ஆர். கண்ணனின் அபத்த ஆலாபனை : The DMK Years





 75 ஆண்டுகளைக் கடந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி தமிழில் குறிப்பிடத்தகுந்த வரலாற்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. டி.எம்.பார்த்தசாரதி, க.திருநாவுக்கரசு, அர. திருவிடம் , பேரா. அ. இராமசாமி ஆகியோர் தொடக்கக் கால வரலாற்றைச் சான்றுகளுடன் முறையாகப் பதிவு செய்துள்ளனர். நாவலர் நெடுஞ்செழியன் 1963 வரையிலான கழக வரலாற்றைத் ‘திமுக வரலாறு’ என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். இது தவிர்த்து இயக்க வரலாற்றைத் தாங்கி நிற்கும்  தன்வரலாற்று நூல்களும் உள்ளன. தலைவர் கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ , இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ எம்.எஸ். வேங்கடாசலத்தின் ‘நான் கண்ட அண்ணா’ , டி. ஆர்.பாலுவின் ‘பாதை மாறாப் பயணம்’ ஆகிய நூல்கள் இயக்க வரலாற்றைச் சுமந்து நிற்கும் தன்வரலாற்று நூல்கள். 


சமகாலத்தில் தமிழில் வெகுஜன வாசிப்புக்கு ஆர்.முத்துக்குமார் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ இரண்டு பாகங்களும் பரிந்துரைக்கப் படுகின்றன. காலவரிசைப் படி ஓரளவுக்கு முறையான தரவுகளுடன் எழுதப்பட்ட இந்த புத்தகம் 2009 வரையிலான செய்திகளை நமக்களிக்கிறது. 


ஆங்கிலத்தில் The Dravidian Years, The Dravidian Model, The Rule of the Commoner போன்ற ஆய்வு நூல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அ. இராமசாமி எழுதிய ‘D.M.K RISE AND CONTRIBUTION’ என்ற புத்தகம் மட்டும்தான் திமுக வரலாறு என்ற வகையில் எஞ்சி நிற்கிறது. 


இந்த குறையைத் தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பில் சமீபத்தில் ஆர்வத்துடன் படித்த நூல் ஆர்.கண்ணனின் The DMK Years: Ascent, Descent, Survival. ஏற்கனவே பேரறிஞர் அண்ணா பற்றியும் எம்.ஜி. இராமச்சந்திரன் பற்றியும் அவர்களது நூற்றாண்டின்போது புத்தகம் எழுதிய இவர், திமுகவின் 75-ஆம் ஆண்டையொட்டி இந்நூலை வெளியிட்டிருப்பதன் மூலம் Dravidian Trilogy-ஐ நிறைவு செய்திருப்பதாக நம்புகிறார். ஆனால் அந்த அவதானிப்பு அவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கை என்ற உணர்வையே இந்நூல் ஏற்படுத்துகிறது.  ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள் அரளிப்பூவைச் சர்க்கரை என்று சொல்லி விற்பனை செய்ய முயன்றுள்ளார் ஆர்.கண்ணன். Penguin பதிப்பகம் 748 பக்கங்கள் கொண்ட இந்நூலை வெளியிட்டுள்ளது.  


ஆளுமைகளின் வரலாற்றை எழுதும் அதே பாணியை ஒரு இயக்க வரலாற்றை எழுதும்போதும் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்பதற்குச் சான்றாக இருக்கிறது இந்நூல். சாமானியர்களையும், சாதாரணத் தொண்டர்களையும் கொண்டு கீழிருந்து எழுப்பப்பட்ட திமுகவைப் பற்றி எழுதப்பட்ட இந்நூலில் அத்தகைய சாமானியர்களுக்கான இடம் என்பது துளியும் இல்லை. கண்ணனின் எழுத்து பாணி எப்போது ஒருவரைத் தன்னை விடத் தாழ்ந்தவராகவே எண்ணி வெளிப்படுகிறது. ஐ.நா வில் பணிபுரிந்ததாலா என்று தெரியவில்லை. வெகுமக்களின் அபிமானத்திற்குரிய தலைவர்களை வர்ணிக்கும் இவரது மொழி அருவருப்பானதாக இருக்கிறது. இந்நூலில் தனது அனுமானங்கள், ஊகங்களை எல்லாம் சேர்த்துக் கட்டி ஒரு கதையாடலைச் சமைக்க முயன்றுள்ளார். ஆனால் இந்தக் கதையாடலில் சரியான அடிக்கட்டுமானமும் இல்லை முறையான மேற்கட்டுமானமும் இல்லை. தொட்டால் உதிர்ந்து போகும் இந்தக் கதையாடலை மறுப்பதும் இந்நூலின் போதாமைகளைப் பொதுவில் வைப்பதும் அவசியம் என்று கருதுகிறேன். 


