"What is Freedom?" Hannah Arendt கட்டுரையின் சுருக்கம்

 The raison d'etre of politics is freedom, and its field of experience is action- Hannah Arendt





சுதந்திரம் என்றாலே இந்தியர்கள் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது ஆகஸ்ட் 15 /1947  தமிழர்கள் சிலருக்கு 1967ம் ஞாபகம் வரலாம். சுதந்திரம் என்கிற வார்த்தைக்கு பின் உள்ள தத்துவமும்-வரலாறும் தான்  இன்று நாம் இருக்கும் நிலைக்கு காரணம் என்றால் வியப்பாக தான் இருக்கும்.  வரலாறு நெடுகவே மனிதன் சுதந்திரமாக இருந்த காலம் வெகு சொற்பமே, ஏதோ ஒரு அமைப்பு (குடும்பம், ஜாதி, மதம், இனம், நாடு, சார்வாதிகார அரசு) அவனை அடிமைப்படுத்தியும், செயல்பாடுகளை முடக்கியும் வைத்துவந்துள்ளது. சுதந்திரம் பற்றிய சில அடிப்படை கருத்துக்களை இந்த கட்டுரையில் பார்ப்போம். 


சுதந்திரம் என்கிற தத்துவம் பற்றி Immanuel Kant என்ன சொல்கிறார் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். எந்த ஒரு செயலையும் காரணம் மற்றும் விளைவை வைத்து தான் மனித மனம் புரிந்துகொள்ளும், ஆங்கிலத்தில் “Causality” என்பார்கள். இந்த Causality என்பது இரண்டு  வகைப்படும் ஒன்று உள்ளுணர்வு சார்ந்தது, மற்றொன்று இயற்கை சூழல், வெளியுலகை சார்ந்தது(அகம் புறம் என்று வைத்துக்கொள்வோம்). ஆனால் சுதந்திரம் என்பதை கோட்பாட்டு ரீதியிலான சுதந்திரம்(Theoretical or Pure freedom) என்றும் நடைமுறை சுதந்திரம் (Practical freedom)என்றும் பகுக்கிறார் Kant.  இரண்டுமே சுய விருப்பை(Free will) அடிப்படையாக கொண்டவை. 


சுய விருப்பு(Free will) என்றால், மனம் போன போக்கில் செயல்படுவது, இதை எதிர்மறையாக புரிந்துகொள்ளாமல் நேர்மறையாக புரிந்துகொள்ள வேண்டும். நாம் எடுக்கும்  முடிவின் அடிப்படையில் செயல்படவும் செயல்படாமல் இருக்கவும் முடிவு செய்வதை Free will என்று சொல்லலாம். நாம் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துவதில்(Act) தான் சுதந்திரம் அடங்கியுள்ளது. சுதந்திரம் என்பது செயல்படுவதே ஆகும்.  இந்த செயல்பாடு என்பது இடம், பொருள், சூழலை கொண்டு மாறுபடும். எந்த இலக்கை நோக்கி செயல்படுகிறோம் என்பதை சுதந்திரத்தால் நிர்ணயிக்க முடியாது. மாறாக நாம் எடுக்கும் முடிவுகளின்(Judgements/Decisions) அடிப்படையில் அந்த செயல்பாடுகள் நேர்மறையானதாகவோ எதிர்மறையானதாகவோ அமையக்கூடும். 


சுதந்திரத்தின்  தத்துவம் என்பது அடிப்படையில் செயல்படுவது. இந்த செயல்பாடு சிறப்பானதாக அமைய வேண்டும் என்றால் துணிவுடன்(Courage) செயல்படவேண்டும். வாழ்க்கை பற்றிய அச்சங்களில் இருந்து மனிதனை விடுவிப்பது அவனது தைரியமும் துணிவும் தான். அரசியல் தத்துவங்கள் எல்லாம் சுதந்திரம் என்பதை பிறரிடம் இருந்தோ அல்லது ஒரு அமைப்பிடம் இருந்தோ விடுவித்து கொள்ளுதலே என்று வரையறை செய்துள்ளது. இதை புற செயல்பாடாக வைத்துக்கொள்ளலாம். ஆனால் சுதந்திரம் என்பது அக ரீதியாக அணுகப்பட்டால் சுய விருப்புக்கு(Free Will) இடையில் நடக்கும் செயல்பாட்டின்(Intercourse) வெளிப்பாடே ஆகும். சுயத்துடன் நடக்கும் உரையாடலின் வெளிப்பாடாக, அதன் வழியே எடுக்கப்படும் முடிவுகளின் செயல்பாடாக, சுதந்திரத்தை வரையறுக்கலாம். 



பண்டைய கிரேக்கத்தில் சுதந்திரத்திற்கான வரையறை என்பது அரசியல் ரீதியானதாக தான் இருந்துள்ளது. அவை எல்லாம் அரசியலை சார்ந்து வகுக்கப்பட்ட கோட்பாடுகள். இதன் அடிப்படையில் மனிதன் என்பவன் பிறரை அடக்கி ஆள்வதின் மூலமோ அல்லது அவன் மீது ஆதிக்கம் செலுத்துவதில் மூலமோ சுதந்திர மனிதனாக இருக்க முடியும். அல்லது இந்த உலகத்தில் ஏதேனும் நிலத்தை தன்னுடையதாக ஆக்கியிருந்தால் தான் சுதந்திர மனிதனாக இருக்க முடியும். பின்னாளில் “சுதந்திரத்திற்கான வேட்டகை தான் அரசியல்” போன்ற கருத்துக்கள் உருவானதிற்கு அடிப்படையாக இருந்தது கிரேக்க தத்துவம் தான். (The raison d'etre of politics is freedom, and its field of experience is action.)


