"சேரன்மாதேவி குருகுல போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” - பழ. அதியமான்
பார்ப்பனர் அல்லாதார் - திராவிடர் - தமிழர் என்ற மூன்றும் ஒரே பொருள்கொண்டவை, காலத்திற்கு ஏற்ப இது மாறிவந்தாலும் மூன்றின் பயன்பாடும் சுயமரியாதையை அடிப்படையாக கொண்டது. வர்ணாஸ்ரம தர்ம மரபை எதிர்த்து முன்வைக்கப்பட்ட சுயமரியாதைக்கான நவீன அடையாளங்கள் இவை. எந்த பார்ப்பனரும் தமிழராக இருப்பதை விட பார்ப்பனராக இருக்காவே அதிகம் விரும்புவர், காரணம் சாதி அடுக்கு கொடுக்கும் அதிகாரம் என்கிற சிறப்பு சலுகை.
சாதியை துறந்து அல்லது சாதி ஒழிப்பை பேசுவோர் அனைவரும் இந்த மூன்று அடையாளங்களுக்குள் அடங்குவர். திராவிட இயக்கம் இந்த அடையாளங்களை அப்படி தான் கட்டமைத்தது(Inclusive). திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணம் அடையாளங்களை கட்டமைப்பதில் அது காட்டிய நெகிழ்வுத்தன்மை(Flexibility) என்றே சொல்லலாம். இங்கு சாதிகளின் அரசியல்மயமாக்கல் தான் அரசியலை மக்கள்மய(Democratization) படுத்தியுள்ளது. அதை சாதிகளின் அடையாளமாக கட்டமைக்காமல் சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் அடையாளங்களாக கட்டமைப்பதன் மூலம் மக்கள் திரளை ஜனநாயக படுத்தியது திராவிட இயக்கம்.
இந்த இடத்தில தான் சேரன்மாதேவி குருகுல போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது, 1923-25இல் நடைபெற்ற போராட்டம். குருகுலத்தில் பார்ப்பனர் அல்லாதாரும் பார்ப்பனரும்(மாணவர்கள்) ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்பது இந்த போராட்டத்தின் அடிப்படை. ஆனால் இது வெற்றி பெற்ற போராட்டம் என்று சொல்லிவிட முடியாது, கடைசிவரை அங்கு சமபந்தி போஜனம் நடக்கவில்லை. இந்த போராட்டத்தின் விளைவாக பெரியாரின் "சுயமரியாதை இயக்கத்தை" சொல்லலாம். பார்ப்பனர் பிடியில் இருந்த காங்கிரஸ் இயக்கத்தையே இரண்டாக உடைத்துப் போட்ட போராட்டம். சேரன்மாதேவி குருகுல போராட்டமும் - வைக்கம் போராட்டமும் ஒரே சமயத்தில் நடந்தவை.
பெரியாருக்கு அரசியல் விடுதலையை(Political Liberty) விட சமுதாய விடுதலை(Social Liberty) முக்கியம் என்று உணர்த்திய போராட்டங்களாக இவை இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். பெரியார் “குடிஅரசு” இதழையும் இந்த சமயத்தில் தான் தொடங்குகிறார்.
காந்தியின் சத்யாகிரஹ ஆஸ்ரமம் போல், தாகூரின் சாந்தி நிக்கேதேன் போல், இந்திய தேசிய கல்விமுறையை கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது தான் சேரன்மாதேவி குருகுலம், தொடங்கியவர் வ.வே.சு ஐயர். அவரின் சொந்த நிதியில் தொடங்கப்பட்டதல்ல, பல்வேறு இடத்தில இருந்து நிதி வந்து சேர்ந்தது, குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகளவில் நிதி திரட்டி அனுப்பிவைத்தார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் 10000 ரூபாய் தருவதாக உறுதி அளித்து முதல் தவணையாக ரூ. 5000 கொடுத்தது.
