சுக்கா மிளகா சமூகநீதி?

Disclaimer: பதிவின் சாரம் புரிவதற்காக சாதி பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

Warning: Caste and religion are against Humanity! 

 

 

 

"In India, the politicization of caste enabled the democratization of politics" - Radha Kumar(Police Matters)

 

1987  இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் 4 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படியில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின்  அறிவித்திருந்தார். இதை பலர் வரவேற்றும் பலர் விமர்சித்தும் எழுதி இருந்தார்கள். 

 

எனவே இந்த போராட்டம் பற்றி வாசிக்கலாம் என்று தேடியபோது சிலவற்றை மட்டும் தான் படிக்கமுடிந்தது, ஆங்கில இதழான “New York Times” கூட இந்த போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது(link in comments). 

 

எனவே இந்த போராட்டம்பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் மருத்துவர் ராமதாசு அவ்வர்கள் எழுதிய "சுக்கா மிளகா சமூகநீதி?" என்னும் நூலை வாசிக்க தொடங்கினேன். சமுகநீதி வரலாற்றை சுருக்கமாக 350 பக்கங்களில் எழுதி இருந்தார், இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் நமது அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா, கேரளாவின் இடஒதுக்கீடு எப்படி நடைமுறையில் உள்ளது, அதன் வரலாறு என்ன என்பது பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார். 

 

கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் இந்நூல் வெளியிடப்பட்டது, இந்த புத்தகத்தை அவர் எழுதியதற்கு காரணமாக "இடஒதுக்கீடு பற்றி தெரியாமல் இருக்கும் வன்னியர் சமுதாயத்தினருக்கு அதை பற்றி புரியவைப்பதும், இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தையும் வரலாற்றையும் விளக்குவதே ஆகும்" என்று கூறி இருந்தார். முதல் 20 பகுதி இந்தியாவில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பற்றியும் அதில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும் அதை நடைமுறைப்படுத்த நடந்த பேச்சுவார்த்தைகள், அமைக்கப்பட்ட  ஆணையங்கள், நடத்தப்பட்ட போராட்டங்கள் பற்றி எல்லாம் விரிவாக எழுதி இருக்கிறார்.  


சட்டநாதன், அம்பாசங்கர் என்று தமிழகத்தில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் பின்னிணியையும். காகா காலேல்கர், மண்டல் என இந்திய அளவில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் பற்றியும் எளிமையாக அனைவர்க்கும் புரியும் வகையில் எழுதி இருந்தார். 


1987 போராட்டத்தை பொறுத்தவரை வன்னியர்களுக்கு  20 % தனி இடஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட போராட்டம், அதற்கு முன்பே பலமுறை சிறிய அளவில் சாலை மறியல், ரயில் மறியல், பட்டினி போராட்டம் என்று நடத்தப்பட்டு வந்தது. 1987 ஆம் ஆண்டு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17இல் தொடங்கி 23 வரை நீண்ட நெடிய சாலைமறியல் போராட்டத்தை அறிவித்தது வன்னியர் சங்கம்(அப்போது பாமக உருவாகவில்லை, இந்த சங்கம்  23க்கும் மேற்பட்ட வன்னியர்  அமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பாகும்). 

அந்த போராட்டத்தின் பிற கோரிக்கைகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி சமமான அளவில் இடப்பங்கீடு தரப்படவேண்டும், பட்டியல் சாதி மக்களுக்கு 22 % இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும், மேலும் இந்திய அளவில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற சில கோரிக்கைகளின் அடிப்படையிலும் அந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறுகிறார் மருத்துவர். 



இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டமாக இதை  சொல்கிறார்கள், 21 பேர் காவல்துறை ஒடுக்குமுறையால் பரிதாபமாக கொல்லப்பட்டார்கள். இதில் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்தவர் என்பதும் மற்றோருவர் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21  பெரும் வேறு வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள். அவர்கள் சுட்டது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு. 18000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டார்கள்.