Stoic தத்துவவியலாளர்  Epictetus சுதந்திரத்தை பற்றி "Free is he who lives as he wishes " என்கிறார். தன்னுடைய Politics என்னும் நூலில் Aristotle  "Freedom means the doing what a man likes" என்கிறார். சுதந்திரம் என்கிற கோட்பாட்டை அரசியலில் இருந்து விடுவிப்பதன் மூலம், சுதந்திரம் பற்றிய, உள்ளுணர்வு சார்ந்த சிந்தனைகள் வெளிச்சம் பெற தொடங்குகின்றன. ரோமானிய பேரரசை சேர்ந்த Augustine மற்றும் Paul ஆகியோர் (இருவருமே கிறிஸ்துவ துறவிகள்) மனிதன் அடிமையாக இருந்தாலும் சுதந்திரமானவனாக உணரலாம் என்றார்கள் . இந்த சமயத்தில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியில் இருந்தது என்பதையும் மதத்தின் பிடியில் சிக்கி  இருந்ததும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். மதத்தின் ஆட்சியும் முடியின் ஆட்சியும் நடந்ததால்,  அரசியல் ரீதியாக சுதந்திரத்தை விளக்க முடியாத நிலைமையில், உள்ளுணர்வு சார்ந்து சுதந்திரத்தை விளக்க முற்பட்டார்கள். 


இதன் பிறகு தான் சுயவிருப்பும்(Free will) சுதந்திரமும்(Freedom) ஒத்த கருத்துக்களாகின. மேலும் தனிமையில் இருந்தாலும்  சுதந்திரத்தை அனுபவிக்க முடியும், அவற்றை யாராலும் தடுக்க முடியாது போன்ற கருத்தாக்கங்கள் உருவாகின. அத்தகைய சுதந்திரம் என்பது ஆன்மாவுக்கும்(soul) இதயத்தின் இருண்ட பக்கங்களுக்கும் நடந்த மோதலை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த மோதலின் ஊடாக தான் i-will and i-will not என்ற சுயவிருப்பை((Free will) நிராகரித்து கொள்ளும் ஆற்றலும் மனித மனதிற்கு உள்ளது போன்ற சிந்தனைகள் வெளிவர தொடங்கின.


சுய விருப்பு ஒரு பக்கம் ஆற்றல்மிக்க(Powerful) ஒன்றாக இருந்தாலும் மற்றொருபக்கம் இயலாமையையும்(Impotence) உணர்கிறது. இந்த இயலாமைக்கு எதிராக என்னால் முடியும்(I-can)  என்கிற கோட்பாடும் உருவாகிறது. ஆற்றல் நுகர முடியாமல் போகும் சமயத்தில் அது அடக்குமுறையாக மாறுகிறது(will-to-power turned at once into a will-to oppression). பின்னாட்களில் அரசியல் தளத்தில் சுதந்திரம் பற்றிய கோட்பாடு ரூபம் பெற இந்த சிந்தனை முக்கிய பங்கு வகித்தது. அடக்குமுறையை(Oppression) அதிகாரத்தோடு(Power) சேர்த்துப்பார்க்கும் தன்மை எல்லாம் இதன் பின்னர் தோன்றியவை தான். அடக்குமுறை அமைப்புகளிடமிருந்து விடுவித்து கொள்வதே சுதந்திரம் என்கிற அரசியல் கருது இதன் வெளிப்பாடு தான். 


தத்துவார்த்த சுதந்தரித்திற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளையும், அது  எப்படி உருப்பெற்றது என்கிற வரலாற்று இயங்கியலையும் இதனடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.  



முடிவற்ற சாத்தியமின்மைகளை(Infinite-improbabilities) தான் இந்த உலகம் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. தொடங்குதல்(Beginning) மற்றும் செயல்படுதல்(Acting) இரண்டும் ஒன்றை ஒன்று  ஒத்த சொற்களே. இத்தகைய சாத்தியமின்மைகளோடு  மனிதனின் செயல்பாடுகள் உறவாடும்போது(Interaction) தான் வரலாறு, அரசியல் போன்றவை உருப்பெறுகின்றன. சுதந்திரமாக இருத்தல் மற்றும் செயல்படுதல் என்கிற இரண்டு பரிசுகளை மனிதன் பெற்றதன் மூலம் அவனுக்கான மெய்மையை(Reality) அவன் நிறுவி கொள்கிறான். 


Hannah Arendtன் 30பக்க “What is Freedom” என்கிற  கட்டுரையின் சுருக்கம் தான் இந்த கட்டுரை.

 


Comments

  1. So beautifully written! Looking forward for more contents in this line!😇

    ReplyDelete

Post a Comment