Unruly waters - Sunil Amrith
UNRULY WATERS - Sunil Amrith
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் என்ற ஔவையாரின் செய்யுள் எவ்வளவு பெரிய உண்மை என்பது “Unruly Waters” என்ற புத்தகத்தை வாசித்த பின் தான் தெளிவாக புரிந்தது.
தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்று போக்கை தண்ணீர் எப்படி எல்லாம் மாற்றியமைத்தது, அது மக்களின் வாழ்க்கை முறையில், பழக்கவழக்கங்களில், அவர்களின் பண்பாட்டு-சமூக- பொருளாதாரத்தில் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கியது என்பதை மிகவும் ஆழமாக பேசுகிறது இந்நூல்.
இந்தியாவில் காலநிலை(climate) ஒரு நிச்சயமற்ற தன்மையை கொண்டது தான், அது முழுக்க முழுக்க பருவமழையை(monsoon) நம்பி தான் இயங்கி வந்தது ஒரு சில பகுதிகளை தவிர பிற இடங்களில் நிரந்தரமான நீர் பாசனம் எல்லாம் இல்லை, பருவமழையை நம்பி தான் வாழ்வாதாரம். அந்த பருவநிலை கடல் மற்றும் நிலத்திற்கு இடையே நிலவும் தட்பவெப்ப மற்றும் அழுத்தத்தை பொறுத்து மாறுபடும். ஒரு ஆண்டு நல்ல மழை இருக்கும் சில ஆண்டுகள் மழை எதிர்பார்த்த அளவு இருக்காது, அதன் காரணமாக பஞ்சம் பட்டினி என பெரும் பாதிப்புகளை இந்திய துணைக்கண்டம் சந்தித்து வந்தது.
பிரிட்டிஷ் வருகைக்கு முன்பிருந்தே இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேயர்கள் இதற்காக ஒரு நிரந்தர தீர்வு காண முயன்றார்கள், பஞ்சம் பட்டினியை தடுக்க, நீரை சேமிக்க வேண்டும், ஆற்றில் இருந்து கடலில் வீணாக்கப்படும் தண்ணீரை பாதுகாத்தாக வேண்டும் என்று அணைகள், பாசன வசதிகள் போன்றவற்றை கட்டமைத்தார்கள் , இதில் அவர்களின் சுயநலமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. மேலும் அவர்கள் இந்த நிச்சயமற்ற கால நிலையை புரிந்து கொள்ள ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்கள்.
ஒரு பக்கம் இப்படி இருக்க மற்றொருபுறம் நதி வழி போக்குவரத்துக்கு தயாராகி கொண்டிருந்தது ஆங்கிலேய அரசு, ஆனால் அதற்குள் ரயில் போக்குவரத்து தொழில்நுட்பங்கள் கிடைக்கப்பெற்றதால் நீர்வழி போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும் 1880களிலும் 1890களிலும் பட்டினியில் பல உயிர்களை தெற்காசிய இழந்து கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் உதவி செய்தன.
மேலும் காந்தியும்-அம்பேத்கரும் தண்ணீரை எப்படி அணுகினார்கள் என்பது பற்றி ஒரு செய்தியும் இடம்பெற்றுள்ளது. காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்கு காரணம் இந்தியர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான். அண்ணல் அம்பேத்கரின் மகத் சத்தியாகிரகம் மக்களிடையே ஒரு சமத்துவமும் சகோதரத்துவமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு உரிமை போராட்டமாக நடத்தப்பட்டது. தங்கள் கொள்கைகளை மக்களுக்கு கடத்த நீரை ஆயுதமாகவும் அடையாளமாகவும் மாற்றி கொண்டார்கள் என்றும் பதிவு செய்கிறார்.
விடுதலைக்கு பிறகான இந்தியாவில் நேருவுக்கு முன் மிகப்பெரிய பணி இருந்தது அதில் முக்கியமான ஒன்று கட்டமைப்பு வசதி, அதிலும் குறிப்பாக நீர் பாசன வசதி ஒரு புறம் தொழில்நுட்பத்தில் அக்கறை செலுத்தினாலும் மற்றொருபுறம் அணைகள் கட்டுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் அவரின் கனவு திட்டமான “Bhakra nangal” அணையை கட்டமைத்தார், அதன் திறப்பு விழாவில் “இது போன்ற அணைகள் இந்தியாவின் ஆலயங்கள்” என்று புகழாரம் சூட்டினார்.