அங்கு சாதி வித்தியாசம் கடைபிடிக்க படுகிறது என்பதை உணர்ந்த காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் குறிப்பாக டாக்டர்.வரதராஜுலு , பெரியார் போன்றோர் இதை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். மேலும் வ.வே.சு அய்யரிடம் இதை தெளிவுபடுத்தும் படி கேட்டிருந்தார்கள். அவரிடமிருந்து சரியான பதில் வராத காரணத்தால், மேலும் குருகுலத்திற்கு நிதி தரமுடியாது எனவும், கொடுத்த நிதியை திருப்பி கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார் வரதராஜுலு அவர்கள். குருகுலத்திற்கு கொடுப்பதற்காக வசூலிக்கப்பட்ட நிதியை நிதி அளித்தவர்களுக்கே திருப்பி கொடுக்க வேண்டும் என்பதையும் காலம் செல்ல செல்ல நிர்பந்தித்தார்கள்.
ஆனால் காங்கிரஸ் பார்ப்பனர்களில் பலர் இது சுதந்திர போராட்டத்திற்கு எதிரானதென்றும், வகுப்புவாதம் பேசுவது தேசிய உணர்வுக்கு எதிரானதென்றும் திசைதிருப்பும் விமரிசனங்களை முன்வைத்தார்கள், ராஜகோபாலாச்சாரி போன்றோர் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து விலகி இருப்பதாக சொல்லி விலகினார்கள். சமபந்தி போஜனம் குருகுலத்தில் நடந்தால் பட்டனி கிடந்து சாகவும் தயார் என்றார் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர்.
காந்தியிடம் இதை விவாதித்த போது, சமபந்தி போஜனத்தை ஏற்காத மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், “நான் வர்ணாஸ்ரம தர்மத்தில் நம்பிக்கையுள்ளவன்” என்றும் கூறினார். வரும் ஆண்டுகளில் சமபந்தி போஜனத்தை ஏற்காத மாணவர்களை குருகுலத்தில் அனுமதிக்கக்கூடாது என்றார். மேலும் இந்த குருகுல போராட்டத்தில் ஒரு நல்ல முடிவை விரைந்து எட்டும்படி அவர் கூறி சென்றார்.
இதை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் சேர்ந்து காங்கிரஸுக்கு வெளியில் குருகுல போராட்டத்தை விவாதிக்க "தமிழர் கூட்டம்" என்கிற அமைப்பை ஏற்படுத்துகிறார்கள், இதை அப்போதைய “குமரன்” மற்றும் “லக்ஷ்மி” போன்ற பத்திரிகைகள் எல்லாம் நீதி கட்சியோடு சேர்ந்து பயணிக்கும்படி எழுதி இருந்தார்கள். ஆனால் 1925 இல் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தொன்றில் வ.வே.சு ஐயர் இறந்துபோகிறார். பின் குருகுல போராட்டம் ஒரு முடிவை எட்டுகிறது.
அதன் பிறகு போதிய நிதி இல்லாமல் போனதால் குருகுல செயல்பாடுகள் முடங்கி போகின்றன, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து இயங்குகிறார், டாக்டர். வரதராஜுலு பின்னாட்களில் இந்து மகா சபையோடு சேர்ந்து செயல்படுகிறார்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சாரம் காங்கிரஸ் காமிட்டிக்குள் ஏற்படுத்திய விளைவு அதை கிட்டத்தட்ட செயலிழக்க செய்யும் அளவுக்கு இருந்துள்ளது. வ.வே.சு ஐயரின் மறைவு ஏற்படாமல் இருந்திருந்தால் குருகுல போராட்டம் வேறு வகையில் கூட முடிந்திருக்கலாம். ஆனால் இந்த போராட்டம் ஏற்படுத்திய விளைவு, பின்னாட்களில் திராவிட இயக்கம் தன்னை வலிமையாக நிலைநிறுத்தி கொள்ள தூண்டுகோலாக அமைந்தது.
