அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் KRS

அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் KRS




ஆங்கிலத்தில் “Putting centuries into capsules” என்று ஒரு சொற்சொடர் உள்ளது, அதற்கு தகுந்த சாட்சி/ எடுத்துக்காட்டு இந்த புத்தகம் தான்.பல நூற்றாண்டுக்கு சொந்தமான தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்.  ட்விட்டரில் முனைவரது பதிவுகளை தொடர்பவன், ஒருவொன்றும் உண்மை தரவுகளை அடிப்படையாக கொண்டிருக்கும். இந்த புத்தகம் அப்படிப்பட்ட ஒன்று தான், படிக்க படிக்க "இன்ப தேன் வந்து பாய்ந்தது". நம் தலைமுறைக்கு இப்படி பட்ட எழுத்துக்கள்/புத்தகங்கள்  தான் தேவை, முனைவர் போன்ற எழுத்தாளர்கள் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். 


மொழியில் இருந்து மதத்தை பிரித்து பார்ப்பதும், அதனை அறிவியல் பூர்வமாக அணுகுவதும், நவீன சூழலுக்கேற்ப மாறி கொள்வதும் எவ்வளவு அவசியம் என்பதை "அறியப்படாத தமிழ்மொழி" அழுத்தமாக கூறிச்செல்கிறது. தமிழ் இலக்கியத்தில் இடைச்சொருகப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்தும்  காட்டியுள்ளார். தமிழ்மேல் ஆர்வமும், அதன் வளச்சியின் மேல் அக்கறையும் கொண்ட ஒருவரால் தான் இத்தகைய நூல்களை எழுத முடியும். (மிகைப்படுத்தவில்லை, உண்மை அதுவே!).


நூலின் அனைத்து பகுதிகளும் என்னை கவர்ந்திருந்தது, குறிப்பாக கல்தோன்றி மண்தோன்றா தமிழ்ப் பொய்யா?,  தமிழ் மறைப்பு அதிகார, தொல்காப்பியத்திலே சாதி உண்டா ?, எது முதல் தினை முல்லையா? குறிஞ்சியா?, ஆகிய பகுதிகள் எல்லாம் என் Personal Favorite என்றே சொல்லலாம். 


இது ஒரு “பேசும் புத்தகம்” என்றே நூலை தொடங்கியுள்ளார், இந்த உரையாடல் அறிவூட்டும்! கூடவே உணர்வூட்டும் உரையாடல். தமிழ் மீதுள்ள காதலை  இன்னும் மெருகூட்டும் உரையாடல், தேடல் ஊற்றை தூண்டி விடும் உரையாடல். தமிழ்மீது ஆர்வம் அற்றவர்கள் கூட இந்த நூலை வாசித்தல், தமிழை நேசிக்க தொடங்கிவிடுவார்கள். 


தமிழ் என்ற சொல்லின் அர்த்தம் இனிமை/நீர்மை, தொல்காப்பியம் தான் தமிழின் அடிப்படை. தொல்காப்பியத்தில் பல இடைச்சொருகல்கள் நடந்துள்ளது என்பதை அந்தந்த வாக்கியங்களோடு விளக்குகிறார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோமே, அந்த சங்கம் என்பது சங்கிகள் சொல்வது போல் வடமொழி சொல் அல்ல, "சங்கு முழங்கி" தொடங்கும் நிகழ்வு தான் சங்கம். வடமொழி கலப்பில்லாத தமிழ் சுகமே.  


மேலும் தமிழா? திராவிடமா? என்ற விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளும்படியான  முடிவை வரலாற்று புவியியல் காரணங்களோடு தெளிவுபடுத்தியுள்ளார். திராவிடம் என்பது ஒரு திசை சொல்லே, பழமை வாய்ந்த   கிரேக்க ஆவணம் ஒன்றில் அதற்கான சான்றுகள் இடம்பெற்றுள்ளது. சமஸ்கிருதமும் பிற உலக நாடுகள் பயன்படுத்தியதை போல் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டது . திராவிடம் சமஸ்கிருத  சொல் அல்ல. தமிழ் என்பது Endonym(மூல மொழியில் வழங்கும் பெயர்) திராவிடம் என்பது Exonym (உலகம் வழங்கும் பெயர்). “யவனம்” போல் திராவிடமும் ஒரு திசை சொல்லே. 


