பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா (இந்திய தத்துவஞான விமர்சனம்)

 "பெரியார் பழுத்த தத்துவ அறிவாளர் மட்டுமன்று. இருபதாவது நூற்றாண்டின் இந்திய பகுத்தறிவின் சிகரம். " - ஏ. எஸ். கே




பெரியாரை பற்றி ஒரு பார்ப்பனர் புத்தகம் எழுதியுள்ளாரே என்றதும் ஆச்சரியம், அதும் ஆதரித்து ஒரு புத்தகம், அந்த பார்ப்பனர் ஒரு கம்யூனிஸ்ட் என்றதும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பெரியாரின் மறைவுக்கு பின் வெளிவந்த புத்தகம். ம .சங்காரவேலருக்கு சமர்ப்பித்துள்ளார்.

பார்ப்பன குடும்பம் தான் என்றாலும் சீர்திருத்த கருத்துக்களை உள்வாங்கி அனைவரும் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொண்டவர்கள் என்றே அவர் குடும்பத்தை அறிமுக படுத்தி கொள்கிறார் ஏ. எஸ். கிரிஷ்ணமாச்சாரி அய்யங்கார். பின்னர் சாதி பட்டம் நீக்கி தனது பெயரை ஏ. எஸ். கே என்று சுருக்கி வைத்துக்கொண்டார். தொழிற்சங்க தலைவர்பதவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பையும் இவர் வகித்துள்ளார். 1938 லேயே பெரியாரின் தொடர்பு ஏற்பட்டு அவர் பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதை அறிமுக உரையில் குறிப்பிடுகிறார்.

இந்த புத்தகம் இந்திய தத்துவ மரபில் பெரியாரின் நாத்திகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்திய தத்துவத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள அவசியம் உதவும் என்றே நினைக்கிறேன். இந்தியாவில் மட்டும் தான் தத்துவம் என்பது எந்த ஒரு கேள்விக்கும் உட்படுத்த படாமல் இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் தத்துவமும்- சமயமும் ஒன்றிணைந்து கொண்டதால். தத்துவம் என்பது அறிவு செயல்பாடு, சமயத்திற்கு அத்தகைய தேவை இல்லை. எனவே தத்துவதோடு சமயம் ஒன்றிணையும்பபோது அறிவு செயல்பாடு தடைபட்டு உணர்வுகள் தலை தூக்குகிறது.

நாத்திக பண்புகளை கொண்ட மீமாம்சம், சாங்கியம், சார்வாகம், லோகாயதம் போன்றவை எல்லாம் கூட பிற்காலத்தில் நீர்த்து போனதற்கு இந்த சமய கூறுகளே காரணம் என்கிறார் ஏ. எஸ். கே.

அறிவை முதன்மையாக கொண்ட மதங்களான பௌத்தம், சமணம் போன்றவை எல்லாம் அந்த நாத்திக மரபின் எடுத்துக்காட்டாக கூறுகிறார். புத்தர் ஒரு பொருள்முதல்வாதி என்கிறார், "அறியாமையே அனைத்து துன்பத்திற்கு காரணம்" என்று அவர் சொன்னது இதன் அடிப்படையில் தான். ஆன்மா, ப்ரம்மம் போன்ற போலி சொற்களை நம்பி மதியை இழக்காமல், சிந்திக்க சொன்னவர் புத்தர். இத்தகைய நாத்திக(பொருள்முதவாத) மரபில் தொடர்ச்சியாக பெரியார் இருக்கிறார். இந்தியாவின் ஆக சிறந்த சிந்தனையாளர் என்று பெரியாரை குறிப்பிடலாம் என 1974ல் எழுதுகிறார் ஏ. எஸ். கே.

இந்த இடத்தில அம்பேத்கரை குறிப்பிட்டாகவேண்டும் “Navayana Buddhism” என்று அம்பேத்கர் போதித்ததும் நவீன நாத்திகபண்பின் அடிப்படையில் தான். பெரியார் மேற்கொண்ட பகுத்தறிவு பிரச்சாரமும் நாத்திகபண்பின் அடிப்படையில் சொல்லப்பட்டவையே. இருவருமே நாத்திக மரபின் தொடர்ச்சியாக தான் பார்க்க வேண்டியுள்ளது.

இருவர் நாத்திகம் பேசியதும் சாதி ஒழிப்புக்காகவும், இந்து மதத்தின் அடிப்படையான வர்ணாஸ்ரம-வேத தத்துவத்தையும் அதன் தலைமை காரணகர்த்தாவாக இருக்கும் கடவுளையும் தகர்த்து எரிய தான். விடுதலை உணர்வின் வெளிப்பாடு இவர்கள் பேசிய பகுத்தறிவு.

இந்நூலில் பெரியாரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது, பல புதிய சுவாரசியமான தகவலும் இடம்பெற்றுள்ளது, இந்திய தத்துவத்தின் சுருக்கமான அறிமுகமும் இடம்பெறுகிறது. 1974இல் இப்படி ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது என்பதே வியப்பை ஏற்படுத்துகிறது.

வாய்ப்பிருப்பின் அவசியம் வாசிக்கவும்.

Book : பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா (இந்திய தத்துவஞான விமர்சனம்)
Author: ஏ. எஸ். கே

Comments