சேரன்மாதேவி போராட்டம் பொருளை பகிர்ந்து கொடுக்கும்படியோ அல்லது பொருளாதார அடிப்படையில் அமைந்த போராட்டமோ அல்ல, அது முழுக்க முழுக்க மனிதனை சமமாக நடத்தவும், சுயமரியாதையுடன் நடத்தவும் கேட்டது. ஒரே இடத்தில அமர்ந்து உணவருந்த அனுமதி கேட்டது . ஆங்கிலேய கல்வி முறைக்கு எதிராக உருவாக்கப்படும் குருகுலத்தில் அனைவரும் சமமாக நடத்தப்படாமல் இருக்கும்பட்சத்தில் எப்படி தேசிய உணர்வு உண்டாகும் என்ற கேள்வியை பார்ப்பனரல்லாத தலைவர்கள் எழுப்பினார்கள். ஆனால் பார்பனர்களிடத்தில் இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை,அவர்கள் செய்ததெல்லாம் காந்திக்கு கடிதம், ராஜினாமா, உண்ணாவிரதம் போன்ற மிரட்டல்கள் தான்.
சமுதாய தளத்தில் சுதந்திரத்தையும்- சமத்துவத்தையும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் விரும்பவில்லை, மரபார்ந்த வர்ணாஸ்ரம அதிகாரங்களையும், நவீன காலனிய அதிகாரங்களையும் கைப்பற்றும் முனைப்பு தான் அவர்களிடம் இருந்ததே ஒழிய ஜனநாயக உணர்வு அவர்களிடம் துளியும் இல்லை. இதன் விளைவு தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இறுக்கமாக நிலைகொண்டது. அது இங்கிருக்கும் வெகுஜன மக்களின் சுயமரியாதையை மீட்டெடுத்தது, அனைவரையும் சமமாக நடத்தியது, நில சீர்திருத்தங்களை மேற்கொண்டது, அதிகார குவிப்பை எதிர்த்து கேள்வி கேட்டது, அனைத்து விதமான அடையாளங்களையும் உள்ளடக்கிய இயக்கமாக திராவிட இயக்கம் செயல்பட்டது. அதன் தத்துவமும் அப்படியே அமைந்தது, இதற்கு காரணம் பெரியாரின் பகுத்தறிவு.
மரபு கதையாடல்களை வைத்து பெரியார் அடையாளத்தை கட்டமைக்கவில்லை, நவீனத்தின் விளைவான பகுத்தறிவின்(Rationality) அடிப்படையில் “திராவிடர்” என்கிற அடையாளத்தை உருவாக்கினார், கேள்விகள் கேட்கச்சொன்னார், சிந்திக்க சொன்னார், "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" என்றார். "மனிதனை நினை கடவுளை மற" என்றார். இங்கு மனிதன் என்பவன் நவீனத்தின் வடிவமாகவும்(Man is an end in himself) கடவுளை பழமைவாதத்தின் வடிவமாகவும் அணுகவேண்டும். மதத்தின் பிடியில் இருந்தும் சாதியின் பிடியில் இருந்தும் மனிதனை விடுவிக்கவே அவர் முயன்றார். அந்த பயணத்தை நாம் தொடரவேண்டும் அதுவே இந்த இயக்கத்திற்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும்.
பின்குறிப்பு:
இந்த கட்டுரை “சேரன்மாதேவி குருகுல போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” என்கிற புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. மிக முக்கியமான புத்தகம். துல்லியமாக அனைத்து நிகழ்வுகளையும் சான்றுகளோடு பதிவுசெய்துள்ளார் திரு. பழ. அதியமான் அவர்கள். ஒரு சினிமாவாக எடுக்கும் அளவுக்கு தகவல்கள் நிரம்பி இருக்கிறது. வாசிப்பு பழக்கம் குறிந்துபோன இந்த காலகட்டத்தில் புத்தகங்களை சினிமா வடிவில் மாற்றும் முன்னெடுப்புகளில் திராவிட இயக்க நண்பர்கள் இறங்க வேண்டும். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
Comments
Post a Comment