ஜெய் பீம் - Perspectives

 “Constitutional morality is not a natural sentiment. It has to be cultivated. We must realize that our people have yet to learn it. Democracy in India is only a top-dressing on an Indian soil which is essentially undemocratic.” - Dr. B. R. Ambedkar




நேற்றிரவு குடும்பத்தோடு அமர்ந்து "ஜெய் பீம்" படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல இடங்களில் கண் கலங்கியது. பல இடங்கள் யோசிக்க வைத்தது. பல இடங்களில் பல புத்தகங்களும் நினைவுக்கு வந்தது.

இது சினிமா விமர்சனம் என்பதை தாண்டி சில பின்னணிகளை புரிந்துகொள்வதற்காக எழுதப்படும் பதிவே. படத்தில் வரும் காவல் துறை வன்முறை Radha Kumar எழுதிய "Police Matters" என்கிற புத்தகத்தை நினைவு படுத்தியது. பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் P.S Krishnan அவர்களின் நேர்காணல்கள் அடங்கிய “A Crusade for Social Justice” என்கிற நூலை நினைவுபடுத்தியது. மேலும் “The Trial of the Chicago 7” என்கிற திரைப்படம் சில இடங்களில் நினைவுக்கு வந்தது .

தமிழகத்தில் காவல்துறையின் பரிணாமங்களை பேசும் புத்தகம் தான் Police Matters , தென் தமிழகத்தில் குறிப்பாக ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களை சுற்றி இருக்கும் இடங்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் காவல்துறை எப்படி வளர்ச்சி அடைந்தது?, எப்படி எல்லை கோடுகளை நிர்ணயித்தது?, அதில் சாதி ஆற்றிய பங்குகள் என்ன? இத்தகைய முரட்டு தனத்திற்கு என்ன காரணம்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இந்த நூலில் இருக்கிறது.

சாதியோடு சேர்த்து அரசு அதிகாரமும் இணைந்து தான் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

அதையே தான் இன்றளவும் கடைபிடித்து வருகிறோம். தமிழகத்தில் நடைபெற்ற பாதி சாதி கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் காவல்துறை நேரடியாகவோ மறைமுகமாகவோ துணை நின்றுள்ளது. அதில் பெரும்பாலும் பாதிப்பட்டவருக்கு நீதி கிடைப்பதில்லை, காரணம் காவல்துறையின் காலனிய பண்பு மற்றும் சாதி அதிகாரம்.

இந்திய விடுதலைக்கு பிறகும் இந்நிலையே தொடர்கிறது, காவல் துறையை சீர்திருத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பெரிய அளவில் பயனளிக்கவில்லை. மாநில பட்டியலில் இருப்பதால் அந்த மாநில அரசியலுக்கேற்ப வளைந்துகொடுக்கும் படி தான் அதன் அமைப்பே வடிவமைக்க பட்டுள்ளது.

எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையின் போக்கு ஒரே வகையில் தான் இருந்துள்ளது. சமூகத்தில் ஒழுங்கை(Social order) ஏற்படுத்துவது தான் காவல்துறையின் முக்கிய பொறுப்பு. தொடக்கத்தில் இந்த பொறுப்புகளில் பிரிட்டிஷுக்கு உதவியாக இருந்தவர்கள் பார்ப்பனர்களே. அதன் பின்னர் தான் பிற சாதிகள் உள்ளே நுழைய முடிந்தது, அதற்கு முன் இருந்த நடைமுறையை தான் இவர்களும் கடைபிடிக்க வேண்டி இருந்தது. தவறுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்போது, அதும் ஒரு அதிகார அமைப்பு இந்த தவறுகளை செய்யும்போது, நீதியும் உண்மையும் கண்மூடி விடுகிறது.

காமராஜர் காலத்தில் நடந்த காவல்துறை அடக்குமுறைகள் தொடங்கி எடப்பாடி காலத்தில் சாத்தான்குளம் சம்பவம் வரை, எல்லாம் நீதி மறுக்கப்பட்ட வன்முறைகள் தான். விசாரணை, கர்ணன், ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் அந்த கொடுரங்களை பேசும்போது தான் கொஞ்சமேனும் சீர்திருத்தங்களை நிகழ்த்த முடியும். அல்லது அது பற்றிய ஆக்கபூர்வ உரையாடலை மேற்கொள்ளமுடியும்.

பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் சுவாரசியமானது, அதிகார அமைப்பில் இருந்துகொண்டே மக்களுக்கு நன்மைகளை செய்யவேண்டும் என்று நினைக்கும் அதிகாரிகள் பல பேர் இருக்கிறார்கள். அந்த கதாபாத்திரம் எனக்கு ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளான AN .சட்டநாதனையும், P.S கிருஷ்ணனையும் நினைவுபடுத்தியது. புத்தகம் மூலமாக தான் இவர்களை பற்றி அறியமுடிந்தது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல நன்மைகளை இருவருமே செய்துள்ளார்கள்.
வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து விட வேண்டும் என்று ஏக்கம் கொண்ட அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் முக்கிய விமரிசனங்களில் ஒன்று அது மக்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருக்கிறது என்பதாகும். அடிப்படை சட்டங்கள்பற்றி தெரியாத உழைக்கும் மக்கள் இந்த ஜனநாயக குடியரசில் இருக்கவே செய்கிறார்கள். பன்மைத்துவம் மிகுந்த ஒரு சமூகத்தில், சாதிய கொடூரங்கள் அதிகம் நடக்கும் சமூகத்தில், கேள்வி கேட்டால் சட்டம் பேசுறியா என்று கேட்கும் சமூகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை எண்ணி வியப்பதற்கு இல்லை. ஒரு பக்கம் சட்டம் தான் அவர்களுக்கான பாதுகாப்பு. மறுபக்கம் அதை அணுக முடியாத தன்மை, இவற்றோடு சாதி, மதம், பாலினம் போன்ற ஒடுக்குமுறை கருவிகள் வினைஊக்கிகளாக செயல்படுகின்றன.

இந்த அரசியலை எல்லாம் மறைமுகமாக சொல்கிறது ஜெய் பீம் திரைப்படம், தமிழக முதல்வரிடமிருந்தே வாழ்த்து வந்துள்ளது இப்படத்திற்கு, இதற்கான தீர்வுகளை கண்டடைய, காவல்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தால் அதுவே இந்த படத்தின் வெற்றியும் தமிழ் சமூக எதிர்காலத்தின் வெற்றியாகவும் இருக்கும்.

#Jaibhim
#perspectives

Comments

Post a Comment