மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி! ft. kalaignar





மாநிலத்தில் சுயாட்சி 


சுயமரியாதையின் நீட்சி மாநில சுயாட்சி என்பதாகும், திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவங்களில்  ஒன்று தனிமனித  சுதந்திர வேட்கை(LIberty) , அதன் காரணமாக உருவானது தான் சுயமரிதை இயக்கம்(Self Respect movement). பின்னர் தேர்தல் அரசியலில் திமுக பங்குபெற தொடங்கிய போது திராவிடநாடு  கோரிக்கையை தேர்தல் அறிகையிலேயே குறிப்பிட்டு தேர்தலை சந்தித்தது. இந்திய- சீன போர் காரணமாக பிரிவினை தடைச்சட்டம் வந்த போது, “எங்களுக்கு திராவிடநாடு நேருவிடமிருந்து தான் வேண்டுமே ஒழிய சீனர்களிடமிருந்து வேண்டாம்” என்று கூறி அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். அதன் விளைவாக இந்திய இறையாண்மைக்குட்பட்டு மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள்/உரிமைகள்  வழங்கப்பட வேண்டும் என்று எழுந்த கோரிக்கை தான் "மாநில சுயாட்சி". 


மாநில சுயாட்சி பிரிவினை  கோரிக்கை அல்ல, மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ள மாநில அரசுகளுக்கு அதிகப்படிய அதிகாரங்களை வழங்கி அரசின் சட்ட திட்டங்களை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் எழுந்த கோரிக்கை. அதிகார பரவலாக்கத்தை(Decentralisation) ஆதரித்தும் அதிகார குவிப்பை எதிர்த்தும் எழுந்த முழக்கம் மாநில சுயாட்சி. அது அரசியல், சமூக, பொருளாதார அதிகார குவிப்புக்கு எதிரானது, அனைத்தையும் எளிமைப்படுத்த அதிகார பரவலாக்கம் அவசியம் என்கிற அடிப்படையில் எழுந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 


1967இல் தான் ஒரு மாநில கட்சி காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது, அதன் பின்பு தான் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இருக்கும் அதிகார சிக்கல்கள் புரிய வருகிறது, இதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம் 

1. இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலத்திலும் ஒன்றியத்தில் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதனால் 

2 . திட்டக்குழுவில்(Planning Commission) ஒன்றிய அரசின் மறைமுக ஆதிக்கத்தினால் 

3 . மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசுகள் ஒன்றிய அரசிடம் வேண்டியவற்றை கேட்காமல் இருப்பதினால் (முதல் காரணத்தின் விளைவு)


எனவே இந்திய அரசியலைப்பு சட்டத்தில் போதிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என பேரறிஞர்  அண்ணா  நீண்டநாட்களாக பேசியும் எழுதியும் வந்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கூட இத்தகைய கோரிக்கையை அங்கு எழுப்பியிருக்கிறார் . எனவே அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் முதலமைச்சரானதும், சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் மூன்று பேர் கொண்ட நிபுணர்  குழு ஒன்றை அமைத்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்களை ஆய்வு செய்தும்,  அரசியலமைப்பு சட்டத்தில் போதிய மாற்றங்களை கொண்டு வரவும் பரிந்துரைகளை வழங்கும்படி அமைக்கப்பட்ட குழு. அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று ஒரு மாநில அரசு குழு அமைப்பது அதுவே முதல் முறை. 


1971இல் ராஜமன்னர் குழு அறிக்கை வெளியானது. இந்தியாவில் உள்ள பிற மாநில முதலமைச்சர்கள்  மற்றும் தலைவர்களுக்கும் அந்த குழுவின் வாயிலாக சில கேள்விகள் அனுப்பப்பட்டது, அதன் காரணமாக சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை கலைஞருக்கு அர்பணிக்கப்படுவதாக(Dedication) குறிப்பிடப்பட்டது. 1976இல் நடந்த ஆட்சி கலைப்புக்கு இந்த குழுவும் ஒரு காரணமாக கருதப்பட்டது. இந்த குழு அறிக்கை பற்றி அன்றைய ஆந்திர முதலமைச்சரான ராமகிருஷ்ணா ஹெக்டே விடம் கலைஞர் ஆலோசித்தார். அந்த அறிக்கையை பார்த்து வியந்த ஆந்திர முதலமைச்சர்,

1983இல் தென்னிந்திய முதலமைச்சர்களை சந்தித்து ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார். கேரள அரசின்  காங்கிரஸ் முதலமைச்சரை தவிர எம்ஜியார் உட்பட பிற தென் இந்திய மாநில முதல்வர்கள் கூட்டம் நடந்தது. இதை பார்த்து அதிர்ந்து போன இந்திராகாந்தி பாண்டிச்சேரியில் பெரும்பான்மையுடன் நடந்துகொண்டிருந்த திமுகழக ஆட்சியை கலைத்தார்.  


