மெய்யான அதிகாரம் எங்கே செயல்படுகிறது?
மெய்யான அதிகாரம் எங்கே செயல்படுகிறது? நிச்சயமாக வெளிச்சத்தில் அல்ல, இருளிலும் நிழலிலும்தான் மெய்யான அதிகாரம் செயல்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் சட்டமன்றமும் , ஆட்சிமன்றமும், நீதிமன்றமும், இவை மூன்றுக்கும் இடையில் நிகழும் மறைமுக ஊடாட்டமும் மீண்டும் மீண்டும் இந்த கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
அப்படி நிகழ்ந்த ஒரு ஊடாடத்தின் அத்தியாயம் இந்த வாரத்தோடு நிறைவை எட்டுகிறது. ஆம், நவம்பர் 10-ம் தேதியோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY Chandrachud-ன் பதவிக்காலம் நிறைவடைகிறது. கிட்டத்தட்ட இரண்டடுகாலம் பல முக்கியமான திருப்பம் தரும் தீர்ப்புகளை அவர் வழங்கி இருக்கிறார். அவருடைய இரண்டாண்டு செயல்பாடுகளை மதிப்பிடுகிறது Saurav Das எழுதியுள்ள Caravan நவம்பர் மாத கவர் ஸ்டோரி. இவர் ஏற்கனவே NV Ramana ஓய்வுபெற்றபோது, அவர் கையாண்ட முக்கியமான 9 வழக்குகளின் அன்றைய நிலையை எடுத்துக்கூறி ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அபாரமான கட்டுரை அது, Article 14 வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நெடுங்கட்டுரையும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அறச்சீற்றத்தோடே எழுதப் பட்டிருக்கிறது.
மராத்தி பார்ப்பனரான DY Chandrachud-க்கு இந்திய மத்தியத்தர வர்க்கத்திடமும், லிபரல்களிடமும் ஒரு ‘முற்போக்கு புரட்சி முகம்’ இருக்கவே செய்தது. அவர் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றதும் பல முக்கிய வழக்குகளில் புரட்சிகர தீர்வுகளை வழங்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நீதியை எதிர்பார்த்த அனைவருக்கும் எஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளையும் அதன் முடிவுகளையும் ஒன்றிய ஆட்சியாளர்களின் மனம் நோகா வண்ணம் எதிர்கொண்டது இவரது சாதுரியமாக இந்த கட்டுரை வாதிடுகிறது.
அதைப்போலவே வலதுசாரிகளும் அவரை பெரிதாக எதிர்த்தபாடில்லை. வாஜ்பாய் அரசு ஒன்றியத்தில் ஆட்சி செய்த 2000-ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார் Chandrachud. இந்தியாவில் அவ்வளவு இளம் வயதில்(41) உயர்நீதிமன்ற நீதிபதியானவர் அவர் தான்.
அமித்ஷா தொடர்பு பட்டிருந்த Soharabuddin encounter வழக்கின் நீதிபதி லோயா-வின் சர்ச்சைக்குரிய மரணத்தை நீர்த்துப்போகச் செய்ததில் Chandrachud-க்கு முக்கிய பங்கிருப்பதாக இந்த கட்டுரை தெரிவிக்கிறது.
தனிமனித சுதந்திரம், பால் புதுமையினர் மற்றும் பாலின உரிமைகள், கருத்து சுதந்திரம், தொடர்புடைய வழக்குகளில் புரட்சிகரமான தீர்ப்புகளையும், செறிவான கருத்துரைகளை வழங்கினாலும், மனித உரிமை சார்ந்த வழக்குகள், தொழிலாளர் சிக்கல்கள், பழங்குடியின மக்கள் தொடர்புடைய வழக்குகள், இருப்பிடம், உணவு, சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் சம்பந்தமான வழக்குகளை இவர் தொட்டுப் பார்த்தது கூட இல்லை என்பதாக இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. சர்ச்சைகளை, ஆளும் அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் செயல்களை அதிகளவில் இவர் தவிர்த்தே இருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற முறையில், நீதிமன்ற நியமனங்களைக் கையாள்பவர் Chandrachud தான்(Master of the roster). நீதிபதிகளின் நியமனங்கள், இடம் மாறுதல்கள், வழக்குகளின் அமர்வுகளைத் தீர்மானித்தல் போன்றவற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒன்றிய ஆட்சிமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது இந்த கட்டுரை.அதற்கான சான்றுகளையும் அடுக்குகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எல்லாம் ஆட்சியாளர்களுக்குச் சாதகமான நீதிபதிகளிடம் ஒப்படைப்பதில் வல்லவராகவே திகழ்ந்துள்ளார் நீதிபதி Chandrachud.
முற்போக்கு, சீர்திருத்த அடையாளத்தையும் தக்கவைத்துக்கொண்டு ஆட்சியாளர்களின் மனமும் புண்படாமல் தனது ஆட்சிக்காலத்தை சுமுகமாக நிறைவு செய்ய இருக்கிறார் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. அவரின் தொடக்க காலத்தில், பதவியேற்பின் போது கூட அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க விரும்பாத இவர் இன்றைக்கு ஒன்றிய பிரதமர் மோடியோடு விநாயகர் பூஜையை தன்னுடைய இல்லத்தில் கொண்டாடி இருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் ‘என்னுடைய சொற்களைக் காட்டிலும் செயல்கள் அதிகம் பேசும்’ என்றவர் செயல்களால் பேசி இருக்கிறார்.
இந்த கட்டுரையின் முடிவு உண்மையிலேயே உச்சம்தான், அதை ஆங்கிலத்தில் அப்படியே படிப்பது ஆழம் குன்றாமல் அர்த்தப்படுவதாக இருக்கும்
“Before he became chief justice, he often used to say, ‘Independence of the judiciary means you must speak truth to power.’ But he doesn’t say that anymore,” Colin Gonsalves observed. “He knows people understand that he was unable to speak truth to power.” Like the new Lady Justice statue, Chandrachud has likely done this with his eyes open.
performative justice என்ற தலைப்பு இப்போது அர்த்தப்படுகிறது. அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை. அபாரம்
Comments
Post a Comment