BUDDHA OR KARL MARX - ஒரு பார்வை

 BUDDHA OR KARL MARX - Dr. Ambedkar 



Equality will be of no value without fraternity or liberty.- Dr. BR Ambedkar. 

அண்ணல் அம்பேத்கர் எழுதிய Buddha or Karl marx என்கிற சிறு புத்தகம் இன்றைய சூழலிலும் மிக பொருத்தமானதாக இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இதை ஜனநாயகமா அல்லது சோசியலிசமா(Democracy or Socialism) என்றும் ஒப்பிடலாம். இரண்டிற்கும் இடையில் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது பல வேற்றுமைகள் இருக்கிறது, இரண்டும் சமத்துவத்தை(Equality) விரும்பும் கோட்பாடுகள். ஆனால் ஜனநாயகம் என்பது சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தை(LIberty and Fraternity) உடன் இணைத்து செயல்படுவதாகும். 

அம்பேத்கரும் இந்த நூலின் இறுதியில் சொல்வது அது தான் சமத்துவத்திற்காக சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் காவுகொடுக்க முடியாது. புத்தர் மற்றும் மார்ஸ் ஆகிய இருவரின் நோக்கம்(Ends) ஒன்று தான். ஆனால் அவர்கள் சொல்லும் வழி(means) வேறானது, அவற்றுக்கிடையே பெரிய அளவு வித்தியாசம் இருக்கிறது(same ends but different means). 
இந்த புத்தகத்தில் அம்பேத்கர், புத்தரின் கோட்பாடு என்ன?, மார்க்ஸின் கோட்பாடு என்ன? இரண்டுக்கும் உள்ள கருத்தியல் ஒற்றுமைகள் மற்றும் நோக்கங்கள் யாவை? அதை அடைய இரண்டு பேரும் பரிந்துரைத்த வழிகள் என்னென்ன? யாருடைய வழி சிறந்தது ? என்பன பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.  
புத்தரும் மார்க்ஸும் வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், இருவருக்கும் இடையே 2381 ஆண்டு வித்தியாசம் இருக்கிறது, ஆனால் இருவரின் கோட்பாட்டிலும் பல ஒற்றுமைகள் தென்படுகிறது. இரண்டு பேருமே சுரண்டல் முறையை எதிர்க்கிறார்கள், புத்தர் அத்தகைய சுரண்டலை தான் துயரத்தி(misery)ன் ஊற்றுக்கண் என்கிறார். தனியுடைமையை(private property) இருவருமே எதிர்க்கிறார்கள், சில அடிப்படை விசயங்களை தவிர எதையும் உடைமையாக்கி கொள்ள கூடாது என்று புத்தரின் சங்க நடவடிக்கைகளை மேற்கோளிடுகிறார் அம்பேத்கர்.

மார்க்ஸை பற்றி கூறும்போது, மார்ஸ் இரண்டு வித கருத்துக்களை நிறுவ முயற்சித்தார் ஒன்று முதலாளித்துவத்திற்கு(Capitalist) எதிரானது மற்றோன்று சோசியலிச கார்ப்பனவாதிகளுக்கு(utopian socialist) எதிரானது. சோசியலிசத்தை அறிவியலாக நிறுவிவுதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார், இயங்கியல் போக்கில் எல்லா சமுதாயமும் சோசியலிசத்தை அடைந்தே தீரும் என்றும் சொல்கிறார். இரண்டு வரகங்களுக்கிடையான மோதலே வரலாற்றை ஆக்கிரமித்துள்ளது என்றும் சொல்கிறார், இந்த கூற்று தவறானது என பலர் நிறுவியுள்ளார்கள். சர்வாதிகாரத்தின்(Dictatorship) மூலமும் உழைக்கும் வர்க்க புரட்சியின்(proletariat classs revolution ) மூலமும் தான் கம்யூனிசம் மலரும் என்று என்று ரஷிய புரட்சி நிரூபித்துள்ளது, இதன்படி பார்த்தால் மார்க்ஸின் சோசலிசம் இயல்பாக நிகழும் நிகழ்வு என்பது அடிபட்டு போகிறது. இப்படி பல்வேறு பிழைகள் இருந்தாலும் அதில் சில விஷயங்கள் பொருந்தி போகிறது குறிப்பாக

