Caste, Police and Mudukulathur Murder

Disclaimer: பதிவின் சாரம் புரிவதற்காக சாதி பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
Warning: Caste and religion are against Humanity! 

“The oppressors who oppress, exploit and rape by virtue of their power cannot find in this power the strength to liberate either the oppressed or themselves. only the power that springs from weakness of the oppressed will be sufficiently strong to free both.”

 - paulo freire


தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் lockup மரணங்கள்(கொலை) எல்லாம் சமீபத்தில் நடந்தாலும் இதன் வேர்கள் விடுதலைக்கு முன்பான காலனிய காவல்துறை அமைப்புமுறை வரை நீள்கிறது. இப்படி காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகள், வன்முறைகள், தனிநபர் தாக்குதல்கள் என எல்லாவற்றிற்கு பின்னாலும் அரசு அதிகாரத்தோடு சேர்த்து சாதியும் இயங்குகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவு என்பது மிக கொடூரமானதாகவும், சாதிய கட்டுமானங்களை இறுக்கமானதாகவும் மாற்றியுள்ளது. 

சமீபத்தில் வெளியான “Police Matters- The everyday state and caste politics in south india (1900-1975)” என்கிற புத்தகம் தமிழ்நாட்டில் காவல்துறையின் பரிணாமத்தை தெளிவாக பேசுகிறது. அதை போலவே 2017 ஆம் ஆண்டு வெளியான”Murder in Mudukulathur- Caste and Electoral Politics in Tamilnadu” என்கிற புத்தகம் முதுகளத்தூர் படுகொலையை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களை பேசுகிறது. இந்த கட்டுரை இவ்விரண்டு புத்தகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. இப்படி ஒரு கட்டுரையை எழுத ஊக்குவித்த Jeyannathann Karunanithi
 அண்ணனுக்கு அன்பும் நன்றியும். 

பிரிட்டிஷ் காலனிய அரசு இருந்த காலத்தில் தங்களின் நிறுவனங்களை பாதுகாக்கவும், நகரங்களில் நடக்கும் வர்த்தகத்தை பராமரிக்கவும், நகரங்களில் குற்றங்கள் நடக்காமல் சமூக ஒழுங்கை பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். பின்னாட்களில் இது கிராமங்களுக்கும் நீள்கிறது, காவல் துறையின் கண்காணிப்பில் கிராமங்களும் கொண்டுவர படுகிறது. கிராமம்களில் உள்ள சாதிய அமைப்பு முறையோடு காலனிய அரசின் காவல் அமைப்பு முறை உறவாடும்போது(Interact) அது அங்குள்ள உயிர்சாதிகள் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியோரின் சுரண்டலுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காகவும் செயல்பட்டு வந்தது. 

அப்போதிருந்த சாதிய சூழலில் பார்ப்பன மற்றும் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்கள் காவல்துறை பதவிகளில் அதிகளவில் ஈடுபட்டிருந்தார்கள் . குற்றப்பரம்பரை சட்டம் தமிழகத்தில்(Criminal tribes act) 1911 ஆண்டு தான் நடைமுறை படுத்தப்படுகிறது. இது கள்ளர் மறவர் குறவர் போன்ற சமூகங்களை குற்றபரம்பரையாக பதிவுசெய்கிறது, 1930 களில் இதற்கு எதிரான போராட்டங்களுக்கும் மறவர் சமூக மக்களால் நடத்தப்படுகிறது. 

முத்துராமலிங்க தேவர் இந்த சமயத்தில், அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொள்கிறார் பின்னர் அதில் ஏற்பட்ட சிக்கல்களால் Forward bloc கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தலைவர் பொறுப்புக்கு உயர்கிறார். இதே சமயத்தில் தான் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நாடார் சமூக மக்களின் பொருளியல் முன்னேற்றமும், சமஸ்கிருதமயமாக்களும் பெரிய அளவில் உச்சத்தை அடைகிறது, 1950களில் காமராஜ் நாடார் முதலமைச்சராகிறார். தென் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையை கொண்ட பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்களின் அரசியல் விழிப்புணர்வு ஒரு வடிவம் பெறுகிறது, இதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக தெரிகிறது அச்சமூக மக்கள் ராணுவத்தில் சேர்கிறார்கள், சிலர் வெளிநாடுகளில் வேளைக்கு செல்கிறார்கள்(1930 இல் நடந்த Great depression இதை பாதிக்கிறது), கிறிஸ்துவ மிஷனரிகள் ஏற்படுத்தப்படுகிறது, இவர்களுக்கு எதிரான குற்றங்களை காவல்துறை பெரியளவில் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற காரணிகளால் அந்த அரசியல் எழுச்சி நடக்கிறது.    

