The other side of silence- Voices from the partition of india

The other side of silence- Voices from the partition of india



 இந்திய வரலாற்றில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை பட்டியலிட சொன்னால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தான் முதலில் சொல்வேன். அது வெறும் நிலத்தை மட்டும் சார்ந்த பிரிவினை போல் தான் வரலாறு காட்சிப்படுத்துகிறது. ஆனால் அந்த சமயத்தில் நடந்த கொடூரங்களை வாசிக்கும் போது நம்மை அறியாமல் ஒரு துன்பம்/சோகம்  தொற்றிக்கொள்கிறது. இந்த புத்தகம் கிட்டத்தட்ட 3 மாதங்களாக படித்து இப்போது தான் முடித்தேன், காரணம் ஒரு கதையை விட்டு இயல்பாக அடுத்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. அது ஏற்படுத்தும் தாக்கம் அத்தகையதாக இருக்கிறது. இதற்கு முன் பிரிவினை பற்றி khushwant singh எழுதிய”Train to pakistan” புத்தகம் மற்றும் மண்டோவின்(Manto) சில கதைகள்  இத்தகைய உணர்வை கொடுத்தது. 


இந்தியா பாகிஸ்தான் எல்லைகள் மனித பிணங்களால் உருவாக்கப்பட்டது என்றே சொல்லலாம், அவை வெறும் கம்பி வேலிகள் போல் காட்சியளித்தாலும் அதன் பின் உள்ள வலிகளை 8  பகுதியில் கண்முன் கொண்டு நிறுத்துகிறார் Urvashi Butalia. 


பிரிவினை பற்றிய வரலாற்றை அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மூலமும், அவர்கள் கூறிய கதைகள் மூலமும் பதிவு செய்கிறார். மேலும் பிரிவினை என்றாலே அது இந்து- முஸ்லிம்-சீக்கியர் ஆகிய மதங்களுக்குள் சுருங்கிவிடும், ஆனால் இந்த புத்தகத்தில் பெண்கள், குழந்தைகள், தலித்துகள், கிறிஸ்தவர்கள் என வறியவர்கள் கதைகளையும் விளிம்புநிலை மக்களின் கதைகளையும் பதிவு செய்துள்ளார். 


பஞ்சாப் எல்லையில் நடந்த ஒரு நிகழ்வை நூலாசிரியர்  இவ்வாறு பதிவு செய்கிறார்,”மேற்கு பஞ்சாப் பகுதியில்  ஒரு எல்லை ஓர கிராமத்தில் பிரிவினை பற்றிய செய்தி வந்ததும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, பல சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், அங்குள்ள ஒரு கிணற்றில் பெண்கள் வரிசையாக குதித்து மாண்டார்கள், காரணம் இஸ்லாமியர்களால் கடத்தி செல்லப்பட்டால்  கௌரவம் கெட்டுவிடும் என்று.” அந்த கிணற்றில் குதித்து இடமில்லாமல் உயிர் பிழைத்த ஒரு சீக்கிய பெண் இவ்வாறு பதிவு செய்கிறார்.


மேலும் பிரிவினை சமயத்தில் கடத்தப்பட்ட பெண்களை மீட்கும் வகையில் இரண்டு நாட்டு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டார்கள், அதன் படி குறிப்பிட்ட காலத்தில் காணாமல் போன பெண்களை மீட்க ஒரு குழு அமைக்க படுகிறது. சில இடங்களில் கடத்தப்பட்ட பெண்கள் அங்கேயே இருக்க ஆசைப்பட்டாலும் வலுக்கட்டாயமாக அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்(பிரிவினைக்கு பிறகு நடந்த பிரிவினை ). மேலும் அந்த பெண்கள் பிரிவினை சமயத்தில் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில் குழந்தையை  யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வியும் எழுகிறது, Constituent assembly விவாதங்களில் இது பேசப்படுகிறது. அப்போது சிலர் தாயிடம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், இன்னொரு தரப்பு ‘எப்படி ஒரு மதத்தை சேர்ந்த குழந்தையை அவர்கள் அனுமதிப்பார்கள் அவர்கள் அந்த குழந்தைகளை கொன்று போடுவதற்கு வாய்ப்பு அதிகம் எனவே அந்த குழந்தைகள் எல்லாம் தந்தையிடம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்றும் சொல்கிறார்கள். இப்படி பல குழப்பமான முடிவுகளும் எடுக்கப்படுகிறது. 


மேலும் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த தலித்துகளுக்கு இருக்க இடம் கூட தரப்படவில்லை. அவர்களை அகதிகள் முகாமிலும் அனுமதிக்க படவில்லை. மேலும் நிலங்களை பகிர்ந்தளிக்கப்படும் சமயத்தில் அவர்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை, பிரிவினைக்கு மூலகாரணமே இந்தியாவில் உள்ள சாதி அமைப்புக்கு தான் என்று ராம் மனோகர் லோஹியா கூறுவார், பிரிவினையின் போதும் அதற்கு பிறகும் சாதியின் கொடூரத்தை அதிகம் தலித் மக்கள் தான் அனுபவித்தார்கள். 


இப்படி பல்வேறு உண்மை சம்பவங்கள் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளது, பல இடங்களில் மனம் சஞ்சலப்படும், சில இடங்களில் கண்ணில் நீர் ததும்பி அடங்கும், பிரிவினையில் இருந்து பாடம் கற்றோமா? என்றால் சந்தேகம் தான். அப்படி பாடம் கற்றிருந்தால் இந்நேரம் 1984 பஞ்சாப் கலவரம், 1992 பாபர் மசூதி இடிப்பும், 2002 குஜராத் கலவரமும் நடந்தேறி இருக்க வாய்ப்பில்லை, மேலும் மதவாத சக்திகள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு குறைவு. பிரிவினையில் இருந்து நாம் இன்னும் பாடம் கற்கவில்லை.


லட்ச கணக்கில் மனித இடப்பெயர்வு நிகழ்ந்தது. வெறுப்பு வன்மம், பகை போன்ற மனித பண்புகள் உச்சத்தை அடைந்து  உயிர்களை கொன்று குவித்த பிரிவினையின் வடுவை இந்தியா-பாகிஸ்தான் தங்களின் வரலாறு முழுமைக்கும் சுமக்கத்தான் வேண்டும் . அதிலிருந்து பாடம் கற்று திருந்தினாலொழிய வேறு வழியில்லை. 


வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசியுங்கள், பிரிவினையில் மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களை பற்றி தெரிந்து கொள்ள முக்கியமான புத்தகம். 


BOOK: The other side of silence- Voices from the partition of india

AUTHOR: Urvashi Butalia


#Do_read

Comments