"வாழ்க வாழ்க" - நூல் அறிமுகம்
"வாழ்க வாழ்க" - நூல் அறிமுகம்
சாஹித்ய அகாடமி விருது பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இமயம் அவர்கள் எழுதிய "வாழ்க வாழ்க" என்னும் சிறு நாவல் அரசியல் கட்சி மாநாடுகளிலும் அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
கட்சி மாநாடுகளுக்கும் பொது கூட்டங்களுக்கும் இயல்பாகவே தொண்டர்கள், தங்களின் வலிமையை காட்ட ஆட்களை அழைத்து செல்வது வழக்கமான ஒன்று. ஒரு காலத்தில் மக்களாக விரும்பி கூட்டங்களின் பங்கேற்றாலும், வேலை பளுவிற்கு இடையிலும் பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு மத்தியிலும் அரசியல் கூட்டங்கள் என்பது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாமல் போன காலகட்டத்தில், கூட்டம் சேர்க்க பணம்/ பொருள் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாக மாற்றம் பெற்றது.
“குவாட்டர் - கோழி பிரியாணி” என்ற கேலிகள் எல்லாம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை, ஒரு நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாகவோ அல்லது விருந்தாகவோ அளிக்கப்படும் உணவில் இருக்கும் நியாயம் அரசியல் நிகழ்வுகளில் அளிக்கப்படும் உணவுக்கும் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
சரி இந்த குறு நாவலுக்கு வருவோம், ஹெலிகாப்டரில் வரும் தலைவிக்கு, அதும் சரியான நேரத்திற்கு வராத தலைவிக்கு கூட்டம் சேர்க்கும் பணியில் ஒரு ஊராட்சி ஒன்றிய பதவி வகிக்கும் தொண்டன் ஈடுபடுகிறான். தன் தெருவில் வசிக்கும் மக்களிடம் பேரம் பேசி அவர்களை வண்டியில் ஏற்றி கொண்டு மாநாட்டுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். காலை 10 மணி மாநாடு என்று கூறி அழைத்து சென்றாலும் நூல் முடியும் வரை கூட தலைவி வந்ததாக தெரியவில்லை.
இந்த நாவல் கட்சி மாநாடுகளில் நிலவும் சாதிய மற்றும் பாலின பாகுபாடுகளையும் பேசுகிறது. பெண்கள் நலனின் அக்கறை கொண்ட தலைவி என்று தன்னை காட்டிக்கொண்டாலும் தனது கட்சி மாநாட்டில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை கூட ஏற்பாடு செய்யமுடியாத அவலத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
இத்தகைய மாநாடுகளை எதிர்க்கட்சி காரர்கள் எப்படி அணுகுவார்கள் என்பதையும் இந்நூல் பேசுகிறது. கட்சி பெயர்கள் எல்லாம் புனைவாக இருந்தாலும் அந்த கட்சியின் பண்புகளை வைத்தும் அங்கு நடக்கும் உரையாடல்களை வைத்தும் எந்த கட்சி என்பதை உணர முடிகிறது.
சி.சு.செல்லப்பா வின் வாடிவாசல் நாவலில் வரும் நிகழ்வுகளில் இருக்கும் மக்கள் அடர்த்தி இந்த நாவலிலும் இமயம் அவர்களின் எழுத்துக்கள் மூலம் உணர முடிகிறது. எளிமையான எழுத்து நடை, புரியும் வகையிலும் இணைத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்த இலக்கிய நடை எல்லாம் நூலை விரைந்த முடிக்க ஏதுவாக இருக்கிறது.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
BOOK: வாழ்க வாழ்க
AUTHOR: இமயம்
PUBLISHER : க்ரியா
Comments
Post a Comment