கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் //BOOK REVIEW//
அரசுக்கும் மத நிறுவனங்களுக்குமான முரண்பாடுகளும், சண்டை சச்சரவுகளும் வரலாற்றை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய வரலாற்றில் ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த நிலையே நீடித்தது, யார் தலைமையை யார் ஏற்பது என்பதிலேயே மிக பெரிய சிக்கல்கள் நிலவியது. மறுமலர்ச்சிக்கு (Renaissance) பிறகும் அறிவொளி(Enlightenment) இயக்கத்திற்கு பிறகும் தான் இருள் நீங்கி நம்பிக்கை ஒளி பிறந்தது. அதன் பின்னர் நடந்த புரட்சிகள் எல்லாம் தனி கதை.
இந்தியாவில் நிலை எவ்வாறாக இருந்தது? குறிப்பாக தமிழகத்தில் மத நிறுவனங்கள்/கோவில்கள் எப்படி இருந்தன? வேதங்கள் இங்கு ஏற்படுத்திய தாக்கம் என்ன? பௌத்த மற்றும் சமண மதங்கள் மீது திராவிட சமூகம் கொண்டிருந்த விழுமியங்கள் எத்தகையவை? அரசு, கோவில்களை கட்டுப்படுத்த தொடங்கியது எப்போது? மத நிறுவனங்கள் தன்னிச்சையாக இயங்க தொடங்கியது எந்த காலகட்டம்? ஆகமங்கள் என்றால் என்ன? அனைத்து சாதியனரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசனையைக்கு பின்னால் இருக்கும் போராட்டங்கள் எத்தகையவை என்பதை எல்லாம் விரிவாக பேசுகிறது இந்நூல்.
சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் சமூகத்தில், அதை மதத்தின் பெயராலும் கடவுள் பெயராலும் மக்களை நம்பவைத்து சாதிய கட்டுமானங்களை தகர்க்கவிடாமலும் கேள்விகேட்க விடாமலும் செய்வதில் கோவில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில் அரசர்கள் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தான் கோவில்கள். முகலாயர்கள் ஆட்சியிலும் அப்படியே இருந்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின்(East India Company) வருகைக்கு பிறகு Board of revenue என்கிற அமைப்பு இந்த மத நிறுவனங்களை நிறுவகித்து வந்தது. மத நிறுவனங்களை அரசு நிறுவகிக்க கூடாது என்று கிறிஸ்துவ மிஷனரிகள் கேட்டுக்கொண்டதற்கு பிறகு தான் அரசு இந்த நிறுவனங்களை/ கோவில்களை தன்னிச்சையாக இயங்க அனுமதி அளிக்கிறது. இதன் பின்னால் தான் பார்ப்பனர்கள் கைப்பற்றி விதி சதி என தங்களின் அதிகாரத்தை நிறுவனம் செய்கிறார்கள்.
ஆகமங்கள் என்பவை திராவிடர்களுக்காக உருவாக்கப்பட்டவை என்றும் வேதங்கள் எல்லாம் பார்பனர்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றும் தென்னிந்தியா முழுவதும் ஆகமங்களை அடிப்படையாக கொண்டே உருவ வழிபாடு நடைபெற்று வருவதாக கூறுகிறார் நூல் ஆசிரியர். ஆகமங்களை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் அனைத்து சாதியினரும் கோவிலுக்கு சென்று வழிபட உரிமை உள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் பெரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். 1970களில் அந்த சட்டம் ஏற்படுத்தப்பட்டாலும் பல்வேறு தடைகளுக்கு பிறகு 2006 இல் தான் நடைமுறைக்கு வந்தது. சமீபத்தில் தான் அர்ச்சகர்களையே நியமிக்க முடிந்தது. பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டது.
சாதிய சமூகத்தில், சமுதாய தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் பொருளாதார மாற்றங்களை ஏற்புடுத்துவதில் எந்த பயனும் இல்லை. இடஒதுக்கீடு, சுயமரியாதை திருமணங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், சமத்துவ புரங்கள் போன்றவை எல்லாம் சமூக தளத்தில் ஏற்படுத்தப்பட்ட முன்னெடுப்புகள். இந்த விளைவுகளை உணர காலம் பிடிக்கவே செய்யும். அம்பேத்கரின் சொற்களில் சொல்வதென்றால் “Caste is a notion/state of mind” சாதி என்பது ஒரு மனநிலை தான், அதை மாற்றுவதற்கு சமூக மாற்றங்களும், புரட்சிகரமான சீர்திருத்தங்களுக்கு இன்றியமையாதவை.
சாதிய சமூகத்தில் மத நிறுவனங்கள் குறிப்பாக கோவில்கள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை சம கால நிகழ்வுகள் மூலம் உணர முடிகிறது. ஜனநாயக நாட்டில் கோயில்களை ஒரு சமூகம் மட்டும் ஏகபோக உரிமை கொண்டாடுவது எந்த வகையிலும் அனுமதிக்க இயலாது. மக்களின் உழைப்பால் உருவான கட்டிடங்களுக்குள் அந்த மக்களே வழிபட உரிமை இல்லை என்றால் அதை சீர்திருத்துவது அவசியம் . அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது எளிமையான முன்னெடுப்பாக தெரியலாம் ஆனால் பார்ப்பனிய நிறுவனத்தின் அடிப்படையே Monopoly of Priest class தான். அந்த நிறுவனம் ஜனநாயக படும்போது அதன் அதிகாரமும் ஜனநாயகப்படும், இதன் மூலம் கோவில்களில் சாதியின் பண்புகள் நீர்த்து போகலாம் என்பது என் அவதானிப்பு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் ஏற்படுத்தப்பட்டதன் காரணங்களும் அதன் பின்னல் இருக்கும் அமைதி போராட்டங்களையும் இந்நூல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 2006 சமயத்தில் எழுதப்பட்ட நூல் என்றாலும் இதிலுள்ள கருத்துக்கள் எல்லாம் சமகால அரசியல் சூழலோடு பொருந்தியே போகிறது.
இந்தியாவில் வேறெந்த மாநிலங்களும் செய்ய தயங்கும் விசயங்களை 40-50 வருடங்களுக்கு முன்பே நிகழ்த்தி காட்டியது தான் திராவிட அரசுகளின் சாதனை. இந்தியா முழுவதும் இச்சட்டம் அமல்படுத்த படுவதற்கு மேலும் ஒரு நூற்றாண்டு எடுக்கலாம்.
வரலாற்று தகவல்கள், சமூகவியல் ஆய்வுகள், அரசியல் அமைப்பில் (Article 25-28) சொல்லும் செய்திகள் என அனைத்தையும் சுருக்கமாக 150 பக்கங்களில் விளக்கியுள்ளார் ஆய்வாளர் வெ. சிவப்பிரகாசம்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.
BOOK: கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்
AUTHOR: வெ. சிவப்பிரகாசம்.
Comments
Post a Comment