The Social contract - JJ Rousseau

The Social Contract - JJ Rousseau


“Man was born free, and he is everywhere in chains” – Jean-Jacques Rousseau.





சில புத்தகங்கள் படிக்கும்போதே ஒரு வித பண்பு மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்தும் அவை  இந்த சமூகம்,அரசு, அரசாங்கம், உரிமை பற்றிய புரிதல்களை எல்லாம் இன்னும் தெளிவாக நமக்குள் ஏற்படுத்தும். Rousseau எழுதிய “Social contract(1762)” அப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான். 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் இன்று அமைந்துள்ள அமைப்புகளுக்கும், சமுதாய உறவுவுகளுக்கும் ஒரு அடித்தளத்தை அமைத்து கொடுத்ததாக இந்த புத்தகத்தை நான் புரிந்து கொள்கிறேன். 


ஒரு சமூக ஒழுங்கு(Social Order) என்பது இயற்கையாக அமைவது அல்ல, அதை சட்டங்கள் மூலமாகவும் ஒப்பந்தங்கள் மூலமாகவும் நாம் செயற்கையாக ஏற்படுத்தி கொள்பவை தான். ஒரு இடத்தில உள்ள மக்கள் எல்லாம் ஒரு சமுதாய ஒப்பந்தத்திற்கு(Social Contract) உடன்படுவதன் மூலம் ஒரு அரசு(State) உருவாகிறது,  அது சில சட்டங்கள்(Constitution) மூலம் அரசாங்கத்தை(Government) உருவாக்குகிறது. மனிதன் ஒரு சட்டத்தை மீறும்பொழுது அந்த சமுதாய ஒப்பந்தத்தையும் மீறுகிறான், இதன் காரணமாக தான் தண்டனைகள் போன்றவை எல்லாம் கொடுக்கப்படுகிறது. ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படுவதன் மூலமாகவோ அல்லது உடன்படாமல் போவதன் மூலமாகவோ தான் அவன் ஒரு நாட்டின் குடிமகனா(Citizen) அல்லது அயலான(Foreigner) என்பது தீர்மானிக்க படுகிறது.


குடிமக்களால் ஆனது தான் அரசு ,சமூக ஒப்பந்தங்கள் எல்லாம் மனிதனை போலவே ஒரு அரசையும் உயிர்ப்புள்ளதாக(lively) ஆக்குகிறது. இந்த சமுதாய ஒப்பந்தத்திற்கு உடன்படுவதன் மூலம் மனிதன் தனது கிடைத்த இயற்கையான(Natural Liberty)  சுதந்திரத்தை இழக்கிறான். அதற்கு மாறாக அவனுக்கு சிவில் சுதந்திரமும்(Civil Liberty), தனிஉரிமையும் நிச்சயிக்க படுகிறது. இயற்கையாக கிடைக்கும் சுதந்திரம் என்பது தனிமனிதன் சார்ந்தது ஆனால் சிவில் சுதந்திரம் என்பது ஒரு சமுகத்தில் அவனுக்கு கிடைக்கும் சுதந்திரம், இது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது தான் என்றாலும் ஒப்பீட்டளவில் இதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம். 


சமத்துவத்தை பொறுத்தவரை இயற்கையால் ஏற்படுத்தப்படும் சமத்துவமின்மையை ஒரு அரசு சரி செய்து நியாயமான சமத்துவத்தை சம உரிமைகள்(Equal Rights) மூலம் உறுதிசெய்யும்.  


புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒருவொரு பகுதியும் சமூக ஒப்பந்தம், அரசு, அரசாங்கம், அரசாங்கத்தின் உறுப்புக்கள் மற்றும் கடமைகள் என விரிவாக பேசுகிறது. 


Democracy, Aristocracy, Monarchy  என்கிற மூன்று வகையான அரசுகளை பற்றியும், அதில் குடிமக்கள் மற்றும் அரசு இயந்திரத்திற்கு இடையே நிலவும் உரிமைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றியும் விரிவாக பேசுகிறது இந்நூல். மேலும் ஒரு பகுதியின் இயற்கை வளம் , நிலவியல் அமைப்பு, நாகரிக மற்றும் பண்பாடு கூறுகளை பொறுத்து தான் ஒரு அரசனது அமையப்பெறும் என்றும் கூறுகிறார், அதே போல் ஒரு அரசின் இறையாண்மை என்பது காலஅளவில் மாற்றத்திற்கு உட்படும் இதன் காரணமாக ஒரு ஜனநாயக அரசு ஒரு பிரபுத்துவ(Aristocracy) அரசாக மாறலாம், ஒரு பிரபுத்துவ அரசு என்பது ஒரு முடியாட்சி(Monarchy ) அரசாக மாறலாம் என்றும் கூறுகிறார். 



சமகால அரசு அமைப்புகள் மற்றும் அரசியல்  அமைப்பு சட்டங்கள் எல்லாம் இந்த நூலை அடிப்படையாக வைத்து உருவானவை தான், அரசும்- அதை கட்டுப்படுத்தும் அதிகாரிகள் எல்லாம் எஜமானார்களோ அல்லது நம்மை  விட மேன்மையானவர்களோ அல்ல, அவர்கள் எல்லாம் அரசை நிர்வகிக்கும் நிர்வாகிகள், அவை எல்லாம் தற்காலிக பதவிகள் தான் ஆனால் சட்ட அமைப்பை கொண்ட ஒரு அரசு என்பது நிலையானது. அதன் இறையாண்மை(sovereignty) அந்நாட்டின் குடிமக்களால்(Citizen) அதற்கு வழங்கப்பட்டு ஒரு அதிகாரமிக்க அமைப்பாக உருப்பெற்றுள்ளது. 


மேலும் அரசு எந்த எல்லைக்கு சென்று கட்டுப்பாடுகளை, சட்டங்களை எல்லாம் விதிக்கலாம்? மதம் மற்றும் அரசுகள் இடையே நிலவும் வேற்றுமைகள் என்ன? சர்வாதிகாரம் உருவாவதிற்கான காரணங்கள் என்ன? அரசின் தணிக்கை செய்யும் அதிகாரம் சரியா? தவறா?ஒரு நாட்டில்  நீதிமன்றங்களின் பங்கு எத்தகையது ? போன்றவை பற்றி எல்லாம் தெளிவாக பேச பட்டுள்ளது. 


அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கிளாசிக் புத்தகங்கள் வரிசையில் இது முதன்மையான புத்தகமாக நான் கருதுகிறேன். வாய்ப்புள்ளவர்கள் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


Book: The Social Contract

Author:  Jean-Jacques Rousseau.





Comments

  1. தெளிவான விமர்சனம், Gowtham! இன்னும் பல தனித்துவனமான புத்தகங்களை உங்களிடமிருந்து அறிமுகப்படுத்த காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. Do more book reviews on this genre, Good work, Keep going

    ReplyDelete

Post a Comment