THE ROAD TO SERFDOM - F. A. HAYEK

“The control of the production of wealth is the control of human life itself” - Hilaire Belloc

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் எழுதப்பட்டு 1944 இல் வெளிவந்த நூல் தான் FA Hayek என்னும் Austrian-british தத்துவவியலாளர் எழுதிய “The Road to serfdom”. இந்நூல் 2008 பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், மறுபதிப்பு செய்யப்பட்டு அதிக அளவில் வரவேற்பினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாகவே நம் அனைவரிடமும் இருக்கும் பொதுப்புத்தி என்னவென்றால், குழு மனநிலையும்(Collectivism), சோசலிசம் தான் நமது அனைத்து விதமான சிக்கல்களையும் தீர்க்கபோகிறது என்கிற அபரிமிதமான நம்பிக்கையுமாகும். 

கூட்டுவாதம் மற்றும் தனித்துவம்(collectivism and individualism) என்ற இரண்டு தத்துவங்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை. மன்னராட்சியின்(Monarch) பிடியில் இருந்தும், மதவாத அடிப்படைவாதிகளிடமிருந்தும்(Church) மனிதனை விடுவித்ததில் பிரெஞ்சு புரட்சிக்கு(1789) பெரும்பங்குண்டு. அது மறுமலர்ச்சி(Renaissance) மற்றும் அறிவொளி(Enlightenment) தத்துவங்களின் காலம்.  

சுதந்திரம்(Liberty) என்கிற தத்துவம் கூட்டுவாதத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக நிறுவப்பட்டது. அதிகாரத்துவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மனிதன் சுயமாக சிந்திக்க தொடங்கி, அதன் பின் தான் அறிவியலும் பிற சிந்தனைகளும் பெரிய அளவில் நவீன வளர்ச்சி அடைய தொடங்கின. பல்வேறு அரசியல் தத்துவங்கள் புதுப்பொலிவு பெற்றன . ஜனநாயகம்(Democracy), தாராளவாதம்(Liberalization), போட்டி(competition), மனநிலை, சுதந்திர வர்த்தகம் (free trade) போன்றவை எல்லாம் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடு தான்.  

இந்த புத்தகத்தில் இவர் வைக்கும் வாதங்கள் எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும், சோசியலிச அரசானது எப்படி அனைவரது தேவைகளையும்(Needs), தேர்வுகளையும்(Choices) தெரிந்துகொண்டு திட்டமிட முடியும்? அப்படி ஒரு திட்டத்தை(Planning) தீட்டுவதற்கு போதுமான தகவல் அறிவை(Knowledge) திரட்டுவது சாத்தியமா? எல்லா மனிதனும் ஒரே முடிவை(Ends) நோக்கி செல்கிறன் என்கிற அடிப்படையில் தான் சோசியலிச அரசு திட்டமிடுகிறது, அதற்கான வழிவகைகளையும்(Means) அத்தகைய ஒற்றை முடிவை அடிப்படையாக வைத்து முடிவுசெய்ய படுகிறது. அனைவருக்குமான திட்டமிடலை ஒரு குழுவோ அல்லது தனி நபரோ எப்படி வகுக்க முடியும்? நாம் என்ன ஆட்டு மந்தைகளா? இல்லை பன்றி கூடமா? 

மேலும் சோசியலிசத்திற்கும் பாசிசம் மற்றும் நாஜிஸிம் ஆகிய தத்துவங்களுக்கிடையே நிறைய ஒருமைப்பாடு இருக்கிறது, இம்மூன்று தத்துவங்களும் கூட்டுவாழ்க்கையை(Collectivism) அடிப்படையாக கொண்டவை, மையப்படுத்தப்பட்ட பொருளாதார திட்டமிடலை(Centralized planning) முன்னிறுத்துபவை, தேசியவாத சோசியலிசத்தை(National Socialism) அடிப்படையாக கொண்டவை. உள்ளபடியே சொல்லவேண்டும் என்றால் சோசலிசம் ஒருநாளும் தனிமனித சுதந்திரத்தை எள்ளளவும் பொருட்படுத்தியதில்லை, 1848 இல் ஐரோப்பாவில் நடந்த தொடர் புரட்சிக்கு பிறகு தான் சோசியலிச தத்துவம் சுதந்திரத்தையும் கருத்தில் கொள்ள தொடங்கியது, அதன் பின் உருவானது தன் ஜனநாயக சோசலிசம் போன்ற தத்துவமெல்லாம். எல்லா வகையான சோசியலிசமும் சர்வாதிகாரத்தில் சென்று தான் முடியும்.

