"Nehru - The Invention of India" நூல் அறிமுகம்

 “Religion in India will kill that country and its people if it is not subdued.” Jawaharlal Nehru 





  இந்தியா என்கிற கற்பனை தேசத்தின் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர்கள் என்ற பட்டியலில் ஜவஹர்லால் நேருவை முதன்மையானவர் என்றே சொல்லலாம்.  நேருவின் பிறந்தநாளை தான் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் என்பதை தவிர சிறு சிறு செய்திகளை அவ்வபோது அறிந்து கொள்வதும் உண்டு. ஆ. இராசா அவர்கள் எழுதிய "நேரு சிந்தனை - இலக்கும் ஏளனமும்" (கருஞ்சட்டை பதிப்பகம்) என்னும் சிறு நூல் தான் நேருவை பற்றி நான் வாசித்த முதல் நூல்.  அதன் பின் அவரது வாழ்கை வரலாற்றை அறிந்துகொள்ள ஆழ்ந்த தேடல்களுக்கு பின் கிடைத்த புத்தகம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sashi Tharoor எழுதிய “Nehru - The Invention of India” என்னும் நூல். இந்நூல் நேரு என்கிற மனிதரை கடந்தது அவரின் சிந்தனைகளை, அவர் கண்ட கனவுகளை எல்லாம் வாசிப்பவருக்கு எளிமையாக கடத்துகிறது. 


நேரு இல்லாமல் போயிருந்தால், இந்தியாவும் ஒரு மதவாத நாடகவோ அல்லது பிற்போக்கு தனங்களை கொண்ட காட்டுமிராண்டிகள் தேசமாகவோ  இருந்திருக்கும்(இந்தியா இருந்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே?). பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் இந்தியா ஒரு கூட்டமைப்பாகவே இருந்திருக்க வாய்ப்பு அதிகம். ஒன்றிய அரசிடம் அதிகார குவியல் என்பது  நேரு காலத்தை விட அவருக்கு பின்னல் வந்தவர்களாலேயே அதிகம் மேற்கொள்ளப்பட்டது. மாநில முதலைமைச்சர்களுக்கு கடிதம் எழுதியதில் இருந்து, இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் முக்கியத்துவத்தை அவர் அதிகம் உணர்ந்திருந்தார் என்றே கருதவேண்டும்.  சில இடங்களில் அவர் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. 


 நேருவிடம்  மேற்கிலும் கிழக்கிலும் இருந்த சிந்தனைகளின் தாக்கம் சம அளவில் இருந்தது, இரண்டையும் அவர் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் . அறிவியலையும் பகுத்தறிவையும் இந்தியாவின் ஆடையாளங்களாக நிறுவ முயற்சிகளை மேற்கொண்டார். இந்தியர்கள் அனைவரும் "Bertrand Russell” புத்தகங்களை படிக்கவேண்டும் என்று அவர் ஆதங்கப்பட்டிருப்பது இந்தியர்களின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையையும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீது அவர் கொண்டிருந்த நல் எண்ணத்தையும் காட்டுகிறது.  


நேருவின் சிந்தனைகளை செதுக்குவதில் அவரது தந்தை மோதிலால் நேருவை காட்டிலும், காந்தியை காட்டிலும் அவரின் வாசிப்பு அதிகம் பங்களித்துள்ளது, அவர் ஆழமான வாசிப்புக்கு சொந்தக்காரர்(பெரும்பாலான தலைவர்களுக்கு வாசிப்பே அடிப்படை). அவர் படித்த, பார்த்த விசயங்களை எல்லாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக அனைத்தையும் பகிரவும் செய்தார், சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், தனது மகளுக்கு எழுதிய கடிதங்களோடு உலக வரலாறையும், இந்திய வரலாறையும் சேர்த்தே எழுதினார். 


நேருவை ஒரு தேசியவாதி(Nationalist) என்பதை விட சர்வ தேசியவாதி(Internationalist) என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். சர்வதேசியத்தில்  இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த அவர் உலக நாடுகளிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையையும் வலியுறுத்தினார். ஆசிய கண்டத்தின்  நாடுகளிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையையும் வலியுறுத்தியவர் நேரு. பனிப்போர் சமயங்களில் எந்த சார்பும் இல்லாத(NAM) ஒரு அணியை கட்டமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். இந்தியாவின் வெளியுறவு  கொள்கையாகவே  அது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 


நிறுவனங்களின்(Institutions) மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக தான் நவீன இந்தியாவின் முக்கியமான அடையாளங்களாக திகழும் நிறுவனங்கள்(ISRO, IIT, IIM) எல்லாம் உருப்பெற்றன. 


அந்த சமயத்தில் சோசியலிச போதைக்கு மயங்காத மூன்றாம் உலக  நாடுகளே/தலைவர்களே  இல்லை, இந்திய போன்ற ஏற்றத்தாழ்வுகள் அதிகம் உள்ள நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் சில விசயங்களை கண்காணிக்க வேண்டிய தேவை இருந்தது, அந்த கொள்கை காலத்தின் கட்டாயமாக ஏற்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. 


காங்கிரஸ் இயக்கத்தை மதவாதிகளின் பிடியில் இருந்து மீட்டதில் தொடங்கி இந்தியாவின் முக்கிய அரசியல் அடையாளங்களாக மதசார்பின்மை, ஜனநாயகம் போன்றவற்றை கட்டி காத்த நேருவின் அவசியம் இன்றளவும் ஏன்  தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 


நேருவை பற்றிய அடிப்படைகளை புரிந்துகொள்ள இந்நூல் அவசியம் உதவும். வாய்ப்புள்ள நண்பர்கள் படித்து பயன்பெறவும். 

மேலும் நேரு பற்றி அறிந்துகொள்ள முக்கியமான புத்தகங்களாக நீங்கள் கருதும் புத்தகங்களையும் பரிந்துரைக்கலாம். 





Comments