சமூக நீதிக்கான அறப்போர் - பி .எஸ். கிருஷ்ணன்
"சாதியை சொல்லாதே, சாதியை கேட்காதே, சாதியை சிந்திக்காதே" - நாராயண குரு
எந்த ஒரு அரசும் நிலையாக நடப்பதற்கு ஒரு அரசமைப்பு(Constitution) அவசியமானது, அது சார்ந்த நிறுவனங்களும்(Institutions) சமூக மாற்றங்களை நிகழ்த்த இன்றியமையாதவை. அரசமைப்பு, நிறுவனங்கள் போன்றவற்றை தாண்டி அதை செயல்படுத்தும் இடத்தில இருக்கும் அதிகாரிகளும்(Bureaucrats ) முக்கியமானவர்கள். இந்தியா போன்ற சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கும் இடங்களில் பொறுப்பான அதிகாரிகளில் தேவை அதிகம் என்றே சொல்லவேண்டியுள்ளது. பிரிட்டிஷ் காலத்து ICS தான் நவீன இந்தியாவின் IAS பதவியாக இருந்துவருகிறது. அது நவீனப்பட்டாலும் அதன் காலனிய தன்மை மறைந்தபாடில்லை.
இதன் காரணமாக அதிகாரங்களால் தனக்கு கிடைக்கும் சுகபோகங்களை அனுபவிக்கும் அதிகாரிகள் தான் அதிகம் உருவாகியிருக்கிறார்களே ஒழிய சமூக மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என்கிற அக்கறை கொண்ட அதிகாரிகள் வெகு சொற்பம். அதில் சிலரின் வாழ்க்கை வரலாறு, அனுபவ பகிர்வு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டு வாசிக்க கிடைக்கிறது.
இந்த வரிசையில் திரு . பி .எஸ். கிருஷ்ணன் முக்கியமானவர், சர்வ அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பிற்குள் இருந்துகொண்டு தன்னாலான சமூகநீதிக்கான அறப்போரை எந்த சமரசமும் இன்றி அவர் தொடுத்தார். கேரளாவில் பிறந்த இவர் தன்னை சாதிக்கு எதிரானவராகவும் மதங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் அறிவித்துக்கொண்டார். திரு. AN. சட்டநாதனிடம் கேட்கப்பட்ட "நீங்க பார்ப்பனரா?" போன்ற கேள்விகள் எல்லாம் இவரிடமும் கேட்கப்பட்டுள்ளன. இருவரும் கடின உழைப்பின் காரணமாக முன்னேறியவர்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தார்கள்.
“A CRUSADE FOR SOCIAL JUSTICE” என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பே இந்நூல், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த முனைவர் வசந்தி தேவி அவர்களுடன் பி.எஸ்.கிருஷ்ணன் மேற்கொண்ட உரையாடல் தான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம். பின் இணைப்பாக “சமூக சமத்துவத்திற்கு வழிகாட்டும் செயல்திட்டம்” என்று திரு. பி.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தயாரித்த ஆவணம் மொழிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், சமூகநீதிக்கான கூறுகள், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மேம்பட அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள சரத்துகள் போன்றவை பற்றி எல்லாம் தெளிவாகவும் அனுபவ ரீதியிலும் பேசுகிறார். தலித்துகளுக்கும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இவர் உதவ முன்வந்தபோது அதிகார வர்கத்தை சேர்ந்த சிலர் இவருக்கு கொடுத்த சிக்கல்களை இந்நூலில் பதிவுசெய்துள்ளார் .
பிற்படுத்தப்பட்ட்டோருக்கான இடஒதுக்கீட்டை செய்லபடுத்துவதிலும் அதில் மேற்கொள்ளவேண்டிய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் சாதி வாரி இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாகவே பேசுகிறார். அகில இந்திய அளவில் இருக்கும் OBCஇடஒதுக்கீட்டில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் பற்றியும் ரோகிணி குழுவின் பரிந்துரைகள் பற்றிய செய்திகளும் சமகாலத்தில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டிய பிரச்சனைகளில் ஒன்று.
சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டின் கட்டாயத்தையும் அதை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியும் அவரது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
சாதியை ஒழிக்கும் வழிகளில் ஒன்றான "சாதி மறுப்பு திருமணங்களை" செய்வோருக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை வழங்குவதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதன் மூலம் சாதி ஒழிப்பு பணியில் அரசு தீவிரமாக செயல்பட முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால் பயனடைந்த சமூகங்கள் அதில் பின்தங்கியுள்ள பிற சமூகங்களின் நலன் கருதி இடஒதுக்கீட்டை துறக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார், சமஅளவில் இடஒதுக்கீடு பரவாமல் இருப்பதை சரி செய்ய Creamy Layer முறையை விட உள் ஒதுக்கீடு முறையே உகந்தது என்றும் சொல்கிறார்.
சமுகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் பல தெளிவான விளக்கங்களை பெறுவதற்கு இந்நூல் அவசியம் உதவும். இப்படிப்பட்ட ஆவணங்களும் நேர்காணல்களும் சமுக நீதியின் மேல் அக்கறை கொண்ட பிற உயரதிகாரிகளிடமிருந்தும் மேற்கொள்ளப்பட்டால் அமைப்பில் இருக்கும் சிக்கல்களை உணரவும், அதை கடந்து சமூக நீதியை நிலைநிறுத்தவும் அவசியம் பயன்படும்.
வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்!
Comments
Post a Comment