The politics of cultural Nationalism in South india - Ross Barnett
The politics of cultural nationalism in south india- Book Review
பொதுவாக கலாச்சார அடிப்படையிலான தேசியம்(cultural nationalism) என்ற கருத்தாக்கத்தை பிற்போக்கு தனமானதாவே அணுகி வருகிறோம், ஆனால் எல்லைகள் அடைப்படியிலான தேசியம்(territorial nationalism) போலவே இதுவும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப மாறுபடுவது தான். இதை பிற்போக்கு என்று கூடி புறம் தள்ளுவதை விடுத்து, அது என்னென்ன காரணங்களுக்காக கட்டமைக்கப்படுகிறது என்பதை திராவிட இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு அலசுகிறார் ஆய்வாளர் Ross barnett.
இது இவரின் முனைவர் பட்ட ஆய்வு, திராவிட இயக்கத்தினை ஆய்வு செய்த முதல் கறுப்பின பெண் இவர்தான், 1942 இல் தொடங்கிய ஆய்வு 1972 வரை பல்வேறு ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு.1975ல் princeton university press வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் போக்கை, வரலாற்றை ,நிகழ்வுகளை கிட்டத்தட்ட துல்லியமாக பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாக இதை பார்க்கலாம்.
விமர்சனங்கள் இருக்கின்றன, அதிலிருந்து நிறை குறைகளை நாம் கற்றுக் கொள்ளும் இடங்களும் இருக்கிறது, ஒரு ஆய்வு என்ற அடிப்படையில் அணுகுவது சிறந்ததாக இருக்கும்.
ஒரு அரசியல்கலாச்சாரம் (political culture) என்பது குறிப்பிட்ட சமுதாயத்தில் இடம்பெற்ற முக்கிய கூறுகளை(Aspects) பொறுத்து மாறுபடும், அதில் அதிகமாக எந்தெந்த அரசியல் இயக்கங்களின் அபிலாஷைகள்(aspirations) இருக்கின்றதோ அந்த கட்சி/ இயக்கம் தான் தனிமனிதனின் அல்லது ஒரு சமூகத்தின் செல்வாக்கை பெற்ற சக்தியாக இருக்க முடியும். அந்த அரசியல் கலாச்சாரம் எப்படி மக்களிடையே விதைக்கப்பட்டது அது எப்படி மாற்றமடைந்தது, அதற்கு அந்த அரசியல் இயக்கங்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றி தங்களை தகவமைத்து கொண்டார்கள் போன்றது பற்றி எல்லாம் மிக ஆழமாக பதிவு செய்துள்ளது இந்நூல்.
பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், திராவிட இயக்கமும், தமிழர் அடையாளம் இவை மூன்றும் ஒன்று தான். அல்லது இவை எல்லாம் ஒரே அடையாளங்கள், காலத்திற்கேற்ப தங்களை வேறுபடுத்திக்கொண்ட அடையாளங்கள். நீதி கட்சி என்பது மிட்டா மிராசுகள் இருந்த கட்சி என்பார்கள், உண்மை தான். ஒரு சமுதாய மாற்றம் அங்குள்ள உயிரடுக்கினரின்(elite) தேவைகளை பொறுத்து தான் கட்டமைக்கப்படுகிறது. அப்போது தான் பார்ப்பனர் அல்லாதார் அடையாளம் உருப்பெறுகிறது அதை சுமப்பவர்கள் பெரும்பாலும் மேல்வர்க பார்பனரல்லாதார்களா(upper class non-brahmin) தான் இருக்கிறார்கள். அதன் பின் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம்(self-respect movement) இது ஒரு சமுதாய மாற்றத்தை அடிப்படையாக கொண்ட இயக்கமாக வெகு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கமாக இருக்கிறது.
1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு அது “திராவிடர்” என்ற அடையாளத்தின் பிரதிநிதியாக அறியப்படுகிறது. நீதிக்கட்சி ஒரு மிதவாதிகள்(moderates) கட்சியாக இருந்தது, சுயமரியாதை இயக்கம் கொள்கை தீவிரம்(radicals) கொண்டவர்களின் இயக்கமாக செயல்பட்டது. 1944 இல் நீதிக்கட்சி- சுயமரியாதை இயக்க இணைப்பு மற்றும் "திராவிடர் கழக" தோற்றம் என்பது ஒரு சமூக மறுமலர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின் அனைவருக்கும் வாக்குரிமை(Adult Suffrage) அளிக்கப்படுகிறது, திக-திமுக பிளவு பல்வேறு காரணங்களுக்காக அந்த சமயத்தில் நடக்கிறது.
