DECODING - பாரதியார்
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே" - மகாகவி பாரதியார்
பாரதியார் சிறந்த கவிஞர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, கம்பரும் சிறந்த கவிஞர் தான் ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் எத்தகையவை? அதில் உள்ள பிற்போக்குதனங்கள் யாவை? அவர் யாருக்காக பாடினார் என்பதை எல்லாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இளங்கோவடிகளை மட்டம்தட்டி கம்பனை புகழ்வதில் இருக்கும் “ராமாயண” சூழ்ச்சியை அறிந்திருக்க வேண்டும்.
பாரதியின் சில தொடக்ககால கவிதைகளை வைத்துக்கொண்டு அவரை முற்போக்கானவர் போலவும் , பெண் விடுதலை பேசியவர் போலவும் , தேசியவாதி போலவும் சித்தரிப்பது வேடிக்கையானது. 1906 -1910 சமயங்களில் அவரிடமும் விடுதலை உணர்வு இருந்துள்ளது. பெண் விடுதலை பற்றிய புரிதல் இருந்ததுள்ளது. மேலும் "மதுரை தமிழ் சங்கம்" நடத்திய போட்டிகளில் பரிசு பெறுவதற்காக சில இடங்களில் தமிழை புகழ்ந்தும் பாடியுள்ளார். இவர் நல்ல கவிஞர் தானே ஒழிய நல்ல மனிதரா என்பது ஆய்வுக்குட்பட்டது(வைரமுத்துவை போல்).
விடுதலை போராட்ட சூரர் என்று போற்றப்படும் பாரதி சிறையில் இருந்தது என்னவோ 25 நாட்கள் தான். சில நிபந்தனைகளோடு அவர் விடுவிக்கப்பட்டார், சமரசமற்ற விடுதலை போராளி "இனி அரசியலில் இருந்து நீங்கி விட போகிறேன்" என்று சொல்வது ஏன் என்பது புரியவில்லை.
மேலும் “இந்தியா” பத்திரிகையில் அவர் எழுதிய கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்கு எதிர்வினையாக அவரை கைது செய்ய காவல்துறை வந்தபோது அதை வெளியிட்டவர் “இந்தியா” என்ற இதழில் ஆசிரியர் முரப்பாக்கம் சீனிவாசன் தான் என்று கூறி பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டார் மகாகவி.
சாதி ஒழிப்பு போராளி என்று போற்றப்படும் பாரதியின் பிற்கால கவிதை வரிகள் இதோ
நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதர். (கண்ணன் என் தந்தை)
ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசம் மாயினதே (எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்)
இப்படி ஆரிய பித்தரான பாரதி எப்படி சாதி ஒழிப்பு போராளியாக இருக்கமுடியும், அனைவர்க்கும் பூணூல் அணிந்துவிடவேண்டும் வேதம் கற்பிக்க வேண்டும் அப்போது தான் இந்துதர்மம் காக்கப்படும் போன்ற கருத்துக்களை கொண்டிருந்தவர் பாரதி.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே..." என்று வரும் தமிழ் பெருமை பாடல் மதுரை தமிழ் சங்கத்திற்காக எழுதியது அதற்கு பரிசாக 100 ருபாய் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியின் பார்வையில் தமிழ் இலக்கணம் என்பது அகத்தியர் என்னும் ஆரியர் கொடுத்ததாம், தொல்காப்பியர் பற்றி எல்லாம் அவர் எதுவும் கூறியதில்லை.
தனது பெயரையே தொடக்க காலத்தில் "ஸி. ஸுப்பிரமணிய பாரதி" என்று தான் எழுதியுள்ளார். 1949 இல் பாரதியாரின் புத்தகங்களின் பதிப்புரிமையை வாங்கிய ‘ஓமந்தூரார் அரசு’ ரா.பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார் போன்றோர் தலைமையில் கிரந்தை எழுத்து நீக்கம் செய்யப்பட்டது, 1909 இல் வெளிவந்த ஜென்மபூமியில் “ஸி. ஸுப்பிரமணிய பாரதி” என்றே எழுதியுள்ளாராம். இவரை தான் தமிழை மீட்கவந்த தவப்புதல்வன் போல் எல்லாரும் போற்றி புகழ்கிறார்கள்.
இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தார் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராக பாரதியும் இருந்திருப்பார், அவர்கள் கொண்டிருந்த அகண்ட பாரத கொள்கையை பாரதியும் கொண்டிருந்தார்
"உன்னத ஆரிய நாடெங்கள் நாடே"
"ஆரிய காட்சி பேரானந்தமன்றோ"
இமயம் முதல் குமாரி வரை "ஆரிய நாடென்றே அறி"
என்று ஆரிய பெருமை பேசி தமிழை சிறுமைப்படுத்தி உள்ளார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
பாரதி நீதிக்கட்சியை கடுமையாக விமர்சித்தார், பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்றதும் பார்ப்பன பாரதிக்கு அச்சம் வந்துவிட்டது போல். அவர்களை இல்லம் ஏதோ கிறித்துவ மத போதகர்கள் போல் இந்துமதத்தை அழிக்க வந்தவர்கள் போலவும் சித்தரித்து எழுதியுள்ளார். வெள்ளையாக இருப்பவர்கள் தான் பார்ப்பனர்கள், சூத்திரர்கள் கருப்பு நிறமுடையவர்கள் போன்ற தப்பெண்ணங்களையும்(prejudice) கொண்டிருந்தார். சாதிவாரி இடப்பங்கீட்டுக்கும் எதிராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்டுகளை விட பாரதியாரை யாரும் ஊதி பெருகி இருக்க முடியாது அது ஜீவனந்தமாக இருக்கட்டும் பி .ராமமூர்த்தியாக இருக்கட்டும், இருவருமே பாரதியின் பிம்பத்தை ஊதி பெருகியவர்கள். கம்யூனிச கோட்பாடுகளை பற்றி இவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று தான் ஆய்வுகள் கூறுகிறது. ஆரியம் பேசிய தேசியவாதியை ஒரு இந்து மத பற்றாளனை எப்படி "பொருள்முதல் வாதியாக" கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது?
இப்படியாக பாரதியார் முரண்பாடுகள் நிறைந்த மனிதராக தான் தெரிகிறார், அவரின் பிம்பத்திற்கும் அவருக்குமே கடலளவு வேற்றுமை இருக்கிறது . தமிழர்கள் முந்திரி பருப்புகளை பார்த்தே ஏமாந்து போய் விடுகிறார்கள். எம்ஜிஆர் அந்த பட்டியலில் பாரதிக்கு அடுத்த இடத்தில இருப்பவர். ஆசிரியர் தினம் என்றால் ஒரு பார்ப்பனர் பிறந்தநாள் தான், குழந்தைகள் தினம், இளைஞர்கள் தினம் என்றாலும் அப்படி தான், பாரதியார் ஒரு பார்ப்பனிய செயல்திட்டம் என்றால் அது மிகையல்ல.
அவரை ஏதோ தமிழ்த்தேசியவாதி போலவும் வர்க்க போராளி போலவும் சித்தரித்து மக்களை மூடர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் கடைந்தெடுத்த இந்துத்துவ சிந்தனை கொண்டவர், ஆர்.எஸ்.எஸ் கொள்கை அனைத்தும் அவரிடம் இருந்தது.
பாரதி ரசிகர்களுக்கு அவரை பிடிக்கலாம் அதே நேரத்தில் எல்லாருக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
// வாலாசா வல்லவன் அவர்கள் எழுதி "சிந்தனையாளன்" பத்திரிகை வெளியிட்ட ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு. "திராவிட இயக்க பார்வையில் பாரதியார்" என்கிற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது . //
அருமை🖤
ReplyDelete