 1.தத்துவத்தின் நோக்கம் உலகை புனரமைப்பதே ஒழிய , உலகின் தோற்றத்தை விளக்குவதற்கு அல்ல. 
2.வரகங்களுக்கிடையிலான மோதல் போக்கு 
3.மக்களின் துயரத்திற்கு காரணம் தனியுடமை தான். 
4.தனியுடமையை அழிப்பதன் மூலம் மக்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும். (இப்போதைய காலகட்டத்தில் இதில் முதலாவதை தவிர மற்றவை எல்லாம் சூழலுக்கு பொருந்தி போவது அல்ல. )
இந்த நோக்கங்களை அடையும் வழியாக புத்தர் கூறுவதையும் மார்ஸ் கூறுவதையும் பட்டியலிடுகிறார், மார்க்ஸின் தத்துவங்களை ரஸ்சியாவில் எப்படி செயல்படுத்தப்பட்டன, அதில் ஏற்பட்ட விளைவுகள் எத்தகையது என்பன பற்றி எல்லா தெளிவாக பேசியுள்ளார். ருசியா புரட்சியின் வழியாக அமைந்த சர்வாதிகார அரசு கம்யூனிச சமுதாயத்தை ஏற்படுத்த எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்? அல்லது சர்வாதிகாரமே எத்தனை காலம் தான் தொடர்வது? சமத்துவத்திற்காக தனிமனித சுதந்திரத்தை எதற்காக இழக்க வேண்டும்? வன்முறையும் புரட்சியும் தான் கம்யூனிசம் அடையும் வழியா? இதை தாண்டி வேறு முறை ஏதும் இல்லையா? என்ற கேள்விகளை எல்லாம் விமர்சனங்களாக அடுக்குகிறார் அண்ணல். 
இறுதி பகுதியில், புத்தரின் கோட்பாடு என்பது மனிதனின் மனங்களிலும் பண்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி சமுதாய மாற்றங்களை அடைய விரும்பியதையும் அது வன்முறையை ஒரு நாளும் தூக்கிப்பிடித்ததில்லை என்றும் சில சூழலில் சக்தி ஒரு ஆற்றலாக(Force as energy) தேவையே ஒழிய அதை அடக்குமுறைக்கு(Force as violence) மட்டும் பயன்படுத்துவதை புத்தர் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். புத்தர்கள் வழி மக்கள் விரும்பாததைச் செய்ய நிர்பந்திக்கவில்லை,அது அவர்களுக்கு சரியானதாக இருந்தால் அதை செய்யுங்கள் என்றார். இதன் மூலமாக புத்தர் ஒரு ஜனநாயகவாதி(Democrat) என்றும் அவரின் கோட்பாட்டில் சமத்துவம் ஒரு அங்கம் தான், சுதந்திரமும் சகோதரத்துவமும் மற்ற இரண்டு முக்கிய கோட்பாடுகள் என்றும் குறிப்பிடுகிறார். 

ரஸ்சியாவில் அமைந்த சர்வாதிகார அரசு நிகழ்த்திய நல்ல மாற்றங்களை எல்லாம் புறம்தள்ளி விட முடியாது, பிற்போக்கு சமுதாயத்திற்கு வேண்டுமானால் அவை பொருந்தி போகலாமே ஒழிய, அதற்காக சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். மனிதனுக்கு எந்த அளவிற்கு பொருளாதார வசதிகள்(Material/external Comforts) தேவையோ அதே அளவுக்கு ஆத்மீக வசதியும்(Spiritual/internal comforts) தேவை.புத்தர் அத்தகைய வழிமுறையை தான் போதித்தார். கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகார வழியை விட புத்தரின் ஜனநாயக வழி சரியானது என்று முடிக்கிறார். 
நோக்கம் ஒன்று தான் வழிகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். சமத்துவத்திற்காக சுதந்திரத்தை பலிகொடுக்க முடியாது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் இணைந்து செயலாற்றுவது தான் சிறந்தது. சோசியலிசமே தீர்வல்ல, அதை தாண்டி கோட்பாடுகள் ஏராளம் இருக்கிறது. சோசியலிச மாயையில் இருந்து வெளியே வந்து நாம் பிற தத்துவங்களை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 
  


Comments