சாதிய கட்டுமானத்தில் தங்களுக்கு கீழே இருந்த நாடார் சமூக மக்களின் வளர்ச்சியும், பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)(தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்களின் அரசியல் எழுச்சியும் மறவர் சமூக மக்களிடையே ஒருவித சமூக பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகிறது. இதை தொடர்ந்து இச்சமூகங்கள் இடையே நிறைய சிக்கல்கள்/வன்முறைகள் ஏற்படுகிறது. 

1950 களுக்கு பிறகு முத்துராமலிங்கத்தின் “Forward bloc” கட்சி பெற்ற செல்வாக்கினால் தென் தமிழகத்தில் குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைகிறது. ஒரு பக்கம் திராவிட இயக்கங்களில் செயல்பாடு முற்போக்கானதாகவும், Forward bloc போன்ற கட்சிகளில் நடவடிக்கைகள் பிற்போக்கானதாவும் இயங்கி காங்கிரஸ் அரசியலுக்கு சிக்கலை ஏற்படுத்தியது . இந்த கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் அரசின் ஆதரவோடு காவல்துறையால் முடக்கப்படுகிறது. 1957 தேர்தல் முடிவுகள் வந்த பின் தான் காங்கிரஸ் கட்சி தனக்கு வரப்போகும் அபாயத்தை உணர்ந்திருந்தது. 

செப்டம்பர் 10 ஆம் தேதி அன்றைய ராமநாதபுர மாவட்ட ஆணையர் C.V.R. Panikkar பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)மற்றும் மறவர் சமூக மக்களிடையே நடக்கும் வன்முறைகளை தீர்த்துவைக்க ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறார், ஆனால் இதனால் வரப்போகும் விபரீதத்தை அவர் அறிந்திருக்கவில்லை. இமானுவேல் சேகரன், முத்துராமலிங்கம் மற்றும் அந்தந்த சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு உடன்படிக்கை ஏற்படாமல் போனதால் தனித்தனியாக கையெழுத்து பெறப்படுகிறது. பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூகத்தை சேர்ந்த இம்மானுவேல் சேகரன் எதிர்த்துப்பேசினார்(உரிமைக்காக) என்பதாலும், முத்துராமலிங்க தேவருக்கு இருந்த சாதிய மனோபாவத்தாலும் அந்த உடன்படிக்கை கையெழுத்தாகவில்லை. 

பரமக்குடியில் செப்டம்பர் 11 இரவு, இம்மானுவேல் சேகரன் மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்படுகிறார். ஆனால் இந்த நிகழ்வு வன்முறைகளை பெரியளவில் ஏற்படுத்தவில்லை, இந்த படுகொலையை விசாரிக்க செப்டம்பர் 14 இல் கீழத்தூவல்(Keelathooval) என்கிற கிராமத்திற்கு காவல் துறை செல்கிறது, அன்றைக்கு நடந்த தூப்பாக்கிசூட்டில் மறவர் சமூகத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் இறந்து போகிறார்கள்,அது காவல்துறையால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட படுகொலை.

