வேறு சிக்கலான நிகழ்வுகளில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு மற்றும் அதை அவர் கையாண்ட விதம் என தெளிவான பார்வையை இந்நூல் வாசகனுக்கு விட்டு செல்கிறது. 


ஒரு தலைவனின் வாழ்க்கை வரலாற்றை இதை விட சிறப்பாக பதிவு செய்திருக்க முடியாது. "அகம்-புறம்" என்ற சங்க இலக்கிய தொனியில் நூல் அமைந்துள்ளது. அகம் சார்ந்து தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை உணர்ந்து அதற்கான தீர்வை கண்டெடுத்து அதை புற சூழலுக்கு ஏற்ப நல திட்டங்களாகவும் தீர்வுகளாகவும் செயல்படுத்தியர் கலைஞர் ஒருவர் தான். 


 அடித்து சாக்கடையில் வீசப்பட்ட போதும், மனைவியின் இறுதி நாட்களில் உடனிருக்க முடியாமல் போனபோதும், ஒரு கண்ணில் அடிபட்டு வலியில் துடித்த போதும் அவர் இயக்கத்துக்காக உழைத்தார். பேச்சாலும் எழுத்தாலும் ஒரு மாபெரும் படையை தயார் செய்தார். 


இதை தாண்டி திரைத்துறையிலும் இலக்கிய துறையிலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தவர்,அந்தந்த  துறையின் பரிணாமவளர்ச்சிக்கேற்பு தன்னை தகவமைத்துக்கொண்டவர். எந்த துறையானாலும் அதை சவாலாக எடுத்துக்கொண்டு பணியாற்றியவர். அவரின் திரை துறை செயல்பாடுகளும் அந்தந்த காலகட்டத்துக்கேற்ப எப்படி உருமாறியது என்பதையும் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.


"கொள்கையில் உறுதியாக இருந்தால் யாரோடு சேர்ந்தாலும் அழிந்துபோக மாட்டோம்" என்று பேரறிஞர்  அண்ணாவின் பொன்மொழி ஒன்றுள்ளது. கலைஞர் அமைத்த அத்துணை கூட்டணிகளும் அப்படிப்பட்டவை தான், குறைந்தபட்ச பொது செயல்திட்டம்(Common minimum program) என்பது அணைத்து கூட்டணியிலும் அவர் கடைபிடித்தார் அதற்கு அண்ணா வகுத்துத்தந்த பாதை தான் முதன்மை காரணம். 

ஜனாதிபதி பதவி பிரதமர் பதவி என பல பதவிகள் தன்னை தேடி வந்த போதும் "என் உயரம் எனக்கு தெரியும்" என்று கூறி நிராகரித்தவர். 7  பிரதமர்களை உண்டாக்கிய “king maker” என்றால் அது கலைஞர் தான். 


அவரை புகழாத தலைவர்கள்  இல்லை கண்டு வியக்காத பகைவர்கள் இல்லை. அவரின் நண்பரான எம்ஜிஆர் கூட கட்சியை உடைத்தபிறகும் கலைஞரை  "ஆண்டவனே" என்று தான் அழைத்துள்ளார். ஆளுமைக்கு எடுத்துக்காட்டு கலைஞர். 


சர்க்காரியா கமிஷன் பற்றி பின்னாட்களில் இந்திரா காந்தி இவ்வாறு கூறுகிறார் "அதிமுக மற்றும் இடதுசாரிகளின் நெருக்கடி காரணமாக தான் அந்த கமிஷனை அமைத்தேன்". திமுகவில் நடந்த நான்கு முக்கிய பிரிவுகளுக்கும்(சம்பத், எம்ஜிஆர்,நெடுஞ்செழியன், வைகோ) பின்னனியில் மத்தியில் ஆளும் அரசு இருந்துள்ளது என்பது நிதர்சனம். 


ஈழம் பற்றிய கலைஞரின் பார்வையை, அண்ணா பெரியாரின் அரசியல் பார்வையோடு ஒப்பிடலாம், பெரியாருக்கு இருந்தது பெருங்கனவு அதாவது maximalist approach. ஆனால் அண்ணாவின் நிலைப்பாடு நடைமுறைக்கு உகந்தது, செயல்படுத்த கூடிய சாத்தியங்கள் அதிகம் பெற்றது. கலைஞரின் ஈழம் பற்றிய பார்வை அண்ணாவின் அரசியல் பார்வை போன்றது. நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்ட தீர்வுகளை அவர் தனது கருத்தாக கொண்டிருந்தார். மேலும் விடுதலை புலிகள்(LTTE), தாங்கள் மட்டும் தான் ஈழ தமிழர்களின் ஒற்றை பிரதிநிதி என்ற போதும் அவர் அதை ஏற்கவில்லை, சக ஈழ விடுதலை  போராட்ட குழுக்களுடன் சண்டை போட்ட விடுதலை புலிகளை "சகோதர யுத்தம்" வேண்டாம் என்று கண்டித்தார். ஒற்றத்துவம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பது கலைஞரின் நிலைப்பாடு. 


