தெற்கிலிருந்து ஒரு சூரியன் - சில பகிர்வுகள்
நான் கலைஞரின் மறைவுக்கு பின் திராவிட இயக்க வரலாறையும் அது சார்ந்து புத்தகங்களையும் வாசிக்க தொடங்கியவன், திராவிட இயக்கம் சார்ந்து என் சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் தீர்மானிப்பதில் புத்தகங்களே முதன்மையாக இருந்துள்ளது. அந்த வகையில் இந்து தமிழ் திசை வெளியிட்ட "மாபெரும் தமிழ் கனவு" "தெற்கிலிருந்து ஒரு சூரியன்" போன்ற புத்தகங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தின் வீச்சை சரியாக பதிவுசெய்யவில்லை என்றே சொல்வேன். சில கட்டுரைகள் தவிர்த்து மற்றவை எல்லாம் ஏனோதானோ நடையிலே எழுதப்பட்டதாகவே தெரிகிறது.
திராவிட இயக்கத்தை பற்றி பதிவுசெய்யப்பட்ட நீர்த்துப்போன வடிவங்களாக இந்த இரு தொகுப்பையும் சொல்லலாம், ஆனால் ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும் இந்த இரு புத்தகங்கள் தான் பரந்த வாசகர்களை திராவிட இயக்கம் நோக்கி அழைத்துவந்தது, திராவிட இயக்கத்தின் அடிநாதமான வாசிப்பு பழக்கம் குன்றி போனதே இதற்கான காரணமாக சொல்லலாம். அதை மீட்டுருவாக்கினால் தான் திராவிட இயக்கத்தின் அடிப்படைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும். இந்தியாவில் தற்போதிருக்கும் சூழல் தொடரும் பட்சத்தில் திராவிட இயக்கத்தின் தீவிர தன்மைகளின்(Radicals of Dravidian Movement) தேவையும் அதிகரிக்கவே செய்யும்.
“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” நூல் உணர்வுபூர்வமாக அதே சமயம் அறிவாழம் மிகுந்த கருத்துக்களால் நிறைந்தே இருந்தது. பெரியாரை பற்றியோ அண்ணாவை பற்றியோ அல்லது கலைஞரை பற்றியோ ஒரு கட்டுரை எழுதும்போது அவர்களோடு சேர்ந்து இயங்கிய இயக்கத்தின் வரலாறு தவிர்க்க இயலாத ஒன்று. காரணம் திராவிட இயக்கத்தின் போக்கை அந்தந்த காலகட்டத்தில் தீர்மானித்த முகங்கள்.
தீவிரமாக கொள்கைகளை பேசிய சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக(JUSTICE PARTY + SLM) மாறிய போது அதன் பண்பிலும் ஒரு மாற்றம் இருந்தது. அரசியல் நிர்ணய சபையில் திராவிட இயக்க கொள்கைகளை பிரதிநிதித்துவபடுத்த தவிறியதன் விளைவாக உருவானதே திமுக.
திக-திமுக பிளவுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், அந்த பிளவின் அடிப்படை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது திராவிட இயக்கம் கொண்டிருந்த நம்பிக்கை. திமுக தேர்தலில் பங்கேற்காத காலகட்டம் என்பது விதை தூவப்பட்ட காலம், பயிரின் தன்மை செழிப்பாக இருப்பதை உணர்ந்து தான் தேர்தல் அரசியலில் கால் வைக்கிறது திமுக(1957). 10 ஆண்டுகளில் அறுவடையும் நடக்கிறது(1967). துல்லியமான தீர்மானங்கள்,கொள்கை கோட்பாடுகள் நிறைந்த ஒரு இயக்கத்தால் மட்டும் இது சாத்தியப்படும்.(இதற்க்கு மற்றோரு எடுத்துக்காட்டு ஆர்.எஸ்.எஸ் - பாஜக)
அதிகார குவிப்புக்கு எதிராகவும், ஜனநாயகம் தழைக்கவும், விளிம்புநிலை மக்களை அதிகார மையம் நோக்கி நகர்த்தவும் தான் இந்த இயக்க செயல்பாடுகள் அமைந்துள்ளது. அப்படி மதிப்பிடுவது தான் சரியும் கூட. திரு. ஜெயரஞ்சன் சொல்வார் "திராவிட இயக்கம் Empowerment Justice ஐ அடிப்படையாக கொண்டு இயங்குகிறது”. அது இந்த தமிழ் நிலம் சார்ந்து ஜனத்தின் அபிலாசைகளை(Aspirations) கூர்தீட்டி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு காலத்தில் இழிவாய் நடத்தப்பட்ட தமிழர்களின் சுயமரிதை மீட்டெடுத்தது திராவிட இயக்கம் தான்.
"பஞ்சம் பிழைக்க வந்த மதராஸி" என்று வடவர்கள் கேலி கிண்டல் அடித்த காலம் எல்லாம் இருந்தது. 60களில் உத்திர பிரேதேசமும் - தமிழ்நாடும்(அப்போது மெட்ராஸ் ஸ்டேட்) ஏழ்மையிலும், தனிநபர் வருவாயில் ஒரே நிலையில் இருந்தவை தான்(Refer: The Paradox of India’s North–South Divide).
மண் வளம் - மழை வளம் நிறைந்த உ.பி யை விட தமிழ்நாடு இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு இங்கு நடந்த திராவிட அரசியலை தவிர்த்து வேறென்ன காரணங்கள் இருந்துவிட போகிறது.
90களுக்கு பிறகு நடந்த தாராளமயமாக்களையும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டது தமிழ்நாடு தான். அனைவருக்குமான வளர்ச்சியை சந்தை பொருளாதாரத்தில் இருந்து கொண்டே சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிறுவியதும் இந்த இயக்கம் தான். காலத்திற்கு தகுந்தாற் போல் மக்களுடன் நெருக்கத்தை அது ஏற்படுத்தி கொண்டே வருகிறது. கொள்கையில் சமரசம் செய்துகொண்டது, இளைஞர்களை அரசியல்படுத்த தவறிவிட்டது என்ற விமர்சனங்களை எல்லாம் 2021 தேர்தல் முடிவு தவிடுபொடி ஆக்கி இருக்கும்.
திராவிட இயக்க கொள்கைகளை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் பேச தொடங்கி இருப்பதே இதன் சமகால பொருத்தத்தை(Contemporary Relevance) உணர்த்தும்.
இந்த இயக்கத்தின் வரலாறு ஆழமாக எழுதப்பட வேண்டிய ஒன்று, இதன் தேவை இந்த நூற்றாண்டின் முக்கிய தேவைகளுள் ஒன்று, அதன் லட்சியங்களை நோக்கி எடுத்துவைக்கும் ஒருவொரு அடியும் தமிழ் மக்களின் சுயமரிதையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
கலைஞர் கூறி சென்ற ஐம்பெரும் முழக்கங்கள் திராவிட இயக்கத்தின் இன்றைய தேவையை உணர்த்தும்
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
Comments
Post a Comment