கம்பரை கொண்டாடும் அளவுக்கு இளங்கோவடிகள் கொண்டாட படாமல் இருப்பதற்கு காரணம் மதம் பிடித்த சில பண்டிதர்கள் தான். சிலப்பதிகாரம் மக்களின் காப்பியம், கம்பர் எழுதியது அரச காப்பியம். கம்ப ராமாயணம் சொல்வதை விடவும் சிலப்பதிகாரம் கூறும் நீதியும்/ஒழுக்கமும் தமிழ்சூழலுக்கு முக்கியமானது. மேலும் தெளிவு பெற அண்ணாவின் “தீ பரவட்டும்” என்ற நூலை படியுங்கள். 


தமிழ் புத்தாண்டு சித்திரையா? தையா? என்ற கேள்விக்கும் விடை உள்ளது. இது தான் புத்தாண்டு என்பதற்கு தமிழ் இலக்கியத்திலும் கூட சரியான ஆதாரங்கள் இல்லை, எல்லாம் இடைச்சொருகப்பட்டவையாக தான் இருந்து வருகிறது. ஆனால் சங்க  இலக்கியங்களில் தை மாதம் அதிகம் பேச படுகிறது, சிறப்பான மாதம்,மேலும் தை 2 வள்ளுவர் தினம் என்பதாலும் தமிழறிஞர் பலர் கூடி எடுத்த முடிவு தான் தை 1 தமிழ் புத்தாண்டு என்பது.அது ஒரு கட்சியின் கொள்கை அல்ல, தமிழ் வரலாறு கூறும் செய்தி.  60 ஆண்டுகள் மட்டும் இருக்கும் சமஸ்க்ருத புத்தாண்டு நமக்கு எதற்கு. சங்க இலக்கியம் போற்றும் தை மாதமே நமக்கு புத்தாண்டு.  


சங்க காலத்தில் சாதி இருந்ததா? என்றால் இல்லை, தொல்காப்பியத்தில் சாதி என்ற சொல் அஃறிணைக் குறிப்பாகவே வருகிறது(சாதி முத்து(சிறப்பான முத்து), சாதி மல்லி, சாதி காய்  ). வடமொழியில் ‘ஜா’ என்றால் பிறப்பு என்று அர்த்தம் . தமிழில் சாதி என்பது திணிக்கப்பட்ட ஒன்றே. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று முழங்கிய திருகுறளும் சாதியற்ற, மதமாற்ற அனைவர்க்கும் பொதுவான ஒரு நூலே. அதற்கு தமிழ் சாயத்தை தவிர  எந்த சாயமும் இல்லை. 


பகுத்தறிவு பார்வையில் தமிழை அணுகினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பது இந்த நூலில் மூலம் புலப்பட்டது. தமிழ் என்பது  சாதி-மதம்-சமயம் என்று எந்த அடையாளங்களுக்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒரு மொழி . நூலின் அட்டைப்படத்தில் இருப்பதை போல் நவீன/அறிவியல் தமிழ் மொழி கொண்டு சமஸ்கிருத புரட்டுகளையும், இடைபுகுந்த கட்டுக்கதைகளையும் வீழ்த்துவோம். 


பிற மொழி வெறுப்பு நமது கொள்கை  அல்ல, திணிப்பை எதிர்க்கிறோம், மொழி வழி நிறுவப்படும்  ஆதிக்கத்தை எதிர்க்கிறோம். இந்நூலில் இருந்து நான் கற்ற மற்றோரு முக்கிய பாடம் Reading between lines எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் முழு தகவலையும்(Holistic view) அறிந்து கொள்வது. அது எந்த பொருளில் வருகிறது, அதன் வரலாற்று சூழல் என்ன, என்பன பற்றி எல்லாம் புரிந்துகொள்ள முழு தகவலையும் அறிந்து வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் ஆரியம் நம் தலையில் மிளகாய் அரைத்துவிடும்.


அனைத்து பகுதிகள் பற்றியும்  எழுத வேண்டும் என்று ஆசை தான், ஆனால் நான் சொல்வதை விட நீங்களாகவே படித்தால் இன்னும் தெளிவு கிடைக்கும். இந்நூல் ஒரு பொக்கிஷம், தகவல் களஞ்சியம். அள்ள அள்ள கிடைக்கும் அறிவு கடல். 


நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தக பட்டியல் இருந்தால் இதனையும் சேர்த்து கொள்ளுங்கள். 


மேலும் வடமொழி எழுத்து தவிர்த்து சரியான தமிழில் எழுத இந்த வலைதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் - கிரந்தம் தவிர்! (tamilchol.com)


முனைவர் KRS அவர்களது டிவிட்டர் கணக்கை பின்தொடர - KRS | கரச (@kryes) / Twitter


வாழ்க தமிழ்! 

வளர்க பகுத்தறிவு !






Comments