THE STORY OF MADRAS

   






1921 இல் எழுதப்பட்ட புத்தகத்தை சரியாக ஒரு நூற்றாண்டு கடந்து படிக்கும் வாய்ப்பு கிட்டியது, எதர்ச்சையாக தான்  புத்தகம் கண்ணில் பட்டது. “THE STORY OF MADRAS” என்று தலைப்பை பார்த்ததும் ஒரு ஆர்வம். லண்டனை சேர்ந்த “Glyn Barlow” இந்த புத்தகத்தை எழுதியுள்ளார், இவர் மெட்ராஸில் இருந்த St .George  கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து பின்னர் "Madras Times " பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 


முழுக்க முழுக்க காலனித்துவ நோக்கில் எழுதப்பட்ட புத்தகம், பிரிட்டிஷ்காரன் மதராசபட்டினம் என்றிருந்த கிராமத்தை எப்படி ஒரு நகரமாக மாற்றினான் என்பதை சுருக்கமாக பேசுகிறது. பழங்கால மெட்ராஸ் எப்படி இருந்தது, அந்த கட்டிடங்களுக்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன,Black town, White town என்பவை எவை, அவை எந்த அடிப்படையில் உருவாகியது போன்ற செய்திகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது. கையால் தீட்டப்பட்ட கட்டிடங்களின்  வரைபடங்களும் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளது.  சென்னை மீது ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய  புத்தகம்.  





மெட்ராஸ் என்கிற பெயருக்கே பல வரலாறு இருக்கிறது, மதராசபட்டினம் என்கிற கிராமமே மெட்ராஸ் என்று மாறியது என்று  சிலர் கூறுகிறார்கள். இந்த புத்தக ஆசிரியரும் அதை ஏற்றுக்கொள்கிறார். மற்றொன்று “Madre-de-deus” church என்பது தான் அங்குள்ள மீனவ மக்களால் ‘மெட்ராஸ்’ என்று அழைக்க பட்டது என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள். அந்த வார்த்தைக்கு ‘The church of the mother of the god’ என்று அர்த்தம். 


Francis Day என்னும் ஆங்கிலேயரால்(East India Company) வணீகம் செய்வதற்கு, தேடி தேடி அலைந்த கடைசியாக கண்டெடுத்த இடம் தான் மதராசபட்டினம். இங்கிருந்த மயிலாப்பூரில் ஏற்கனவே போர்த்துகீசிய மக்கள் குடியேறி இருந்தார்கள். பூவிருந்தவல்லி நாயக்கரின்(Nayak of Poonamallee) ஒப்புதலோடும், சந்திரகிரி ராஜாவின்(King of chandragiri) ஆணைக்கு இணங்கவும் மெட்ராஸ் ஆங்கிலேயர் கைகளுக்கு மெதுவாக மாற தொடங்கியது. 


அன்று முதலே  St. George Fort என்று தான் அவர்களின் குடியேற்றம் அழைக்கப்பட்டு வருகிறது, அதை சுற்றி அங்கியலேயர்கள் குடியேற்றம் தொடங்கியதும் “White Town”என்று அழைக்கப்பட்டது. அந்த  ”White Town” சுற்றி ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டது. அதற்கு அருகிலேயே இருந்தது”Black Town”. அந்த சமயத்தில் அங்கு தமிழ் பேசும் மக்களை விட தெலுங்கு பேசும் மக்கள் தான் அதிகம். அர்மேனியர்கள் , யூதர்கள் என வெளிநாட்டவரும் அங்கு வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். சீனர்களும் அங்கு வியாபாரம் செய்து வந்திருப்பது தெரியவருகிறது. 





1911  ஆம் ஆண்டுக்கு பிறகு”Black Town” என்பது “George Town” என்றாகியது, ஐந்தாம் ஜார்ஜ்(George V) மன்னர்பதவியேற்ற காலம் அது, கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகரம் மாற்றப்பட்டதும் அந்த சமயத்தில் தான். ஜார்ஜ் மன்னரின் நினைவாக அது “George Town” என்றாகியது. 


