"எனது இந்தியா"- எஸ். ராமகிருஷ்ணன் // நூல் அறிமுகம்
“வரலாறு என்பது கடந்த காலமில்லை, அது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கும் அரூபசக்தி.” - எஸ். ராமகிருஷ்ணன்
எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய "சஞ்சாரம்" என்னும் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலை வாசித்த அனுபவம் இருக்கிறது, புத்தக வாசிப்புக்கு அறிமுகமான காலகட்டம் அது. மொழி நடை கூட சற்று கடினமாக தான் இருந்தது. அதன் பின் சமீபத்தில் வாசித்த "எனது இந்தியா" என்னும் வரலாறு பற்றிய நூல் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அளவிலும் கருத்திலும் ஆழம் அதிகமாகவே இருந்தது.
"கடந்தகாலம் நிகழ் காலத்திற்கு கற்றுத்தரும் பாடத்திற்கு பெயர் தான் வரலாறு" என்று தான் இந்த நூல் தொடங்குகிறது. 152 கட்டுரைகள். இந்திய வரலாற்றில் நிகழ்ந்து பெரிதும் அறிந்துகொள்ள படாத தகவல்களையும் செய்திகளையும் சுருக்கமாக கூறியுள்ளார் நூல் ஆசிரியர். நூலின் சிறப்பாக நான் பார்க்கும் மற்றோரு விசியம் ஒருவொரு பகுதியின் முடிவிலும் "வாருங்கள் வாசிப்போம்" என்று அவர் அறிமுகப்படுத்திய புத்தக பட்டியலை தான்.
152 பகுதிகளுக்கு 2 புத்தகங்கள் என்று, கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான புத்தகங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்திய வரலாற்றை கரைத்து குடிக்க இவை போதுமானவையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
காந்தியை கொன்ற கோட்ஸேவின் கைத்துப்பாக்கியை பற்றி ஒரு பகுதி இருக்கிறது, எந்த அளவுக்கு நுணுக்கமான பகுதி என்றால். அந்த கை துப்பாக்கி எங்கிருந்து வந்தது?, அதில் இருந்த குண்டுகள் எத்தனை? எத்தனை முறை காந்தியை நோக்கி சுடப்பட்டது ? என்பதை எல்லாம் விரிவாக பேசி இருந்தது. இந்த நூல் முழுக்க இருக்கும் கருத்துக்களும் அப்படிப்பட்டவை தான். வெளிச்சம் படாதா இடங்களை நோக்கி மின்விளக்கை திருப்பியுள்ளார். புத்தகத்தில் தேசியவாத வாடை அதிகமாகவே இருந்தது, சில பகுதிகள் நமது முன்முடிவுகளோடு முரண்படவும் வாய்ப்பிருக்கிறது.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்தியாவில் நடந்த “பஞ்சங்கள்” பற்றிய பகுதி நம்மை உறையவைக்கிறது. அவற்றில் சில பஞ்சங்கள் பதுக்கல் முறையினால் செயற்கையாக உருவாக்க பட்டவை என்பதை அறியும்போது பதறவும் செய்கிறது. ஒரு அரசின் உணவு மேலாண்மையின் முக்கியத்துவத்தை அந்த பகுதி விளக்குகிறது. அப்படி பட்ட பஞ்சங்களில் இருந்து இன்றைக்கு உணவு உற்பத்தியில் தன்னிறைவு(self- sufficiency) பெற்று ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் அறிவியல் வளர்ச்சியும், பஞ்சங்களின் மீது நாம் பொதுவாக கொண்டிருக்கும் பயமே ஆகும். இன்றைக்கும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை "சாப்டீங்களா" என்று கேட்பதற்கு பின்னால் பல்வேறு பஞ்சங்களின் வரலாறு புதைந்திருக்க தான் செய்கிறது.
இந்தியாவை ஆண்ட மன்னர்களும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் வாழ்ந்த சொகுசு வாழ்க்கையை பற்றி புத்தகத்தின் சில பகுதிகள் பேசுகின்றன. ஆடம்பரம் என்னும் வார்த்தையை மிஞ்சும் அளவிற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கை இருந்துள்ளது. தேவையற்ற செயல்களிலும், அர்த்தமற்ற கொண்டாட்டங்களிலுமே அவர்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவு செய்துள்ளார்கள். மன்னராட்சியிலும், காலனித்துவதிலும், நிலப்பிரபுதுவத்திலும் இருந்து நம்மை விடுவித்த “ஜனநாயகத்திற்கு” நாம் நன்றி சொல்லி தான் ஆக வேண்டும்.
பெண்கள் அனுபவித்த பிற்போக்கு சம்பர்தாயங்களான சதி, குழந்தை திருமணங்கள், தேவதாசி முறை, முலை வரி பற்றி ஒரு பகுதி பேசுகிறது. எந்த ஒரு பேரிடரில், கலவரத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பொது அவர்கள் அனுபவித்த கொடுமைகளை “Urvashi Butalia” தனது “The other side of silence” புத்தகத்தில் விரிவாக பதிவு செய்திருப்பார். அவற்றை இந்நூல் சுருக்கமாக பேசுகிறது.
தமிழகத்தில் நடக்கும் அகழாய்வுகள் பற்றிய முக்கியத்துவத்தை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். சமீபத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் "இந்திய வரலாறு தமிழ்நாட்டில் தொடங்கி எழுதப்பட வேண்டும்" என்று கூறி இருப்பது எவ்வளவு பொருந்திப் போகிறது என்பதை அந்த பகுதி உணர்த்தியது. இந்திய தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் காலம்காலமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே, அப்படிப்பட்ட சமயத்தில் இத்தகைய கட்டுரைகள் தேவை வாய்ந்த ஒன்றாக தெரிகிறது.
இவற்றை போல் வேறு வேறு தளங்களின் ஏராளமான தகவல்களோடும் புத்தக பட்டியலோடும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. வரலாறை அறிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும், தேடலை அதிகரிக்க இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.
Comments
Post a Comment