ANNA- The life and times of C.N. Annadurai - நூல் அறிமுகம்

"You and I are common men - but me specially, [am] a common man called upon to shoulder uncommon responsibilities" - CN.ANNADURAI M.A



திராவிட இயக்கம் பற்றிய நூல்களோ அல்லது திராவிட இயக்க தலைவர்கள் பற்றிய நூல்களோ ஆங்கிலத்தில் வெளியாவது அரிது தான். சமகாலத்தில் அது அதிகரித்தவண்ணம் இருப்பது வரவேற்கத்தக்கது. 2010ஆம் ஆண்டு வெளியான புத்தகம் தான் திரு R. Kannan எழுதிய Anna: The Life and Times of C.N. Annadurai. 


புத்தகத்தின் அமைப்பு முறை என்னைக் கவர்ந்தது, இந்நூல் மூன்றுபகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  Spring , Summer, Autumn.


Spring - அண்ணாவின் தொடக்ககால அனுபவங்கள், கல்லூரி கால நினைவுகள், முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம்,   திராவிடர் கழக செயல்பாடுகள், பெரியாருடனான பரிவு மற்றும் பாசம் , சினிமா மற்றும் இலக்கிய செயல்பாடுகள்  போன்றவை எல்லாம் வசந்த காலம் எனும் பகுதியின் கீழ் இடம்பெறுகிறது. 



Summer - பெரியாரிடம் இருந்து பிரிந்த காலம் கோடைக் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடங்கி அவர் நடத்திய போராட்டங்கள், மும்முனை போராட்டம், முதல் தேர்தல், EVK சம்பத் பிரிவு, திராவிடநாடு கோரிக்கையை கைவிடுதல்  போன்றவை எல்லாம் இந்த பகுதியின் கீழ் இடம்பெறுகிறது.


Autumn- 1967-தேர்தல் வெற்றியில் தொடங்கி அண்ணாவின் மறைவு வரை இலையுதிர் காலம் எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அண்ணாவின் அமெரிக்க பயணம், இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழ்நாடு பெயர்மாற்றம், இருமொழி கொள்கை, சுயமரிதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அவர் சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் இந்த பகுதியின் முக்கிய அம்சங்களாக சொல்லலாம். கடைசி அத்தியாயம்(Chapter) மிகவும் நெகிழ்வானதாக இருந்தது. 


புத்தகத்தின் இறுதியில் கூடுதல் இணைப்பாக அண்ணாவின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 


 அண்ணா என்பது சொல் அல்ல அது  ஒரு உணர்வு. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஒவ்வொரு தமிழனின் உணர்வின் வழியாக அவரின் சிந்தனைகள்  வெளிபட்டுக் கொண்டே தான் இருக்கும். தன்னை சுற்றி இருப்பவர்களின் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறை அவர்  அகத்தின் பிரதிபலிப்பு. அரசியலில் கொண்டிருந்த ஜனநாயக கொள்கைக்கு அவரின் அரசியல் வாழ்வே ஒரு சாட்சி . 


தம்பிகளின் வளர்ச்சியில் அவ்வளவு அக்கறை கொண்ட அண்ணன்களை காண்பது எல்லாம் இக்காலத்தில் அரிதான நிகழ்வு. “பத்து பதினொன்னு ஆவதை விரும்பியவர்” “தம்பிகளின் பிரிவுக்கு கண்ணீர்  விட்டவர்” “தம்பி வா தலைமை ஏற்க வா!” என்று அறைகூவல்  விட்ட முதல் திராவிட தலைவர் அண்ணா தான். 


அண்ணாவின் அரசியல் கனவும் மாபெரும்  இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது திராவிட நாடு கோரிக்கையாக இருக்கட்டும், மாநில சுயாட்சி கோரிக்கையாக இருக்கட்டும் அல்லது தமிழ்நாடு பெயர்மாற்றமாக இருக்கட்டும். எல்லாமே ஒரு தொலைதூர செயல்திட்டம் தான். 


