Proposed Roads to Freedom - BR // Book Review

 The world that we must seek is a world in which the creative spirit is alive, in which life is an adventure full of joy and hope, based rather upon the impulse to construct than upon the desire to retain what we possess or to seize what is possessed by others. Such a world is possible; it waits only for men to wish to create it. -  Bertrand Russell




எனக்கு மிகவும் பிடித்த தத்துவவியலாளர்கள் பெயரை சொல்ல சொன்னால் முதலில் சொல்வது Bertrand Russellஆக தான் இருக்கும். அவரின் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். அவரின் எளிமையான எழுத்து நடையும் அதை படிப்பவருக்கு கடத்தும் கருத்து நடையும் அவர் எழுத்தின் பலம். 


“Proposed Roads to Freedom” என்ற ஆங்கில நூல் 1919 இல் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கும் வரவேற்புகளுக்கும் உள்ளாகியது. இந்நூலில் Socialism, Anarchism, Syndicalism ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகளை பற்றி விரிவாக பேசுகிறார். முதலீட்டியதுக்கு எதிராக முன்மொழியப்படும் இத்தகைய கோட்பாடுகள் எந்த அளவுக்கு பயன்தர வாய்ப்பு இருக்கிறது என்பதை அலசும் நோக்கில் எழுதப்பட்ட ஒன்று . 


தன்னை ஒரு சோசியலிச ஆதரவாளராக முன்னிறுத்தி கொண்டாலும், வழக்கமான சோசியலிச கருத்துக்களில் இருந்த மாறுபடுகிறார். தனி மனித சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து தான் ஒரு சமூகம் கட்டமைக்கப்பட்ட வேண்டும். அரசுக்கு  குறைந்தபட்ச அதிகாரங்களே கொடுக்கப்பட வேண்டும்.  கலை போன்ற தனி மனித உள்ளுணர்வு சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அன்பு, அமைதி, கருணை, படைப்பாற்றல் போன்றவை எல்லாம் சமூகத்தில் செழிக்க இந்த கோட்பாடுகளில் மாறுபாடுகள் தேவை என்றும் சொல்கிறார். 


Guild Socialism என்ற கோட்பாட்டில் Russellக்கு ஒரு ஆர்வம் இருப்பதாக தெரிகிறது, அதற்கு காரணம் அதை State சோசியலிசத்தோடு ஒப்பிடும்போது அதிகார பரவலாக்கம் மிகுதியாக இருக்கிறது. மேலும் அத்தகைய சங்க(Guild) உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அதை நிறுவகிப்பவரே தீர்வுகாணும் அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.  மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை மறுப்பதாக இந்த கோட்பாடு இருக்கிறது. அரசு என்ற ஒரு அமைப்பில் உறுப்பினர்களாக இந்த சிறு சிறு சங்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி(Guild congress) வெளியுறவு கொள்கை, ராணுவம் போன்ற சில விசயங்களை விவாதிக்கவும், சில முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். தனி மனித உரிமைகள் நிலைநாட்ட படவும், அரசிசமைப்பின் எல்லையற்ற  அதிகாரத்தை கட்டுப்படுத்தவும் இத்தகைய அமைப்பு முறை சிறந்ததாக இருக்கும் என்கிறார். 



அரசு சோசியலிசத்தில் கலை அறிவியல் போன்ற துறைகளின் முக்கியத்துவத்தை பற்றி ஒரு பகுதியில் பேசி இருக்கிறார். அரசு ஒரு துறையை கட்டுப்படுத்தும் போது மாற்றுக்கருத்துக்கு இடமளிக்கப்படுமா? சோசியலிச அரசு முதலீட்டிய கருத்துக்களையும் தாராளவாத கருத்துக்களையும் பரப்ப அனுமதிக்குமா? மேலும் சோசியலிச அரசுக்கு எதிரான  கருத்துக்கள் எல்லாம் தணிக்கை செய்யப்படாமல் அனுமதிக்க படுமா என்பதும் கேள்விக்குறியே.(1919 களுக்கு பிறகான சோசியலிச அரசுகளின் செயல்பாடுகள் எல்லாம் இந்த கேள்விக்கான பதிலாக “இல்லை” என்பதையே சொல்லியுள்ளது. )


 அறிவியலும் கலையும் தணிக்கை இல்லாமல் அனுமதிக்கப்படும் போது தான் அந்த துறைகளில் வளர்ச்சி என்பது இருக்கும். அவை அரசால் கட்டுப்படுத்தப்படும் பட்சத்தில் அந்த துறைகள் வளர்ச்சி  அடைய  வாய்ப்பு குறைவே.  ஒரு மனிதனுக்கு பொருளியல் தன்நிறைவை தாண்டி பல்வேறு விசயங்கள் தேவைப்படவே செய்கிறது. கலை செழிப்பதற்கு சுதந்திர செயல்பாடு அவசியமான ஒன்றாகும். 


வெளியுறவு கொள்கையின் முக்கியத்துவம்,அரசு மட்டும் சட்ட அமைப்பின் வரையறை, ஊதியம் மற்றும் உழைப்பின் எல்லை போன்றவற்றை பற்றி எல்லாம் விரிவாக பேசியுள்ளார் Russell. 


முதலீட்டியதில்(Capitalism) இருந்து விடுதலைக்கு வழிகளாக முன்மொழியப்படும் கோட்பாடுகள் எல்லாம் அத்தகைய விடுதலையை சாத்தியப்படுத்தும் என்ற கேள்விக்கு பதிலாகவும் சில பரிந்துரைகளுடனும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. 


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும். 




Comments