கலைஞர்
ஒரு மனிதன் மறைந்த பின்பு சமூகத்தில் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் நினைவுக்கூற படுகிறானோ அவன் அத்தனை ஆண்டுகள் வாழ்கிறான் என்று அர்த்தம். திராவிட இயக்க தலைவர்கள் எல்லாம் மறையா வகையை சேர்த்தவர்கள். நீதிக்கட்சி தலைவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் என அந்த நினைவுகள் ஒரு கோர்வையாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
திராவிட இயக்க வரலாறு என்பது கலைஞரின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது, அவரின் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்.
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, உழைப்பாலும், பொது தொண்டினாலும், அறிவு நுணுக்கத்தாலும், அன்பாலும் இந்த சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் கவர்வதென்றால் கடினம் தான், ஆனால் எல்லாம் சாத்தியம் என்று சாதித்து காட்டியவர். இறந்தபின்னும் போராட கற்றுக்கொடுத்தவர் தலைவர் கலைஞர்.
14 வயதில் பத்திரிகையாளன், அதுவும் கையெழுத்து பிரதிகள் தான். பள்ளி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதில் இருந்து தொடங்கியது. பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகையை படித்து வளர்ந்து பின்பு அதிலேயே ஆசிரியராக வேலையும் செய்தார். அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்ட போது சமாதானம் செய்வதில் முக வின் ‘முரசொலி’ தான் முதன்மையில் இருந்தது.
அந்த கால சினிமா துறையில் கொடி கட்டி பரந்த சினிமாக்காரர்களான “ராமசந்தரை” புரட்சி நடிகராகியதிலும் “சிவாஜி கணேசனை” நடிகர் திலகம் ஆகியதிலும் கலைஞரின் வசனங்களுக்கு பெரும்பங்குண்டு. அதுவரை பழமைவாதங்களால் புரையோடி போயிருந்த தமிழ் சினிமாவை பராசக்தி மூலம் தட்டி எழுப்பிய கலை புரட்சியாளன்.
அரசியலில் தொடர்ந்து வெற்றி பூ மாலை சூடிய பெருமைக்குரியவர் , சூழ்ச்சிகள் கடந்து 5 முறை முதலமைச்சர் ஆவதெல்லாம் சாதாரண காரியம் அல்ல, கட்சி அழிந்து விடும் என்று கூவிய கழுகுகள் எல்லாம் கடைசியில் மாண்டுபோனது தான் மிச்சம்.திருவாரூர் முத்துவேல் கருணாநிதி தான் திமுக என்று பெரியார் சொல்வாராம். இந்திய தேசிய அரசியலில் வெற்றிடம் ஏற்படும்போதெல்லாம் யாரை கொண்டு நிரப்ப வேண்டும் என்று அறிந்த வைத்திருந்த சூத்திரதாரி(mastermind) கலைஞர் ஒருவர் தான்.தேசிய அரசியலில் நிலையற்ற தன்மை(Political Instability) ஏற்படும்போதெல்லாம் உதவிக்கரம் நீட்டி ஆட்சியை தக்கவைக்க உதவியவர் இவரே. ஜனாதிபதி, பிரதமர் என்ற பதவிகள் தன்னை தேடிவந்த போதிலும் "என் உயரம் எனக்கு தெரியும்" என்று தட்டிக்கழித்தவர் கலைஞர் தான். அதனால் தான் என்னவோ தேசிய அரசியலும் மாநில அரசியலும் பல தசாப்தங்கள்(Decades) இவரை சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.
சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் நம்பிய ஒளியாக இருந்தார், அவர்கள் எதிர்பார்த்த வெளிச்சமும் இவரிடமிருந்து தான் கிடைத்தது. திரு . AN. சட்டநாதன் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து அதன் மூலம் 25 % இருந்த BC இடஒதுக்கீட்டை 31 % ஆகவும், 15 % பட்டியல் சாதி மக்களின்(SC) ஓடஒதுக்கீட்டை 18 % என்று உயர்த்தியவர்.(இது சட்டநாதன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிராக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)
1989 இல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(MBC) என்ற வகுப்பை உருவாக்கி அவர்களுக்கு 20 % இடஒதுக்கீடு தனியாக வழங்கினார். பட்டியல் சாதியிலும் நலிந்த மக்களான அருந்ததியர் இன மக்களுக்கு தனி ஒதுக்கீடாக 3 % . இஸ்லாமியர்கள் மற்றும் கிரிஸ்துவர்களுக்கென 3 .5 % சிறப்பு ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் வழங்கினார். நுழைவு தேர்வை நீக்கியது, மாநிலத்துக்கு என தனி தொழில்நுட்ப கொள்கையை வகுத்தது, மாநில அரசுக்கான தனி திட்டக்குழு உருவாக்கியது என வாய்ப்புகளை ஒரு பக்கம் உண்டாக்குவதும் அது அனைவர்க்கும் கிடைக்கும் வண்ணம் செய்வதும் முக்கியமானவையாக கருதினார்.
மாநில அரசின் அதிகாரங்களுக்காக தொடர்ந்து சுயாட்சி சமர் செய்த மாவீரன். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் முதலமைச்சரானதும், சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்களை ஆய்வு செய்தும், அரசியலமைப்பு சட்டத்தில் போதிய மாற்றங்களை கொண்டு வரவும் பரிந்துரைகளை வழங்கும்படி அமைக்கப்பட்ட குழு. அரசியலமைப்பு சதட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஒரு மாநில அரசு குழு அமைப்பது அதுவே முதல் முறை. விளைவு ஆட்சி கலைப்பு(1976 இல் நடந்த ஆட்சி கலைப்புக்கு இந்த அறிக்கை முக்கிய காரணமாகும் )
திமு கழகத்தின் இரண்டு முக்கிய அம்சங்களாக இடஒதுக்கீட்டையும் மொழி உரிமையையும் குறிப்பிடலாம், இரண்டுக்கும் எந்த ஆபத்துமின்றி காத்தவர் கலைஞர், மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி அகில இந்திய OBC மாணவர்களுக்கு 27 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. 1991இல் நடந்த ஆட்சி கலைப்புக்கும் அது கூடுதல் காரணமாகியது.
இப்படி எல்லாம் இழந்து இழந்து யாருக்காக உழைத்தார்? பயனடைந்தவர்கள் எல்லாம் தூற்றட்டும் என்றா உழைத்தார்? நாம் வாழ அவர் உழைத்தார், இந்த தமிழ் இனம் செழிக்க அவர் உழைத்தார், நலிந்தவருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் முடிந்த வரை ஒரு அரணாக இருந்து, நம்பியவரையும் நம்பாதவரையும் கரை சேர்த்த கட்டுமரம்.
எழுதவேண்டும் என்றால் எழுதி கொண்டே போகலாம், அவர் செய்த காரியங்கள் அப்படிப்பட்டவை. இந்த நினைவு நாளைக்கு நினைவில் இருந்தவை பற்றி மட்டும் பதிவு செய்துள்ளேன்.
இன்று தன் அண்ணனின் அருகில், வங்க கடல் ஓசையில் கவிதை பாடி கொண்டிருப்பார். அவர் புகழ் வளரும், தூற்றுவோர் தூற்றட்டும். "என் சுயநலத்திலும் ஒரு பொதுநலம் இருக்கும்" என்று சொன்னவர் இதெற்கெல்லாமா கவலைப்பட போகிறார்.
வாழ்க கலைஞர் புகழ்
வெல்க தமிழ்
Comments
Post a Comment