அமெரிக்க பயணத்தை முடித்த அண்ணா அந்த வியப்பில் ஒரு பேட்டி அளித்திருப்பார் அதன் வழியே அவரின் கனவை எட்டிப்பார்க்கலாம் “அமரிக்காவின் சாதனைகளை கண்டு வியக்கிறேன். தமிழ்நாட்டின் மனித வளத்தை(Human  resource) அடிப்படையாக வைத்து நாங்கள் வளர ஆசைப்படுகிறோம். நமது தேவைகளுக்கு அமெரிக்க முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். எங்கள் முயற்சியில் எனக்கு அதீத  நம்பிக்கை இருக்கிறது. நாம் அமெரிக்கர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கு அவர்களின்  தொலைநோக்கு பார்வை தான் காரணம்.” என்று அந்த பேட்டி நீளும்.  தமிழ்நாடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது சமூக பொருளாதார குறியீடுகளில் அதிகம் வளர்ந்திருப்பதற்கு இத்தகைய அபிலாசைகள் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். 


அண்ணாவின் புத்தக வாசிப்பும் ஒரு ஆச்சரியம் தான்.  இறுதி நாள் வரை படித்துக்கொண்டும் எழுதி கொண்டுமே இருந்தவர். ஆங்கில இலக்கியம் தொடங்கி தமிழ் வரலாறு வரை, அனைத்தை பற்றியும் ஒரு அபிப்ராயம்(opinion) அவரிடம் இருந்தது. அந்த வகையில் புத்தக வாசிப்பில் அவரை ஒரு முன்னுதாரணமாக கொள்ளலாம். 


இந்த நூலில் சில விசயங்கள் நெருடலாக இருந்தது. அண்ணாவையும் திராவிட இயக்கத்தையயும் விமர்சிக்கும்போது ஜெயகாந்தனையும் கண்ணதாசனையும் மேற்கோளிடுகிறார் நூல் ஆசிரியர். ஒரு கட்சியில் இருந்த விளங்கியவர் சாதாரணமாக அதை எதிர்த்து தான் எழுதுவார் அதும் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொய் சொல்லவா கற்றுக்கொடுக்க வேண்டும்? அவர்கள் சொல்வதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. சில இடங்களில் Margaret ross barnett அவர்களின் ஆய்வு நூலிலிருந்து மேற்கோள்களை குறிப்பிடுகிறார். Ross barnett விமர்சனங்கள் எல்லாம் ஏற்புடையதாக இருந்தாலும், கண்ணதாசன் கக்கிய வன்மங்களை எல்லாம் எதன் அடிப்படையில் நூல் ஆசிரியர் விமர்சனமாக ஏற்றுக்கொண்டார் என்று புரியவில்லை.  


அண்ணாவிடம் இருந்து தம்பிகள் கற்க வேண்டிய பாடம் ஏராளம் இருக்கிறது. அவற்றை தொடர்ந்து பேசியும் எழுதியும் பரப்பியும் வருவது அவரின் கருத்துக்கள் உயிர்ப்புடன் இருக்க நிச்சயம் பயன்படும். அது காலத்தின் தேவையும் கூட. 


அண்ணாவை போல் எளிமையான குடும்ப பின்னணியில் பிறந்து, தனி கட்சி தொடங்கி, தேர்தல் அரசியலில் பங்கேற்று 10 ஆண்டுகளில் ஆட்சியை பிடிப்பதை எல்லாம் இன்று நினைத்து பார்த்தால் வியப்பாக தான் இருக்கும். அண்ணா எளிமையானவர் தான் ஆனால் அண்ணாவை போல் தலைவர்கள் கிடைப்பது எளிமையான காரியம் அல்ல. அதனால் தான் அண்ணா மறைந்த போது கலைஞர் எழுதினார் "கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?". சிவாஜி கணேசன் தனது தாயின் இறப்போடு அண்ணாவின் இறப்பை ஒப்பிட்டார். தந்தை பெரியார் "யானறிந்தவரையில் சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள் காட்டிய துக்கத்தில் நான்கில், எட்டில் ஒரு பங்கு கூட வேறு எவருக்கும் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டார்!" என்று அறிக்கை வெளியிட்டார். 



ஆங்கில வாசகர்களுக்கு அண்ணாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இந்நூலை அவசியம் பரிந்துரைக்கலாம்.  


வாழ்க தமிழ்! 

வளர்க பகுத்தறிவு! 


                      R. Kannan (Author) 

Comments