இடஒதுக்கீடும் மதவாதமும்


 


NEET முதுநிலை தேர்வுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் OBC இடஒதுக்கீட்டை கடைபிடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பளித்தது. கடந்தவாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகுதி(Merit) என்பதன் வரையறையை பற்றியும் இடஒதுக்கீடு பற்றியும் விரிவாக பேசி இருந்தார்.


இந்திய சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளும் தனக்கென ஒரு அரசமைப்பை உருவாக்கி 72 ஆண்டுகளும் நிறைவடைந்த இந்த சூழலில், சோசியலிச அரசாக தன்னை முன்னிறுத்திய காங்கிரஸ் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டியதே இல்லை. இது விமர்சனம் அல்ல,ஒப்புக்கொள்ளவேண்டிய பிழை.

நேரு சுதந்திரத்திற்கு முன்பே தனது சகாக்களோடு சேர்ந்து உருவாக்கிய “Objective Resolution” இல் கூறப்படுவதை போல் “WHEREIN shall be guaranteed and secured to all the people of India justice, social economic and political: equality of status, of opportunity” என்ற வரிகளுக்கும் துரோகம் செய்துவிட்டார். (Preambleல் இன்றளவும் இருக்கும் வரிகள் இவை)

SEBC/OBC என்ற பிரிவுக்காக ஒரு ஆணையத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியலமைப்பின் Article 340 கூறுகிறது, இது அமைக்கப்பட்ட ஆண்டு 1993. (National Commission for Backward Classes)

வேலைவாய்ப்பில் OBC களுக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்பட்ட ஆண்டு 1990களின் பிற்பகுதி. ஆட்சியாளர்கள் மாறினாலும் இந்த இடஒதுக்கீடு எல்லாம் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்வி குறி.

இந்த Backward Class என்பதை வெறும் இடஒதுக்கீடாக சுருக்கி பார்க்காமல் விரிவாக பார்ப்பது அவசியம் என்றே நினைக்கிறேன். இங்கு சாதிய படிநிலையில் பார்ப்பனர்களை தவிர பிற சமூகங்கள் அனைத்தும் சமுதாய(Socially) ரீதியாக பிற்படுத்தப்பட்டவை தான், பிற்படுத்தப்படும் தன்மை என்பது சாதியை போலவே படிநிலை(Graded) அசமத்துவத்தை (Inequality) அடிப்படையாக கொண்டது. அப்படி பார்த்தால் இங்கு பெரும்பான்மை சமூகங்கள் பிற்படுத்தத்ப்பட்டவை. பிற மதத்தவர் உட்பட.

OBC/SC/ST என அனைவரும் பிற்படுத்தப்பட்டவர்கள். தொடக்க காலத்தில் SC/ST மட்டும் Backward Classஎன்ற நிலை இருந்ததால், SEBCகள் OBC(Other Backward Classes)என்று அழைக்கப்பட்டார்கள். இவை எல்லாம் நிர்வாக ரீதியாக ஏற்படுத்தப்பட்ட சொல்லாடல்கள்.

இங்கு நவீன கால சாதியம் என்பது பிரிட்டிஷ்- பார்ப்பனர்களின் குழப்பமான கூட்டுத்தனத்தால் நிறுவப்பட்ட ஒன்று. வரி வசூல் செய்யவும் நிர்வாகம் சார்ந்த செயல்களை பார்த்துகொள்ள்ளவும் பார்ப்பனர்களை ஆங்கிலேய அரசு தொடக்க காலத்தில்(Pre -1857) பயன்படுத்தி கொண்டது. இருவரும் ஆரியர்கள் என்பதால் இயற்கையாகவே இருவருக்கும் கூட்டு ஏற்பட்டது.

பிரிட்டிஷ் அரசின்(Post-1857) கீழ் செயல்பட தொடங்கிய சமயத்தில் ஆங்கிலேயர்களுக்கு அனைவரின் அபிலாஷைகளையும் நிவர்த்திசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் சேர்த்துக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். இதற்கு பார்ப்பனர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது, இருந்தும் பிரிட்டிஷ் அரசு அதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளவில்லை. இதன் காரணமாக தாங்கள் இழக்கப்போகும் அதிகாரத்தை கருத்தில் கொண்டே பார்ப்பனர்கள் தலைமையில் விடுதலை இயக்கம் உருவாகிறது. அதற்கு முன் நடந்த விடுதலை இயக்க நடவடிக்கைகள் எல்லாம் பார்ப்பன- பிரிட்டிஷ் கூட்டு அதிகாரத்தை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட சமூக மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

இந்தியாவில் எங்கெல்லாம் காலனிய ஆட்சியின் தடம் இருந்ததோ அங்கெல்லாம் ஒரு எதிர்ப்பியக்கம் எழுந்துள்ளது, அது வெவ்வேறு வடிவங்களில் இருந்துள்ளது. தென்னிந்தியாவிலும் மேற்கிந்தியாவிலும் அது பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக அறியப்பட்டது, வனப்பகுதிகளில் Tribal Uprising நடந்தது.

பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சமூகங்கள் தங்களுக்காக ஒரு அடையாளத்தை நிறுவ தொடங்கினார்கள், இது சாதி ரீதியிலான நடக்காமல் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடிப்படையாக வைத்தே நடந்தது. தனி ஒரு சாதியாக பார்ப்பனர்-பிரிட்டிஷ் கூட்டுத்தனத்தை எதிர்கொள்ள முடியாது என்பது அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அதன் விளைவாக தான் பெரிய குடையில் கீழ் அடையாளங்கள் உருவாக்கப்பட்டது (Eg: adi-hindu, adi-andhra, adivasi, adi-karnataka, Dravidar, Adi-dravidar, buddhist, tamil, namasudra, Non-brahmin). தங்களுக்கான ஒரு மாறுபட்ட வரலாற்று பார்வையையையும், கலாச்சார பார்வையையும் இவர்கள் முன்வைத்தார்கள். ஒற்றுமை உணர்வும் உண்டாகியது.

1857 க்கு பிறகு, ஒருபுறம் நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழைவதும் மற்றொருபுறம் சாதியத்தில் இருந்து விடுபடவும் முயற்சிகளை எடுத்துவந்தார்கள். இங்கு நடந்த இயக்கங்கள் பெரும்பாலும் சாதி எதிர்ப்பு மனநிலையிலேயே அமைந்தது. (Empowerment and Emancipation started happening side by side.)

1909, 1919, 1935 என இங்கு நடைபெற்ற நிர்வாக சீர்திருத்தங்களில் பிரிட்டிஷ் அரசு பெரும்பான்மை மக்களை நிர்வாக அமைப்புக்குள் கொண்டு வரவே நினைத்தது (கட்டாயத்தின் காரணமாக தானே ஒழிய விருப்பத்துடன் எல்லாம் இல்லை)

இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்தியா விடுதலை அடைகிறது, தனக்கென ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தை உண்டாக்கி கொள்கிறது. Liberal Democracy என்று சொல்லிக்கொண்டாலும் நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களை அது கண்டுகொள்ளவேயில்லை. சம வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சியில் அது இறங்கவேயில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசையும் அங்கு இல்லை. அங்கு இருந்ததெல்லாம் சுயநலமும், அதிகார மமதையும் தான்.

மண்டல் கமிஷன் அமைக்கவும், அதை நடைமுறைப்படுத்தவும் ஒரு காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசால் தான் முடிந்தது. அத்தகைய கூட்டணியின் முதுதண்டாக தென்னிந்தியாவில் இருந்து திமுக திகழ்ந்தது. சமூக நீதிக்காக தொடர்ந்து அது போராடியும் வந்துள்ளது. தனக்குட்பட்ட நிலப்பரப்பில் மக்களை ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக உணர வைத்துள்ளது.

இன்றைக்கு தனியார் துறைகளின் எழுச்சியும் சந்தையின் பாய்ச்சலும் வீரியமாக நடந்துகொண்டிருக்கிறது. அதிகார அமைப்புக்குள் வந்தடையாத சமூகங்கள் மதவாதத்தின் அடைக்கலத்தை தேடி செல்ல தொடங்கிவிட்டன(Rapidly in North india and slowly in south). சரியான நேரத்தில் செயல்படுத்தப்படாத இடஒதுக்கீடு இந்த நாட்டை மதவாத சக்திகளின் பிடியில் சிக்கவைத்துள்ளது.

இனி ஆட்சி மாறினாலும் காட்சி மாறுமா என்று தெரியாது. ஆனால் இந்த வரலாற்று பிழைக்கான விலையை இந்தியா இப்போது கொடுத்துவருகிறது.

பின்குறிப்பு :
இந்த கட்டுரைG. Aloysius எழுதிய “Contextualizing Backward Classes Discourse நூலின் அடிப்படையிலும் சமகால நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டது.

Comments

  1. சிறப்பான பதிவு! Keep writing correlations on contemporary events like this! 👍

    ReplyDelete

Post a Comment