‘The DMK Years’ என்று தலைப்பிடப்பட்ட இந்நூலின் அட்டைப் படத்தில் ஜெயலலிதா இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அட்டைப் படத்தில் இருப்பதைப் போலவே நூலிலும் சிறப்பு அந்தஸ்தோடுதான் நடத்தப்படுகிறார். மற்ற பார்ப்பனரல்லாத தலைவர்களுக்குத் தாராளமாக வழங்கப்படும் அவமரியாதை பார்ப்பனரான ஜெயலலிதாவுக்குத் தயக்கத்துடனே வழங்கப் படுகிறது. 


மேலும் சான்றுகளைக் கொண்டிருக்கும் Footnotes-இல் பல்வேறு போதாமைகள் இருக்கின்றன. கதையாடலுக்கு ஏற்ப அவை வளைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. நூலில் பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற சான்று சுட்டப்படுகிறது. அவற்றுள் இரண்டு இடங்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 


1. “1959 ஜூலை 31 அன்று கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசு ஆளுநரின் பரிந்துரையோடு கலைக்கப்பட்டபோது, அண்ணா சொன்னது ‘ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்ற புகழ்பெற்ற வாக்கியம்.” இதற்கு நேரடிச் சான்றுகளைச் சுட்ட வேண்டும் என்றால் ஒன்று அந்தக் காலத்துச் செய்தித் தாள்களிலோ, அல்லது தொகுக்கப்பட்ட அண்ணாவின் உரைகளிலோ இருப்பதைத்தான் குறிப்பிட வேண்டும். ஆனால் தலையைச் சுற்றி, காலையும் சுற்றி மூக்கைத் தொடுவது போல. 2017 நவம்பர் 16 அன்றைக்கு வெளியான Times of India கட்டுரையை மேற்கோளிடுகிறார். அதிலும் தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்துள்ள சிறு பேட்டியில் இப்படிக் கூறி இருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார். 


2. மற்றொன்று  13 செப்டம்பர் 1975 அன்று US Consul General அளித்த அறிக்கையில் இடம்பெற்ற ஒரு வரியைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதையாடல். இந்த அறிக்கையின் மூலம் Wikileaks-இல் ‘THE EMERGENCY IN THE SOUTH, 75 DAYS AFTER’ என்ற கட்டுரையில் இடம்பெற்றதாகச் சுட்டியுள்ளார். அதில் ‘Karunanidhi termed the emergency ‘good’ last month.’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. ஜனநாயகம் காக்கத் தி.மு.கழகம் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிறது என்று மேடைதோறும் முழங்கிய கலைஞர் இப்படிக் கூறி இருந்தால், ஒன்று அதற்கு அக்காலத்தைய செய்தித்தாளையோ அல்லது வேறு யாரேனும் நேரில் கேட்டவர்கள் எழுதி வைத்த சான்றையோ சுட்டியிருக்க வேண்டும். உளவாளி எவனோ கிறுக்கி விட்டுச் சென்ற CONFIDENTIAL அறிக்கையில் இடம்பெற்ற ஒரு வரியைக் கொண்டு கதையாடலைக் கட்டமைக்கும் காரணம் விளங்கவில்லை. 