 உணர்வுபூர்வமாக நடந்த இந்த இடஒதுக்கீடு  போராட்டத்தில் சில இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலை மறிக்கப்பட்டது, அரசுக்கு ஆதரவான சில ஊடகங்கள் இதை காரணம்காட்டி ஒரு சமூகத்திற்கே மரம்வெட்டி என்று பட்டம் கட்டியது என்று குறிப்பிட்டுள்ளார் (முதுகளத்தூர் படுகொலைக்கு பின் நடந்த வன்முறைகளிலும் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட  இதே போன்ற அடக்குமுறை  பண்புகளை பார்க்கலாம்- link in comments ) 


இந்த போராட்டத்தின் போது பல குடிசைகள் கொளுத்தப்பட்டது (வன்னியர்களின் குடிசை உட்பட) ஆனால் அதன் பின்னல் அரசியல் சதி இருந்ததாக கூறுகிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை சார்பற்ற ஆய்வுகள்(Impartial investigation) மூலம் தான் அறிய முடியும். 


போராட்டம் முடிந்து, பல கட்ட  பேச்சுவார்த்தை நடந்து முடிவுகள் எட்டப்படும் வேளையில் எம்ஜிஆர் மறைந்தார், அதன் பின் ஆட்சிக்கு வந்த  ஜானகி ராமச்சந்திரனும் இதை பொருட்படுத்தவில்லை, கவர்னர் ஆட்சிலும் காங்கிரஸ் இதை கிடப்பில் போட்டது. கலைஞர் அரசு அமைந்த பின்  தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று ஒரு தனி பிரிவு உருவாக்கப்பட்டு அதில் வன்னியர் உட்பட்ட பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள்(MBC), சீர்மரபினர் ஆகியோர் இணைக்கப்பட்டு அவர்களுக்கு 20 %  இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில் தான் இப்போது வன்னியர்களுக்கு  10.5 % உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. 


புத்தகத்தில் பல இடங்கள் நெருடலாக இருந்தது, கலைஞரை பல இடங்களில் விமர்சிக்கும் மருத்துவர் ஏனோ கலைஞருக்கு சேர வேண்டிய பாராட்டுகளை மட்டும் கொடுக்க மறுக்கிறார், திமுக கூட்டணியில் இருந்து இந்த நூலை எழுதி இருந்தால் வேறு வகையில் இருந்திருக்கும். அதே போல் 21  பேரை சுட்டுக்கொன்ற அதிமுக அரசில் மீது ஒரு Soft Corner இருப்பதாக தெரிகிறது. 


மருத்துவருக்கு இருக்கும் சமூக நீதி, இடஒதுக்கீடு  பற்றிய புரிதலும் எல்லாம் அவர் கட்சியை சார்ந்தவர்களுக்கு இருந்தால் மகிழ்ச்சியே. இன்றும் 10  மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் தான் கடைசி 10 இடங்களை பிடிக்கிறது, இதன் மூலம் அங்கு வன்னியர் சமூக மக்கள் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. இதை மேலும் ஆய்வு செய்வதும், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதும் அந்த மக்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அவசியமான நடவடிக்கையாகும்.   


சமூக நீதி பற்றி அறிந்துகொள்ள நிச்சயம் உதவும் நூல் தான் என்றாலும், சில இடங்களில் ஒருதலைப்பட்சமாக எழுதியுள்ளார்(நடுநிலையகவாது இருந்திருக்கலாம்). வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு 4 கோடியில்  மணிமண்டபம் அரசு சார்பின் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இடஒதுக்கீட்டுக்காக போராடி மாண்ட மனிதர்களின் நினைவு சின்னங்கள் நாளை தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதியின் முக்கியத்துவத்தை  பறைசாற்றும். 


இந்த போராட்டத்தை அடிப்படையாக வைத்து ஏதேனும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியாகி இருந்தாலும் நண்பர்கள் பரிந்துரைக்கலாம். 


நன்றி. 





Comments