வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா


 


காந்தி - வ.உ.சி என இருவரும் பேசுபொருள் ஆகி இருப்பதாலோ என்னவோ எனக்கு இந்த புத்தகம் எதார்த்தமாக வாசிக்க கிடைத்தது. 110 பக்கங்களை மட்டுமே கொண்ட மிக சிறிய நூல், ஆனால் பல்வேறு சிந்தனை பாய்ச்சல்களை எனக்குள் ஏற்படுத்தியது.


இரண்டு ஆளுமைகளின் சுவாரசியமான பண்புகள் பற்றியும், ஒரு சிக்கலை இருவரும் எப்படி அணுகினார்கள் என்பதை பற்றியும், அந்த கால சமூக சூழல் எப்படி பட்டதாக இருந்தது என்பதை எல்லாம் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார் ஆய்வாளர் A.r. Venkatachalapathy .

ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கப்பல் கப்பலாக அழைத்து செல்லப்பட்ட லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்களின் அடிமை வர்த்தகத்திற்கு தடை விதித்த சமயத்தில், கூலிகள் என்று இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு வேலை செய்ய சென்றார்கள். இன்றைக்கும் கூலி(coolie) என்கிற தமிழ் வார்த்தை உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு தொடக்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தே அதிக கூலிகள் சென்றார்கள் என்பது தான் காரணம். பல்வேறு சமூக(Caste) மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு கூலிகளாக சென்றார்கள் என்பது இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள பின் இணைப்பின் மூலம் தெளிவாகிறது. மேலும் அங்கு கூலிகளாக சென்றவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் அங்கேயே நிரந்தர குடியேற்றமும்(Permanent Settlements) அமைத்து கொண்டார்கள். தென் ஆப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட போராட்டங்களில் இவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டார்கள். தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களாகவே இருந்தார்கள்.

இந்த இடத்தில் தான் ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் முன்னெடுத்த "சுவதேசி இயக்கமும்" அதன் தொடர்ச்சியாக கப்பலோட்டி கைதான வ.உ.சியும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேல் முறையீடு செய்ய இங்கிலாந்தில் இருக்கும் “Privy council” ஐ தான் அணுகியாக வேண்டும். இதற்க்கு ஆகும் செலவும் வ.உ.சியின் குடும்ப சூழலும் முற்றிலும் முரண்பாடானவை. எனவே அவர்கள் பிறரின் உதவியை பெரிதும் எதிர்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. வ.உ.சியின் நீதிமன்ற செலவுகளுக்கென வந்த பெரும்பாலான நிதிஉதவி தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தே வந்தது. இவர்கள் எல்லாம் பலதரப்பட்ட சாதி பின்னணியை கொண்டவர்களாக இருப்பது தான் வியப்பு. தமிழன் என்று வந்துவிட்டால் சாதி நீர்த்து போவது ஒரு பண்பாகவே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

காந்திக்கும் - வ.உ.சிக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றங்களை அடிப்படையாக வைத்து தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வெறும் 19 கடிதங்களை வைத்து ஒரு வரலாறை எழுத முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார் திரு.AR வெங்கடாசலபதி .

நூலின் கருவை வெளியிட்டால் புத்தகத்தை வாசிப்பவருக்கு சுயராசியம் குறைந்துவிடும் என்பதால், இதோடு அறிமுகத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கை ஒருவராலும் மூடி மறைக்கமுடியாது என்பதை வரலாறு நமக்கு சாட்சியமாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது. எழுதப்படாத சிறு, குறு, பெரு வரலாறுகளை இனியேனும் நாம் எழுத தொடங்க வேண்டும்.

அனைவரும் அவசியம் வாசித்து பலனடையவும்.

Book: வ.உ.சியும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா




Comments