 இத்தாலி மற்றும் ஜெர்மனியில் சோசியலிஸ்டுகள் வளர்த்தெடுத்த கூட்டுத்துவ சிந்தனையின் விளைவு, முசோலினி மற்றும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் வருகைக்கும், வளர்ச்சிக்கும் உதவியது. அவர்களின் திட்டமிடல் கொள்கையோ மையப்படுத்தப்பட்டது. ஒரு குழுவோ அல்லது நபரோ திட்டமிடும்போது சாதாரணமாகவே சர்வாதிகாரம் தான் தழைத்தோங்கும். ஹிட்லரின் வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் "தேசியவாத சோசியலிசமும் மார்க்சியமும் வெவ்வேறானவை அல்ல, இரண்டும் ஒன்று தான்". 

புரட்சியின் வழியாக தான் சோசியலிச அரசு அமையும் என்பது நடைமுறை(Practice), அப்படி இருக்கையில் சிலர் சொல்லும் ஜனநாயக சோசலிசம்(Fabian socialism) என்பது ஒரு கற்பனை(Utopia) தான் என்கிறார் Hayek. ஜனநாயகம் மற்றும் சோசலிசம் ஆகிய தத்துவங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை "சமத்துவம்(Equality)" என்பது, சோசலிசம் போதிக்கும் சமத்துவம் என்பது கட்டுப்பாட்டிலும் அடிமைத்தனத்திலும். ஜனநாயகம் போதிக்கும் சமத்துவம் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டது, இரண்டும் சேர்ந்து இயங்கவியலாது. ஜனநாயக சோசியலிசம் என்பது சர்வாதிகாரத்துக்கே இட்டுச்செல்லும் என்று கூறுகிறார்.

பொருளாதார திட்டமிடல் என்பது திறனற்ற ஒன்றாக தான் முடியும், தனிமனிதனின் அபிலாசைகளுக்கேற்ப(Aspirations) அவனது பொருளாதார முடிவுகளை அவனே தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்கும்போது தான் பொருளாதாரமும்/ தனிமனிதனும் ஒருவரை ஒருவர் மேம்படுத்திக்கொள்ள முடியும். பொருளாதாரத்தை திட்டமிடுவதற்கு(Planning the economy) பதிலாக, போட்டியை திட்டமிடுவது(Planning the competition) அவசியமாகிறது. அத்தகைய போட்டிக்கான திட்டமிடல் என்பது Monopolyகளை கட்டுப்படுத்த உதவும்.  

பொருளாதார சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரம் அர்த்தமற்றதாகி போய்விடும். அரசு திட்டிமிடல் அதிகமாக இருத்தால், தனிமனிதனின் திட்டமிடல் பாதிக்கப்படும், இப்படிப்பட்ட இரண்டுமற்ற தன்மையில் தான் சமகாலத்தில் நாம் பயணித்து வருகிறோம். அரசியலும் பொருளாதாரமும் ஒரே நபரால் கையாளப்படுவது தான் இன்றைக்கு பல்வேறு ஜனநாயக நாடுகள்(Especially third world countries ) சந்திக்கும் சிக்கல்களுக்கு முக்கிய காரணமாகும். 

உலகப்போர் சமயத்தில் பேசுபொருளாக இருந்த சர்வதேச அரசு(Supreme International state) பற்றியும் இந்நூல் பேசுகிறது, சர்வேதேச அமைப்பு வழியாக மேற்கொள்ளப்படும் திட்டமிடல் என்பதும் குழப்பத்தில் தான் முடியும். முடிந்த அளவு கூட்டாட்சி அமைப்புகள்(Federal states) உருவாக்கப்பட வேண்டும்.அத்தகைய சிறு சிறு அமைப்புகளில் தான் ஜனநாயகம் சிறப்பாக செயல்பட முடியும், எனவே அதற்கான வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கடைசி பகுதியில் முடிக்கிறார். 

ஒரு காலத்தில் கடவுளுக்கு அடிமையாக இருந்தோம், பின்னர் நிலப்பிரபுக்கள், அதன் பின் மன்னர்கள், மாமன்னர்கள், பேரரசுகள், சர்வாதிகாரிகள், என மனிதன் தொடந்து அடிமையாக தான் இருக்கிறான். அடிமையாக இருப்பதற்கு அடிப்படை காரணம், அவன் சார்ந்திருக்கும் அமைப்பு அவனுக்கான திட்டமிடலை செய்கிறது, அவன் விரும்பிய ஒன்றை செய்ய இயலாத போது அவனது சுதந்திர சிந்தனையை எப்படி கண்டெடுப்பான்?நாம் இது போன்ற கேள்விகளை எழுப்புவதேன் மூலமே நமக்கான சரியான அமைப்பை கண்டடைய முடியும். 

இந்த நூல் பேசும் செய்தி என்பது மிக ஆழமானது, அதில் சிறு துளியை மட்டுமே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன், எவ்வித சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டிருப்பினும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 

இந்நூலை அன்பளிப்பாக கொடுத்த அக்காக்களுக்கு அன்பும் நன்றியும். 

BOOK: The Road to Serfdom
AUTHOR: Friedrich A. Von Hayek
 
                           F. A. HAYEK 

Comments