ஈழ மக்களின் ஆதங்கங்களை அவர் நன்கு உணர்ந்திருந்தார், அவர்களுக்கான தீர்வுகளை அவர் அடைய முனைந்தார் அவரால் முடிந்த முயற்சிகளை அவர் எடுக்க தான் செய்தார். ஒரு பக்கம் இந்திய அரசியல் கட்சிகள் அவரை விடுதலை புலிகள் சார்பு கொண்டவர் என்று முத்திரை குத்தினார்கள். அதற்கு விலையாக ஆட்சியை இழந்தார், மறுபக்கம் தமிழ் தேசியர்கள் அவருக்கு துரோகி முத்திரை குத்தினர். ஆனால் அவர் எடுத்தது சரியான நிலைப்பாடு, வேறு எவராலும் அத்தகைய சிக்கலை கையாண்டிருக்க முடியாது. கடைசி வரை ஈழ மக்களின் அடிப்படை உரிமைகளை அமைதியான முறையில்  பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கம் மட்டும் அவரிடம் இருந்திவரை இருந்தது. ஈழம் பற்றிய தெளிவான பார்வையை இந்நூல் விளக்குகிறது.


தமிழக அரசியலை நாசப்படுத்தியதற்கு ஜெயலலிதாவின் கொடுங்கோல் ஆட்சி ஒரு முக்கிய காரணம். அதிமுக என்ற கட்சியே தமிழக அரசியலுக்கு ஒரு சாபம் தான், அந்த பயனற்ற ஆட்சியால் தமிழகம் 20 ஆண்டுக்கான வளர்ச்சியை இழந்துள்ளது. இந்துத்துவாவை தமிழக அரசியல் நிராகரித்ததற்கு காரணமாக வேண்டுமானால் அதிமுகவை சொல்லி ஆறுதல் பட்டு கொள்ளலாம். ஒருவர் தொடங்கிய திட்டத்தை முடக்குவது என்ற கேடுகெட்ட அரசியலை தொடங்கியவர் அம்மையார் ஜெயலலிதா தான். தனிமனித காழ்ப்பின் காரணமாக பார்ப்பவரை எல்லாம் கைது செய்து காட்டாட்சி நடத்தியவர். அவர் இறுதி காலங்களில் அதற்கான பலனை அவர் அனுபவித்தார்.  


கலைஞரின் பொது வாழ்க்கையில் முரசொலி மாறனின் இழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதன் பின் ஒரு திடநிலையை(stability) அவரால் அடையமுடியவில்லை. உட்கட்சி அரசியல் முரண்கள், குடும்ப சிக்கல்கள், இதனிடையே மத்திய-மாநில அரசின் நெருக்கடிகள் என தனியாக தவித்த காலகட்டம். அவர் எடுத்த பல முடிவுகள் தோல்வியில் முடிந்தாலும் இயக்கம் தொடர்ந்து இயங்கியது. தொண்டர்கள் அவரை ஒரு நாளும் கைவிட்டதில்லை என்பதற்கு அவரின் தொடர் தேர்தல் வெற்றிகள் சாட்சி. 


நூலின் இறுதி பகுதி வாசிக்கும் அனைவர்க்கும் ஒரு துக்க உணர்வை தரும், உணர்ச்சி கடலில் முழுகடிக்கும்,கண்ணீர் சிந்த வைக்கும் . தனது கடைசி  ஆசையான, அண்ணா அருகில் இடம் வேண்டும், என்பதை கூட அவரால் போராடி தான் பெற முடிந்தது. கலைஞரின் வாழ்க்கை நம்மை போன்றவர்களுக்கெல்லாம் ஒரு உந்து சக்தி. 


இந்த இனத்துக்கான தலைவரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் கொண்டாட தவறிய பல அறிவிலிகளில் நானும் ஒருவன். அந்த குற்றவுணர்வு என்னை துரத்தி கொண்டே இருக்கும். அது துரத்தும் வரை நான் இந்த இயக்கத்துக்காகவும் அதன் கொள்கைக்காகவும் உழைத்து கொண்டே இருப்பேன். அவர் விட்டு சென்ற பணிகளை நாம் அனைவரும் தொடர்ந்து செய்ய வேண்டும்.


இந்த தேர்தல் அதற்கான தொடக்கமாக அமையட்டும். தேர்தல் சமயத்தில் பொய் செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றவும் கலைஞர் மீது சுமத்தப்பட்ட பழிகளுக்கு எதிர்வினை ஆற்றும் விதத்திலும் பல்வேறு செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. உடன்பிறப்புகள் மற்றும் தோழர்கள்  அவசியம் வாங்கி படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். தமிழர் அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டுய புத்தகம் இது. 


இந்நூலை எழுதிய திரு AS Paneerselvan அவர்களுக்கு எனது நன்றிகலந்த  வாழ்த்தும் அன்பும்.


வாழ்க திராவிடம் 

வளர்க பகுத்தறிவு 

வெல்க தமிழ் 



                 Author :AS paneerselvan 




Comments