PERIYAR - A Comparative Study // நூல் அறிமுகம் //

 PERIYAR - A Comparative Study 





சமீபத்தில்நடந்த இணைய பஞ்சாயத்துகளில் ஏதோ ஒரு மண்டைவீங்கி பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்தோடு Bertrand Russell எழுதிய “ Marriage and morals” என்கிற புத்தகம் ஒத்துப்போவதாகவும் அதனால் பெரியார் Russellபார்த்து copy அடித்துவிட்டதாகவும் ஒரு கதை கிளப்பிவிட்டார். அதற்கு சரியான வகையில் எதிர்வினைகளும் வந்திருந்தன. ஆதாரபூர்வ மறுப்பும் திராவிடர் கழகத்திடமிருந்து வந்திருந்தது.


Russell மற்றும் பெரியாரின் கருத்துக்களுக்கு இடையில் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கிறது. Russellஎனக்கு அறிமுகமான சமயத்தில் “Political Ideals” புத்தகத்தை வாசிக்கும்போதே அதை அடிப்படையாக வைத்து ஒரு சிறு பதிவை முகநூலில் பகிர்ந்திருந்தேன். மேலும் இந்திய துணைக்கண்டத்திலேயே வடக்கு(புத்தர்), மேற்கு(அம்பேத்கர், பூலே ), தெற்கு(பெரியார்) என வாழ்ந்த வெவ்வேறு கலாச்சார அடிப்படைகளை கொண்ட சிந்தனையாளர்களுக்குள் கருத்து ஒற்றுமை இருக்கும்போது மேலை நாட்டு தத்துவவியலாருக்கும் பெரியாருக்கும் ஒற்றுமை இருப்பதில் வியப்பேதும் இல்லை.

சமீபத்தில் R.Perumal எழுதிய “Periyar A Comparative study” என்கிற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. Socrates, Spinoza,Rousseau,Voltaire,Karl marx, kant போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களோடு ஒத்து போகும் பெரியாரின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருந்தது. இன்னும் ஆழமான ஆய்வோடு எழுதி இருக்கலாமோ என்றே தோன்றியது. மேலோட்டமான பார்வையில் எழுதப்பட்டதால் ஒரு வித ஒழுங்கற்ற தன்மை வாசிக்கும்போது தெரிகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பொருள்முதல்வாதம், வர்க்க பார்வை,போன்ற கருத்துக்களோடு மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துக்களை ஒப்பிட்டும், பெரியாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளோடு ஒன்றி போகும் நிகழ்வுகளையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகளை தாண்டி இந்திய தத்துவ மரபையும் மேலைநாட்டு தத்துவ மரபையும் அடிப்படையாக கொண்ட முகவுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

பௌத்தம் இந்தியாவில் நீர்த்துப்போக காரணமாக இருந்த சங்கரருடைய கருத்துக்களிலிருந்து முரண்படும் பெரியாரின் சிந்தனைகளை கடைசி பகுதியில் ஒப்பிட்டுள்ளார்.

ஆ.மார்ஸ் எழுதிய “பெரியார் ?” என்கிற புத்தகத்திலும் இது போன்ற மேலை நாட்டு கருத்துக்களோடு செய்யப்பட்ட ஒப்பீடுகள் இருக்கும். பெரியாரை Anarchist என்பார், மேலும் நீட்சேவில் கடவுள் மறுப்பு கொள்கையுடன் பெரியாரின் நாத்தீகத்தை ஒப்பிட்டிருப்பர். இந்தியாவில் சாதீ என்கிற ஒரு மிருகம் இருந்ததால் அதை அடக்கி ஒடுக்குவதற்கே பாதி சிந்தனையை செலவழிக்க வேண்டி இருந்தது. ஒரு தத்துவவியலாளரை சாதி ஒழிப்பு போராளியாகவும், பிரிவினை பேசியவர் என்றும் என்றும் சுருக்கி என்றே பெரியாருக்கு சரியான மரியாதை செய்யாமல் விட்டுவிட்டோமோ என்றே தோன்றுகிறது.

பெரியாரின் தத்துவங்கள் எல்லாம் மேலைநாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு ஆராய பட வேண்டியவை. அவரின் முற்போக்கு பார்வையும் இந்த தமிழ் சமூக எதிர்காலத்தின் மீது அவர் கொண்டிருந்த கனவுகளும் நவீன சிந்தனை மரபின் வாயிலாக தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இந்நூல் அத்தகைய ஒப்பீட்டை ஓரளவுக்கு பூர்த்தி செய்திருந்தாலும் ஆழ்ந்த ஆராய்ச்சி தேவை, அதற்கு தூண்டுகோலாக இந்நூல் நிச்சயம் அமையும்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.

Book: Periyar - A comparative Study
Author: Prof. R. Perumal

Comments