ராஜமன்னார் குழு அறிக்கைக்கு பிறகு மாநில சுயாட்சி கோரிக்கை இந்திய அளவில் பெரிய விவாதமானது, அதை ஒட்டி முரசொலி மாறன் அவர்கள் "மாநில சுயாட்சி" என்கிற புத்தகத்தை எழுதுகிறார், மிக முக்கியமான கருத்தாழமிக்க புத்தகம். அதில் கலைஞர் எழுதியுள்ள அணிந்துரை முக்கியமானதாகும் "சிறையில் இருந்து நாடு விடுதலை பெற்றது, கதவு திறந்தது. கை, கால் விலங்கு மட்டும்  கழற்றப்படவில்லை. மனிதன் விடுதலையாகிவிட்டான் கை கால்கள் மட்டும் கட்டுண்டு கிடக்கத் தேவையில்லையே! இந்தியா, விடுதலை பெற்றுவிட்டது. அதன் அவயங்களைப் போன்ற மாநிலங்கள்   மட்டும் மத்திய அரசுக்கு தேவையில்லாத அதிகார குவியல்கள் என்னும் விலங்குகளால் கட்டுண்டு கிடப்பானேன்?” 


மேலும் ஒரு ஜனநாயக நாட்டில் நியமிக்கப்பட்ட கவர்னர் தான் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்ற வேண்டியுள்ளது பின்னர் மாநில முதலமைச்சர்கள் எதற்கு? கொடி ஏற்றும் சிறிய அதிகாரம் மட்டுமே மாநில சுயாட்சியா? இல்லை, ஆனால் தேசிய கொடியை ஏற்றுவது என்பது சின்ன விசயமல்ல என்றும் கூறியிருப்பார். பின்னர் அவர் மாநில முதலமைசர்கள் கொடி ஏற்ற உரிமை வாங்கித்தந்தார் என்பது வரலாறு.  


இப்படி மாநில சுசுயாட்சிக்கு தேவையான அனைத்து விதமான உரிமைகளை வாங்கும்  முயற்சியில் கடைசி வரை அவர் விடாப்பிடியாக சமர் செய்தார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று . 


மத்தியில் கூட்டாட்சி 


கூட்டாட்சி என்பது புரிதலின் பெயரால் ஏற்படும்  ஒரு ஒப்பந்தம், இந்தியா என்பதே ஒரு கூட்டுறவு கூட்டாட்சி(Cooperative federalism) என்பார்கள். காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைய தொடங்கிய காலகட்டம், அவசர சட்ட பிரகடனத்துக்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் ஜனதா கட்சி(Janata party) தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தது.  எமெர்ஜென்சியை தீவிரமாக எதிர்த்த  ஜெயப்ரகாஷ் நாராயணன்(JP) தலைமையில் ஒரு அணி அமைந்தது, அதில் முதலில் இணைந்தவர் கலைஞர் அவர்கள் தான். இந்தியாவில் பல பகுதிகளுக்கு பயணம் செய்து எமெர்ஜென்ஸிக்கு எதிரான பரப்புரையை கலைஞரும் துணிந்து செய்தார். அதன் பின் ஒன்றிய அரசில் ஏற்பட்ட பல்வேறு ஆட்சிமாற்றங்களில்  அரசியல் கட்சிகளை இணைப்பதில்  முக்கிய பங்கினை செலுத்தியுள்ளார் . எப்போதெல்லாம் இந்திய அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை(Instability) நிலவுகிறதோ அப்போதெல்லாம் கலைஞர் தலையிட்டு ஒரு நிச்சயத்தன்மையை(Stability) கொடுப்பார். Common minimum program(CMP) எனப்படும் செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே அவரின் கூட்டணிகள் அமைந்தது. 1967 சட்ட்டமன்ற தேர்தலில் ராஜாஜியோடு கூட்டணி வைத்த அண்ணா இவ்வாறு கூறுவார் " கொள்கையில் உறுதியோடு இருந்தால் யாரோடு சேர்ந்தாலும் அழிந்து போக மாட்டோம்" என்று. கலைஞர் அமைத்த கூட்டணிகள் காரணத்தை எல்லாம் அண்ணாவின் இந்த வாக்கியத்தை  வைத்து புரிந்துகொள்ளலாம். 


என்னை கேட்டல் 90களில் வாஜ்பாய் தலைமையில் கலைஞர் அமைத்த  கூட்டணியும் சரியான ஒன்றே, தொடர்ந்து 15 வருடம்(1998-2014) தமிழக அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிய அரசில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள். அதனால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் ஏராளம் எனலாம், நாம் அந்த காலகட்டத்தில் தான் பொருளாதார ரீதியாக  அதிகம் வளர்ந்தோம். 


மாநில காட்சிகள் எல்லாம் கூட்டாக சேர்ந்து ஒன்றியத்தில்  ஆட்சி செய்யும்போது தான் மாநிலங்களுக்கான உரிமைகள் ஒருஅளவுக்கேனும் நிவர்த்தியடையும் என்கிற நெடு நீண்ட கனவின் விளைவு தான் கூட்டாட்சி தத்துவம். அதற்கான காலம் கனிந்து வருகிறது. மாநில காட்சிகள் விழித்துக்கொண்டு அதற்கான செயல்திட்டங்களை ஏற்படுத்தி வெற்றி பெறுவார்களேயானால் அது கலைஞருக்கு கிடைத்த வெற்றியாக பதிவுசெய்யப்படும்.   


மலர்க மாநில சுயாட்சி !

வெல்க கூட்டாட்சி தத்துவம்! 

வாழ்க கலைஞர் புகழ் !



கெளதம் ராஜ் 

Comments