அடிப்படை கொள்கைகளை ஆதாரமாக கொண்டு திக வும், தேர்தல் அரசியலுக்காக சில மாற்றங்களை திமுகவும் செய்து கொள்கின்றன. "திராவிட நாடு திராவிடருக்கே " என்ற உரிமை குரல் ஓங்கி ஒலித்த காலம், 1957 இல் முதல் தேர்தலை சந்தித்து 15 இடங்களை திமுக பிடிக்கிறது, அதன் பின் இந்திய- சீன போர் திராவிட நாடு கோரிக்கையை கைவிடும் சூழல், ஆனால் அது முன்னதாகவே எடுக்கப்பட்ட முடிவாக தான் தெரிகிறது, இதன் அடிப்படையில் தான் சம்பத் பிரிந்து தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார், அண்ணா ‘எண்ணி துணிந்து’ எடுத்த முடிவினால் திராவிட நாடு குரல் தமிழர் உரிமை குரலாக மாற்றமடைகிறது.
அதன் பின் இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக , தமிழர் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக திமுக மாற்றமடைகிறது, 1967 தேர்தலில் கூட்டணியோடு நின்றாலும் தனது சொந்த செல்வாக்கினால் ஆட்சியை பிடிக்கிறது.
ஒரு புது கட்சி ஆட்சிக்கு வந்தால் சந்திக்கும் சிக்கல்களை திமுகவும் சந்திக்கிறது, ஒருபக்கம் கட்சியை வளர்க்கும் பணிகள் தீவிரமடைந்தாலும் , மறுபக்கம் பட்டினி, தொழிலாளர் பிரச்சனை, மொழி பிரச்சனை, மாணவர் பிரச்சனை என பல அடுக்கு பிரச்சனைகளை சந்திக்கிறது. திமுகவின் அடையாளமாக இருந்த பேரறிஞர் அண்ணா மறைகிறார். பின் பல்வேறு உட்கட்சி பூசலுக்கு பிறகு கலைஞர் தலைமை பொறுப்பை அடைகிறார். 1971 தேர்தலில் மாபெரும் வெற்றி, காரணம் அப்போது அரசியல் கலாச்சாரம் திமுகவின் தேவைகளோடு பிணைந்த ஒன்றாக இருந்தது. அதற்கு கொள்கை பரவல் முக்கிய காரணம். பின்னர் திமுக தனது இரண்டாவது பிளவை சந்திக்கிறது, அதிமுக உருவாகிறது. கட்சியில் தனி மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தால் தான் இந்த பிளவு நடந்தது என்றும்,1961 சம்பத் பிரிவின் போது அவர் இதை எச்சரித்து பேசியதை மேற்கோளிடுகிறார் நூல் ஆசிரியர்.
இப்படி 1919 இல் தொடங்கி 1975 வரையிலுமே நடந்த மாற்றங்களை நுணுக்கமாகப் பதிவு செய்கிறது இந்நூல், சில நெருடல்கள் இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்க வேண்டும், அப்படி செய்ததன் காரணத்தினால் தான் இதுநாள் வரை இயக்க செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனலாம்.
திராவிட இயக்கம் சந்திக்கவிருக்கும் இரண்டு முக்கிய பிரச்சனைகள்
1 . தலித்துகளின் அடையாள திரட்சி
2 . வர்க்கங்கள் இடையே உருவாகப்போகும் சிக்கல்
என்ற இரண்டையும் குறிப்பிடுகிறார், இதனை கையாளும் விதத்தில் தான் இயக்கத்தின் போக்கு தீர்மானிக்கப்படும் என்றும் முடிக்கிறார்.
Students of political science, sociology, history, admirers & supporters of dravidian movement ஆகிய அனைவரும் தவறவிட கூடாத புத்தகம். இந்த புத்தகத்தோடு சேர்த்து பேராசிரியர் MSS. Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” நூலையும் சேர்த்து வாசித்தல் ஒரு நல்ல புரிதல் ஏற்படும்.
தகவல்கள் நிறைந்த அறிவு களஞ்சியம் என்பதால் நண்பர்கள் வாசித்து பயன் பெறவும்.
BOOK: The politics of cultural nationalism in south india
AUTHOR: Marguerite ross barnett
Comments
Post a Comment