இந்த இரண்டு Footnote-ஐப் படித்து அதிர்ச்சி அடைந்த எனக்கு, நூலைப் புரட்டப் புரட்ட இதுபோன்ற பல்வேறு புரட்டுகள் காத்துக் கொண்டிருப்பது ஒரு விதச் சலிப்பை உண்டாக்கியது, அதனாலேயே நேரம் எடுத்து பலரிடம் புலம்பி, நூலைப் படித்து முடிக்க நேரம் பிடித்தது.  பிறழ் தகவல்களைக் கொண்டு போலிக் கதையாடலைக் கட்டமைக்க, கண்ணன் பயன்படுத்தும் யுக்திகளுள் ஒன்றுதான் Wikileaks-இல் கிடைக்கும் US Consul General அறிக்கைகள்.  வட சென்னையில் பிறந்து திராவிட இயக்கத்தின் வளர்ச்சியை நேரில் கண்டதாகப் பேட்டிக்குப் பேட்டி மார்தட்டிக் கொள்ளும் ஒருவர் எதன் காரணமாக இப்படி எழுத வேண்டும்? என்ற கேள்வியை இந்நூலில் பல்வேறு பகுதிகள் ஏற்படுத்தின. 


தி.மு.கழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு போதிய முக்கியத்துவத்தை இந்நூல் தரவில்லை. தி.மு.க. வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகக் கருதப்படும் 1949-1967 வரையிலான காலத்தை வெறும் 130 பக்கங்களில் அடக்கியுள்ளார். (1959 வரையிலான திமுக வரலாற்றை மட்டும்,  க. திருநாவுக்கரசு மூன்று பாகங்களாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.) மொத்தமுள்ள 31 அத்தியாயங்களில் அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்திற்குக் கிட்டத்தட்ட 7 (25%) அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலைஞர் மற்றும் ஜெயலலிதாவின் மறைவை விவரிக்கும் ‘The Titans are Gone’ என்ற அத்தியாயத்தில் கூட ஜெயலலிதாவின் மறைவுதான் பிரதானப்படுத்தப்  பட்டுள்ளதே ஒழிய, உடன்பிறப்புகளால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் தி.மு.க.வின் தலைவராக விளங்கிய கலைஞரின் மறைவு சொற்ப பக்கங்களில் சுருக்கப்பட்டுள்ளது, மெரினாவில் இடம் வேண்டி நடத்திய சட்டப் போராட்டம் குறித்த ஒரு வரி கூட இந்நூலில் இடம்பெறவில்லை. என்னைப் போன்ற இளைஞர்களை அரசியற்படுத்திய நிகழ்வது. 


பிறசேர்க்கைகள் தவிர்த்து 550 பக்கங்களுள் இவற்றை எல்லாம் அடக்குவது கடினம் என்று நூலாசிரியர் பின்னாட்களில் சொல்லுவாரேயானால், எம்.ஜி.ராமச்சந்திரன் புகழும், ஜெயலலிதா புகழும் பாட இந்நூல் ஆசிரியர் எடுத்துக்கொண்ட பக்கங்களுக்கு மாறாக இவற்றை எல்லாம் எழுதுவதில் என்ன தயக்கம் என்ற கேள்வியை எழுப்பலாம். 


அண்ணா படத்துடன் மாபெரும் தமிழ்க் கனவும், கலைஞர் படத்துடன் தெற்கிலிருந்து ஒரு சூரியனும் எப்படி ஒரு அறிவியக்கத்திடம் பண்டமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதோ, ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் பெயரை நூலின் தலைப்பில் வைத்து, கண்ட செய்திகளைக் கிறுக்கி வைப்போம் என்ற ரீதியில்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 


பிரெஞ்சுப் புரட்சியைப் பற்றி ஒரு ஆண்டை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது கண்ணன் எழுதிய The DMK Years. சூத்திரர் என்று விளிக்கப்பட்ட சாதாரண மக்களை இந்நாட்டு மன்னர்களாக உணரச்செய்து, இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு, அறிவுலக ஆண்டைகளின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்டு சாமானியர் ஒருவரால் எழுதப்படும். 


அதுவரை அசுரர் குலத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் இந்த அரளிப்பூவையும் உண்டு செரிக்கத்தான் வேண்டும்.








 





















Comments

  1. Perfect.
    The author of THE DMK YEARS miserably fails to conceal his bias against Dr. Kalaignar and him being a fanboy of both yesteryear cinema stars who happened to occupy the coveted seat of the CM of TN.
    My bad, should’ve followed the age old adage, NEVER JUDGE A BOOK BY ITS COVER.
    He tried to put forth his agenda that the DMK as a movement survived in spite of Dr. Kalaignar.

    ReplyDelete

Post a Comment