காவல்துறையினால் அது திட்டமிடப்படாத துப்பாக்கிச் சூடு(Unplanned police firing) என்று கூறப்பட்டாலும், அங்குள்ள சாட்சிகள் வேறு விதமாக தான் சொல்கிறார்கள் [ சில பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்கள் உட்பட]. மறவர் சமூகத்தை சேர்ந்த நபர்களை ஒரு பள்ளியில் பூட்டிவைத்துவிட்டு, சந்தேகத்திற்குரிய 5 இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களின் கைகள் கண்கள் கட்டப்பட்டு காவல்துறையால் சுடப்பட்டார்கள், அரசின் இந்த நடவடிக்கை அங்கிருந்த மறவர் சமூக மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

 இதை தொடர்ந்து பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன,கலவரம் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது. இந்த சமயத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில், பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூகத்தை சேர்ந்த 18 பேரும் மறவர் சமூகத்தை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்தார்கள். பொருட்களும், வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சிகள் அரசிடம் "நீதி விசாரணை" நடத்த சொல்லி கேட்டும் காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை. இந்திய அளவில் இந்த சம்பவம் பெறும் அதிர்வலையை உண்டாக்கியது. 

முத்துராமலிங்கத்தின் கைதை அடுத்து இந்த வன்முறை சம்பவங்கள் குறைய தொடங்கியது, Preventive Detention சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்க தேவரின் காங்கிரஸுக்கு எதிரான(Anti-Congress) அரசியலை மட்டுப்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் அன்றைய முதல்வர் காமராஜ் நாடார் எடுத்த நடவடிக்கையாக இதை அணுகவேண்டியுள்ளது. அதன் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டு 1963 ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் கள்ளர், மறவர், அகமுடையார் என்கிற தனி தனி சாதி குழுக்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி அதை ஒரு அடையாள அரசியல் குழுவாக(தேவர்/ முக்குலத்தோர்) வார்த்தெடுத்தது. 
முத்துராமலிங்கத்தின் மறைவுக்கு பிறகு பெரும்பாலான தேவர் சமூக மக்கள் திமுகவை நோக்கி நகர்ந்தார்கள், பின்னாளில் அவர்கள் அதிமுகவின் முக்கிய வாக்குவங்கியாக மாறிப்போனார்கள். கள்ளர் சமூக மக்களின் வாக்குவங்கியை குறைந்த காலத்திற்கு காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டது. பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்களிடையே ஒரு அரசியல் விழிப்புணர்வை இது ஏற்படுத்தியது. 

இந்த சம்பவங்கள் எல்லாம் அங்குள்ள பகுதி மக்களின் சமூக- பொருளாதார வளர்ச்சி இன்மையின் விளைவாக தான் பார்க்கவேண்டி இருக்கிறது, அங்கு பள்ளிகளை ஏற்படுத்தியும் சாலைகள் அமைத்தும் அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த அரசு முயற்சித்தது. ஆனாலும் அதை தொடர்ந்து சாதிய வன்முறைகள் நடந்தவண்ணம் தான் இருக்கிறதே ஒழிய, நின்றபாடில்லை. 

இந்த கலவரங்களின் வடு இன்றளவும் தொடர்கிறது, வருடா வருடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்தது 2 முறையாவது CrPC section 144 அமல்படுத்தப்படுகிறது(ஊரடங்கு). 
எல்லா சாதிய வன்முறைகளுக்கு பின்னாலும் அரசின் ஆதரவோடு நடக்கும் காவல் துறையின் அடக்குமுறை இருக்கத்தான் செய்கிறது, இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் காவல்துறையின் அதிகாரத்தோடு சேர்ந்து சாதிய அதிகாரமும் தென் தமிழக கிராமப்புறங்களில் ஏற்றத்தாழ்வுகளை உயிர்ப்புடன் வைத்தது மட்டுமல்லாமல் சாதிய அடையாளங்களை இறுக்கமானதாக ஆகியுள்ளது. 

2011 ஜெயலலிதா தலைமயிலான அரசு செப்டம்பர் 11 அன்று நடத்திய பரமக்குடி துப்பாக்கிசூட்டில் இம்மானுவேல் சேகரனின் நினைவை அனுசரிக்க வந்த ஆயிரக்கணக்கானோரில் 5 பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)சமூக மக்கள் உயிரிழந்தார்கள், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். 1957 முதுகளத்தூர் படுகொலையும், அதை தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவை இன்றளவும் தென் தமிழகமும், பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்)மற்றும் தேவர் சமூக மக்களும் சந்தித்து வருகிறார்கள் என்பதே நிதர்சனம். 





Comments

Post a Comment