அதே சமயத்தில் தான் சீனாவும் அணைகளை கட்ட தொடங்கியது, 1950 களில் தொடங்கி இன்றுவரை ஆசிய கண்டத்தில் மற்றும் லட்சக்கணக்கில் அணைகள் கட்டப்பட்டிருக்கும் என்கிறார் நூல் ஆசிரியர், அதன் முக்கிய காரணம் பருவநிலை நிச்சயமின்மை யும் நீரை சேமித்தாகவேண்டும் என்ற கட்டாயமும் தான், மேலும் 1980 களுக்கு பிறகு மின்சார தயாரிப்புக்கு தண்ணீர் பயன்படுத்த பட்டது இதன் காரணமாக பெரிய அளவில் Hydroelectric plants உருவாக்கப்பட்டது.
இத்தகைய அணை கட்டமைப்புகள் நீரை சேமிக்க உதவினாலும் மற்றொருபுறம் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கியது. அந்த பகுதியில் ஓடும் நதிகளை பலவீனப்படுத்தியது, உலகம் வெப்பமயமாதல் தடுக்க படுவதற்காக அமைக்கப்பட்ட நீர் மின்சார உற்பத்தி(hydro electric power plants) அணைகள் அதை காட்டிலும் அதிக அளவில் Greenhouse gas ஐ உற்பத்தி செய்தது, பெருவாரியான மக்கள் இடம்பெயர்த்தப்பட்டார்கள், காடுகளில் வசிக்கும் ஆதி குடிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தார்கள். வளர்ச்சியா சூழல்லா என்று பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வளர்ச்சி தான் முதன்மை கொள்கையாக கடைபிடிக்க பட்டது.
இதை தொடர்ந்து 1960 களில் பருவமழை தவறியதால் பெரும் பஞ்சம் ஒன்று இந்தியாவை சூழ்ந்தது, உலக நாடுகளிடம் கையேந்தும் நிலை, அதன் பின் தான் பசுமைப் புரட்சி(green revolution) ஏற்படத் தொடங்கியது. ரசாயன உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஆழ்துளை கிணறுகள், மின்சார மானியம் என பஞ்சத்தை சீர் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்தியா தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு வழி முறையை கண்டுபிடித்தது. ஆனால் அதுவே பின்னாளில் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ரசாயன உரம் நீரை மாசுபடுத்தியது, ஆழ்துளை கிணறுகள் நிலத்தடி நீரை குறைத்து கொண்டே வந்தது, சீனாவிலும் இதே நிலை தான். மரபணு மாற்றப்பட்ட விதைகள் பூச்சிகளுக்கும், பிற நோய்களுக்கும் எளிதாக ஆட்கொள்வதாக அமைந்தது. இது உணவு உற்பத்தியில் உபரியை(food surplus) ஏற்படுத்தினாலும் அதோடு சேர்த்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
1980களுக்கு பிறகு தான் பருவநிலை மாற்றம் பற்றி உலக அரங்கில் விழிப்புணர்வு எழ தொடங்கியது, அது ஏற்படுத்தும் பாதிப்புகளை உலக நாடுகள் பேச தொடங்கின, ஆனால் அதன் பின்னும் சூழ்நிலையை உணர்ந்ததாக தெரியவில்லை பருவநிலை மாற்றம் பற்றிய மாநாடுகளும் கூட்டங்களும் நடைபெற்றவண்ணம் தான் இருக்கிறது. ஒரு புறம் வளர்ச்சியை முதன்மைப்படுத்தினாலும் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சூழல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு தரப்படுவதில்லை. இது தெற்காசிய நாடுகளில் ஏற்படுத்தபோகும் தாக்கம் பிற இடங்களை ஒப்பிடும்போது வீரியமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர் P.sainath எழுதிய “Everybody loves a good drought” என்ற புத்தகத்தை பல இடங்களின் குறிப்பிடுகிறார். மக்களின் இடப்பெயர்வு(migration) பருவநிலை மாற்றத்தால் பெரியளவில் உந்தப்படுகிறது. அது போலவே கவிஞர் வைரமுத்து எழுதிய “கள்ளிக்காட்டு இதிகாசம்” என்று இலக்கியத்தில் இத்தகைய பாதிப்புகள் பற்றி பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீரின் வழியாக இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்று போக்கையும், இங்கு நடந்த மாற்றங்களையும் அருமையாக பதிவு செய்துள்ளார், பாதிப்புகளை உணர்ந்து நாம் செயல்படும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம், அடுத்த தலைமுறைக்கு இந்த பொன்னுலகை கடத்த இத்தகைய சிக்கல்களையும் நாம் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் படித்து பயன் பெறவும், சூழலியல் சார்ந்து இயங்கும் நண்பர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.
அண்ணன் பதிவிலிருந்து தான் இந்த புத்தகம் பற்றி அறிந்துகொண்டேன் அவருக்கு என் அன்பும் நன்றியும் .
Book: Unruly waters
Author: Sunil S. Amrith
Comments
Post a Comment