"The Paradox of India's North-South Divide: Lessons from the States and Regions" Book review
The Paradox of India's North-South Divide: Lessons from the States and Regions
“There is a vast difference between the North and the South. The North is conservative. The South is progressive. The North is superstitious, the South is rational. The South is educationally forward, the North is educationally backward. The culture of the South is modern. The culture of the North is ancient.” - Dr BR Ambekar.
இந்த மேற்கோளை அம்பேத்கர் அவர்கள் மொழிவழி மாநிலங்கள் கோரிக்கை எழுந்த சமயத்தில் தனது புத்தகமான”Thoughts on linguistic states”இல் பதிவுசெய்திருப்பார். இந்திய அளவில் ஆராய்ச்சி தளத்தில், வடக்கு-தெற்கு பிராந்தியங்கள் என்பதை அடிப்படையாக வைத்து வெளிவந்த ஆய்வுகள் குறைவு, அப்படி வெளிவந்திருந்தாலும் அவை ஒப்பிடும் அளவில் இருந்ததில்லை.
வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே 1990களுக்கு பிறகு சமூக-பொருளாதார மற்றும் மனிதவள குறியீடுகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை மேலும் கூர்தீட்டி இருக்கிறது , அப்படி இருக்கும் சமயத்தில் இது எதனால் நடக்கிறது? இதை ஊக்குவிக்கும் காரணிகள் எவை? என்பதை எல்லாம் விரிவாக பேசுகிறது இந்த புத்தகம். கிட்டத்தட்ட 4 வருட ஆய்வுக்கு பின் 2015 இல் வெளிவந்துள்ளது.
இந்த புத்தகத்தின் முக்கியமான அம்சமாக நான் பார்ப்பது வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது, அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தை முதன்மையை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இரண்டும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய மாகாணங்கள்.
புத்தகத்தின் முதல் இரண்டு பகுதி தமிழ்நாட்டிற்கும் உ.பிக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை பட்டியலிடுகிறது. மூன்றாம் பகுதி வடக்கு -தெற்கு மாநிலங்களுக்கிடையே நிலவும் வேற்றுமைகளை சில அடிப்படை கூறுகளை வைத்து விவாதிக்கிறது. இந்த புத்தகத்தின் பலமே அது முன்வைக்கும் தரவுகள் தான். அதிகாரபூர்வ ஆய்வுகளை அடிப்படையாக வைத்து விளக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி பகுதியில் இந்த ஆய்வின் மூலம் எத்தகைய பாடத்தை நாம் கற்கப்போகிறோம், நிறை குறைகளை எப்படி நிவர்த்தி செய்யப்போகிறோம், வட மாநிலங்கள் தென் மாநிலங்களிடம் இருந்து எத்தகைய பாடத்தை கற்க போகின்றன போன்றவை பற்றி எல்லாம் விரிவாக பேசுகிறது.
எந்த ஒரு அரசியல் சித்தாந்த சார்புநிலையும் இல்லை, எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவான கட்டுரையும் இல்லை, இந்த மாற்றங்கள் எதனால் நிகழ்ந்தன என்பதை மட்டும் தெளிவாக பேசுகிறது. இவற்றை அந்தந்த காலத்தில் ஏற்பட்ட திட்டங்களுடன் பொருத்தி பார்த்து புரிந்துகொள்வது அவசியமாகிறது. மேலும் சமீபத்தில் வெளியான “The Dravidian Model” என்ற புத்தகம் இந்த தரவுகளுக்கு மேலும் வலு சேர்க்கும்.
ஒரு காலத்தில்(1960) தமிழ்நாடு உ.பியை விட எழ்மையாக இருந்தது, தனிநபர் வருமானமும் அந்த சமயத்தில் இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே அளவில் தான் இருந்தன. உ.பி போன்ற மாநிலங்கள் வற்றாத கங்கை நதியை மூலமாக வைத்து இயங்கும் விவசாய மாநிலம், தமிழகம் அப்படி இல்லை, இங்கு விவசாயம் நிச்சயமற்ற நிலையில் தான் இருந்தது.(டெல்டா போன்ற சில பகுதிகளை தவிர) எனவே அதற்கான மாற்று தொழிலையும் கண்டடையும் கட்டாயம் இங்குள்ள அரசுகளுக்கு இருந்தது. நாம் வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவு தான் 1990 உலகமையமாக்களுக்கு பிறகு பெரிய அளவில் சமூக- பொருளாதார அளவீடுகளில் முன்னேற்றத்தை சந்தித்தது.
இந்த மாற்றங்களுக்கு எல்லாம் அரசில் திட்டங்கள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் இங்கு சட்ட ஒழுங்கு பிரச்னை வட மாநிலங்களோடு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததும், அரசியல் சூழல் நிலையாக(political stability) இருந்தது, இங்கு நடந்த அரசியல் இயக்க நடவடிக்கைகள் விழிப்புணர்வு மிகுந்த ஒரு சமூகத்தை ஏற்படுத்தியிருந்ததும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அரசுகள் கல்வி , மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் அதிக அளவில் முதலீடு செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்தியதன் விளைவாக மனிதவள குறியீட்டில் நல்ல முன்னேற்ற்றத்தை அடைந்தன இதன் விளைவு தான் நாம் அடைந்த பொருளாதார முன்னேற்றமும். இங்கு நகரமயமாதல் என்பது வெகு விரிவாக நடந்தேறியதும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உலகமயமாக்கலுக்கு பிறகு இங்கிருந்த அமைதியான அரசியல் சூழல் மற்றும் சிறப்பான மனிதவள குறியீடுகள் பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தன. தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் அதையும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது என்று தான் சொல்லவேண்டும்.
மேலும் இங்கு 1920களில் நடந்தது போன்ற அரசியல் இயக்க(political movements) நடவடிக்கைகள் BIMARU மாநிலங்களில் 80 களுக்கு பிறகு தான் நடைபெற தொடங்கியது. இது மக்களிடையே அரசியல் விழிப்பை பெரிய அளவில் ஏற்படுத்தவில்லை, தென் மாநிலங்களில் இருந்தது போன்ற இடஒதுக்கீடு முறை எல்லாம் வட மாநிலங்களில் 90களுக்கு பிறகு தான் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் அங்கு அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்றளவும் மக்கள் மீது ஈடுபாடு அற்றவர்களாக தான் இருந்து வருகிறார்கள். SUPPLY-DEMAND என்று இரண்டு பக்கமும் அரசு எந்திரம் முடங்கிப்போய் இருக்கிறது, இது அங்குள்ள மக்களிடையே பெரிய அபிலாசைகளை(Aspirations) எல்லாம் ஏற்படுத்துவதில்லை. அங்கு வளர்ச்சி குன்றி இருப்பதற்கு இவை எல்லாம் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது .
இந்த புத்தகம் பெரிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது, இந்த உரையாடல் அகில இந்திய அளவில் நடைபெற வேண்டிய காலகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாங்கி படித்து பயன்பெறவும். பல்வேறு தரவுகள் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளது.
BOOK: The Paradox of India's North-South Divide: Lessons from the States and Regions
AUTHOR: Samuel Paul, Kala Seetharam Sridhar
Comments
Post a Comment