ஆங்கிலேயர்கள் வருகைக்கு பிறகு அந்த இடத்திற்கு மக்கள் இடப்பெயர்வு அதிக அளவில் நடக்கிறது, நெசவாளர்கள் குடும்பம் குடும்பமாக அழைத்து வரப்படுகிறார்கள் ‘சின்ன தறி பேட்டை’ என்பது சிந்தாதிரிப்பேட்டை ஆகிறது, துணி துவைக்கும் மக்கள் வசிக்கும் பகுதி வாஷேர்மன்பேட்டை(Washermanpet) ஆகிறது. இப்படி அதை சுற்றி அமைந்த குடியேற்றங்கள் எல்லாம் பிரிட்டிஷின் வருகைக்கு பிறகு தான் அதிக அளவில் நடக்கிறது. ஆங்கிலயேர்கள் இங்கு வணீகம் செய்ய தான் வந்தார்கள், ஆனால் நாடுபிடிக்கும் திட்டமும் அதற்கு பின்னால் இருந்தது, தங்கள் வியாபாரத்துக்கு ஆபத்து வராதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொண்டர்கள், இருந்தாலும் பிரெஞ்சு காரர்களிடம் ஜார்ஜ் கோட்டை மூன்றாண்டு காலம் இருந்தது.


 முகலாயர்கள் படையெடுப்பு தொடர்ந்து நடந்தது, அவர்கள் வீழ்த்தப்படும் வரை ஒருவகை அச்ச உணர்வில் தான் ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். இஸ்லாமியர்கள் "மூர்(Moor)" என்று தான் அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு என தனி குடியேற்றங்கள் இருந்தது. இஸ்லாமிய படையெடுப்பு மீதிருந்த அச்சத்தால் ஆங்கிலேயர்கள் அவர்களை  அருகில் சேர்க்கவில்லை எனவும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ‘Moor market’ என்ற இடத்தின் பெயரை இதை வைத்து புரிந்துகொள்ளலாம்.


அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டிகள் கொண்டவரப்பட்டு,  ஐஸ் வியாபாரம் எல்லாம் நடந்திருக்கிறது. இப்போதுள்ள விவேகானந்தர் இல்லம் என்பது ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டிகளை வெட்டி அவற்றை வைக்கோல் பேட்டிகள் உள்ளே அடைத்து இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஐஸ் உற்பத்தி ஆலைகள் வரும் வரை இந்த ஐஸ் கட்டி வியாபாரம் கொடிகட்டி பறந்தது. இப்போதிருக்கும் ஜார்ஜ் கோட்டை,  ஐஸ் ஹவுஸ் எல்லாம் கடலுக்கு அருகில் இருந்த இடங்கள். கடல் உள்வாங்கியதால் இப்போது தூரம் அதிகமாகி போனது.  


Ice House


William Bentinck காலத்தில் கல்வி வளர்ச்சி அதிகம்  இருந்தது, இங்கிருந்த மாணவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டது. மெட்ராஸ் மருத்துவ கல்லூரி இந்த சமயத்தில் அமைக்கப்பட்டது தான். அறிவியில் ஆராய்ச்சியும் இந்த சமயத்தில் நடந்துள்ளது. மேலும் வானியல் ஆராய்ச்சிக்காக  Madras Observatory ஒன்று ஆசியாவிலேயே முதல் முறையாக மெட்ராஸில் அமைக்கப்பட்டது. 



Madras observatory


இங்கு வியாபாரம் அமைதியாக நடந்தது, சுரண்டலும் தான். மெட்ராஸை நோக்கி மக்கள் வர தொடங்கினர்கள், பெரிய அளவில் போர் நடக்கவில்லை என்பதால் நகரமயமாக்கல் வீரியமாக நடைபெற்றது. பிரிட்டிஸ்காரர்களுக்கு நம்முடைய மக்கள் அளித்த ஒத்துழைப்பால் இந்த நகரம் வார்த்தெடுக்க பட்டது. புயல், வெள்ளம், பஞ்சம், பெருந்தொற்று என மெட்ராஸ் சந்தித்த இன்னல்கள் ஏராளம். ஆனாலும் வந்த அனைவரையும் மெட்ராஸ் அரவணைத்து கொண்டது. 


பல நூற்றாண்டு கடந்து இன்றைக்கும் அந்த நகரம் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளாமல் அனைவரையும் ஏற்றுக்கொள்ள பக்குவப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது சென்னை ஆகினாலும், நெல் விளைந்த மண்ணில் கட்டிடங்கள் விளைந்தாலும், பல ஆட்சி மாற்றங்கள் நடந்தேறினாலும் இந்த நகரம் யாரையும் புறக்கணிக்கவில்லை. அதனால் தான் சென்னையை எல்லாருக்கும் பிடிக்கும். 


People of Black Town


மக்களின் வரலாற்றை இந்த புத்தகம் பேசவில்லை, கட்டிடங்களின் வரலாறை தான் பேசுகிறது. எனவே ஆர்வம் உள்ள நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.  


Comments