முதல் பெண்கள்
புத்தகத்தின் அட்டை படம் Vincent van goghன் “Starry Night” ஓவியத்தை பிரதிபலிப்பது போல் இருக்கிறது, அந்த ஓவியத்தை பார்க்கும் போது ஏற்படும் வியப்பு இந்நூலை வாசிக்கும்போது ஏற்பட்டது. 45 “முதல் பெண்களும்” இச்சமூகத்தின் மீது ஏதோ இரு வகை தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள், எங்கோ தொலைவில் மினுக்கும் நட்சத்திரங்கள், நெருங்கி சென்று பார்த்தல் சூரியனை போல் சுட்டெரிப்பவர்கள். இந்தியா போன்ற சாதி-மத-பாலின பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் சுதந்திரமாக செயல்படவே அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் அத்தகைய பிற்போக்கு தனங்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்து ஆளுமைகளாக உருப்பெற்றிருக்கும் இவர்கள் அனைவரும் நமக்கான Inspirationகள் தான்.
இந்தியாவில் நடந்த கொடூரங்களில் முக்கியமானதென்றால் பிரிவினையை சொல்லலாம், அத்தகைய பிரிவினையினால் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் Urvashi Butaliaவின் “The Other Side of Silence” நூலை வாசிக்கும்போது உணரமுடிந்தது. அம்பேத்கரின் "இந்தியாவில் சாதிகள்" என்கிற ஆய்வு நூலிலும் சாதியை உயிர்ப்புடன் வைக்கும் சதி, குழந்தை திருமணம், போன்றவை எல்லாம் பெண்களின் கற்போடும் /உடலோடும் எப்படி பின்னி பிணைந்திருக்கிறது என்பதை விளக்கி இருப்பார். பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகம் பெண் விடுதலை அரசியலை பிரகடனம் செய்யும். ஊடகர் P. Sainath அவர்களின் கள ஆய்வின் வெளிப்பாடான “Everybody Loves a Good Drought” புத்தகம் பெண்கள் படும் துயர்களை ஆழமாக பேசும். இப்படி பெண்கள் படும் துயர்களையும் அவலங்களையும் வாசித்து விட்டு "முதல் பெண்கள்" போன்றதொரு புத்தகத்தை படிப்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்நூலில் இருந்து எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட ஊக்கம் நிறைந்த வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளது. ஆழமான ஆய்வுக்கு பின் வெளிவந்த நூலாகவே தெரிகிறது.
S.Anandhi அவர்கள் எழுதியுள்ள ஆழமான ஆணிந்துரையில் தொடங்கி கிட்டத்தட்ட 45 பெண் ஆளுமைகளின் சுருக்கமான வரலாறை படிக்கும்போது துளி கூட சலிப்பே இல்லை. எம்.எஸ் சுப்புலட்சுமி, ராஜம் கிருஷ்ணன் போன்றோர் பற்றிய கட்டுரையை வாசிக்கும்போது கண் கலங்கியது. அங்கீகரிக்கப்படாத எத்தனையோ ஆளுமைகள் நூல் முழுக்க இடம்பெற்றுள்ளார்கள்.
இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருந்த வீ.எஸ். ராம தேவி ஆளுநர் என்கிற பதவியே ஒரு மாநிலத்திற்கு தேவை இல்லை என்கிறார். பெரியாரை பெரியாராகிய “மீனாம்பாள் சிவராஜ்” அவர்களின் அரசியல் வாழ்க்கை வியப்பு மிகுந்த ஒன்று. இந்தியாவில் சமூக விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார், ரங்கூனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தமிழக அரசியலில் கோலோச்சிய அன்னை மீனாம்பாள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாம் திரைப்படமாக எடுக்கபட வேண்டிய ஒன்று. திராவிட இயக்கத்தை சேர்ந்த சத்யவானி முத்து அம்மையார் பற்றிய செய்தியும் சுவாரசியமானவை.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பெண்கள் கல்வியின் மீது தீர பற்றும் வாசிப்பில் ஆர்வமும் சமூகத்தின் மீது பேரன்பும் கொண்டவர்கள். ஏற்றுக்கொண்ட கடமைக்காகவும் லட்சியத்துக்காகவும் திருமணம் கூட செய்து கொள்ளாத அளவிற்கு அவர்களின் கொள்கை பிடிப்பு இருந்தது. தங்களது சுயத்தை(Self) பெரிதும் நேசித்தவர்களாகவே அனைவரும் இருந்துள்ளார்கள். இக்கட்டான சூழலிலும் விடாமுயற்சியை கைவிடாத பண்பு தான் அனைவரையும் ஆளுமைகளாக ஆக்கியுள்ளது.
இதில் பெரும்பாலான ஆளுமைகள் காந்திய கொள்கை மீதும் இந்திய விடுதலை மீதும் அக்கறை கொண்ட தென் இந்தியாவை சேர்ந்த பெண்கள். உலக அளவிலும் இந்திய அளவிலும் தீரமிக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். “இந்திய அரசாங்கமே ஒரு ஆணாதிக்க அமைப்பு தான்” என்று அவர்கள் கூறும் வார்த்தையில் உண்மையும் நியாயமும் இருக்கவே செய்கிறது.
அறியப்படாத ஆளுமைகளின் வரலாறையும், அறியப்பட்ட ஆளுமைகளின் மறுபக்கங்களையும் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் பதிவுசெய்துள்ளார் நூல் ஆசிரியர்.
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் இந்நூல் நிச்சயம் இடம்பெறும். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு வந்தால் கூடுதல் மகிழ்ச்சி.
BOOK: முதல் பெண்கள்
AUTHOR: Nivedita Louis
Comments
Post a Comment