"உலகப் பெரியார் காந்தி" - பேரறிஞர் அண்ணா Book review
இந்த புத்தகத்தின் அட்டை படத்தில் இருக்கும் அண்ணாவின் பெயரை நீக்கி விட்டால் இதை எழுதியது காந்தியவாதியா இல்லை திராவிட இயக்கத்தை சேர்ந்தவரா என்றே கண்டுணர முடியாது. காந்தியின் மேன்மைகளை பேசிக்கொண்டே திராவிட இயக்க கொள்கையையும் முன்னெடுத்து செல்ல முடியும் என்று ஒரு புதிய இலக்கணம் எழுதியுள்ளார் பேரறிஞர்.
"உலகப் பெரியார் காந்தி" என்று பெயர் வைத்ததன் மூலம், இந்நூல் வெளிவந்த சமயத்தில் அண்ணா திராவிடர் கழகத்தில் தான் இருந்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
காந்தி படுகொலைக்கு பின் இந்தியாவுக்கு "காந்தி நாடு" என்று பெயர் வைக்க சொன்னவர் பெரியார். 1925இல் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு பிரிந்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய சமயத்தில் தனக்கு இருக்கும் முக்கிய பணிகளாக " காந்தியையும் காங்கிரஸையும் ஒழிப்பதே " என்று தான் கூறி இருப்பார். கொள்கைகளை எதிர்த்தாரே ஒழிய மனிதர்களை அவர் ஒரு நாளும் வெறுத்ததில்லை. அவர் வழி வந்த அண்ணாவும் அப்படிதான். அண்ணா அதற்கும் ஒரு படி மேலே சென்று " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு" என்றார். இத்தகைய பண்புகள் எல்லாம் திராவிட இயக்க தலைவர்களை தவிர வேறு யாருக்கு வாய்க்கும்.
வாழ்க்கை வழிகாட்டி
உத்தமரை இழந்தோம்
அவர் காண விரும்பிய நாடு
அவர் சிந்திய இரத்தம்
உலக உத்தமர் காந்தி
போன்ற தலைப்புகளின் கீழ் இலக்கிய நயத்தோடும், கருத்தாழத்தோடும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
காந்தியின் படுகொலையை சாக்ரடீஸ் அருந்திய விஷத்தோடும், ஆபிரகாம் லிங்கன் படுகொலையோடும் ஒப்பிட்டுருப்பார். காந்தி காண விரும்பிய இந்தியாவை அடைந்து தீர்வதே அவரின் புகழுக்கு நாம் செய்யும் அஞ்சலி என பல்வேறு இடங்களில் சுட்டி காட்டியிருப்பார்.
சாதாரண மனிதராக பிறந்து அவர் அடைந்தநிலை வியக்கத்தக்கது எனவும், உலக நாடுகள் எல்லாம் அவரின் மறைவுக்கு செலுத்திய புகழ் அஞ்சலியெல்லாம் அவரை உலக உத்தமர் ஆகியுள்ளது. இது இந்தியா போன்ற பிற்போக்கு சடங்குகளும் சம்பர்தாயங்களும் நிரம்பி இருக்கும் நாட்டில் காந்தி போன்று சாதாரணமான மனிதராக பிறந்து அடிமை பட்டு கிடந்த மக்களின் சுதந்திர எழுச்சிக்கு பெரும் பங்காற்றுவது எல்லாம் அரிய செயலே என்று பல இடங்களில் காந்தியை காந்தியவாதியாவே மாறி புகழ்ந்திருப்பார்.
இந்தியாவை மதவாத சக்திகள் பீடித்திருக்கும் இத்தகைய சமயத்தில் காந்தியின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். அவரின் சில கொள்கைகளில் முரண்பட்டாலும் ஹிந்துத்துவ சக்திகள் அவரை ஆக்ரமித்துக்கொள்ளாமல் பாதுகாக்க வேண்டியது மதசார்பற்ற கொள்கை கொண்டோரின் முக்கிய கடமையாகும்.
திராவிட இயக்க பார்வையில் காந்தியை புரிந்துகொள்ள அண்ணாவின் இந்நூல் உதவும்.
இந்த புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் Arun Pandiyanக்கு அன்பும் நன்றியும் !
Comments
Post a Comment