சுயமரியாதை - சில புரிதல்கள்
“Ideas shaped the material world, and the material world created conditions for the spread of certain ideas”
-Francis Fukuyama
மனித உள்ளுணர்வின்/ஆன்மாவின் [உள்ளுணர்வை சிலர் ஆன்மா(Soul) என்றும் சொல்லுவதுண்டு] இரண்டு முக்கிய பகுதிகளாக ஆசை(Desire) மற்றும் பகுத்தறிவு(Reason) ஆகியவற்றை சொல்லலாம். இவை இரண்டில் இருந்தும் தன்னிச்சையாக செயல்படும் மற்றொன்று தான் தன்மான உணர்ச்சி(Dignity).
தன்மான உணர்ச்சியை சுயமரியாதை, கண்ணியம், தகுதி போன்ற வார்த்தைகளாலும் சொல்லலாம். அங்கீகாரம்(Recognition) பெற வேண்டும் என்கிற ஆதங்கம் ஏற்படுவதன் காரணம் இத்தகைய சுயமரியாதை உணர்வு தான். ஒருவர் பெரும் அங்கீகாரத்தை பொறுத்தே அவரின் அடையாளத்திற்கான தேடல் தொடங்குகிறது. இந்த தன்மான உணர்வு சில நேரங்களில் நேர்மறையாகவும் சில நேரங்களில் எதிர்மறையாகவும் பயன்படுத்த படுகிறது. எடுத்துக்காட்டாக திராவிட இயக்கம் சுயமரிதையை -அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என்கிற அடிப்படையில் கேட்டது(Equal Respect). இந்துத்துவ இயக்கம் தங்களை மேன்மை பண்புகள் கொண்டவர்கள் என்ற ஆதிக்கத்தின் அடிப்படையில் கேட்டது(Supremacy). இரண்டும் தன்மான உணர்வின் வெளிப்பாடு தான், ஒன்று நவீன பண்புகளையும் மற்றொன்று பழமைவாத/மரபார்ந்த பண்புகளையும் அடிப்படையாக கொண்டது.
சமூகத்தில் மதிப்பை பெற சில தனிமனித அடையாளங்களை அங்கீகரிக்க சொல்வதன் காரணமாக காலம்தோறும் அடையாள அரசியலின் தன்மையும் மாற்றம் பெறுகிறது. அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இயற்கையாகவே அமைந்த மனித பண்புகளில் ஒன்று.
காலம் தோரும் சுயமரியாதைக்கான தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. Plato தனது ‘Republic’புத்தகத்தில் தன்மான உணர்வை பற்றி எழுதியுள்ளார். வெளி சூழலுக்கும் உள்ளுணர்வுக்கும் ஏற்படும் முரண்களின் காரணமாக சுயமரியாதை உணர்வு ஏற்படுகிறது. தனிமனித பண்பின் வெளிப்பாடே சுயமரியாதை .
16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த சீர்திருத்த இயக்கம்(Protestant Movement) இதன் விளைவாக ஏற்பட்ட ஒன்றே. தேவாலயங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த புற கட்டுப்பாடுகளை எதிர்த்து கடவுளை தனிமனிதனோடும் அவனது சுயமரியாதையோடும் தொடர்புபடுத்தியது.
சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து மதத்தின் பிடியில் இருந்து சுயமரியாதையை மீட்டு அதற்கு ஒரு மதசார்பற்ற தார்மீக(Secular Morality) தன்மையை வழங்கியவர் Immanuel Kant. அவரை தொடர்ந்து Jean-Jacques Rousseau சுயமரியாதை இயற்கையானதென்றும் அனைவருக்கும் பொதுவானதென்றும் கூறுகிறார். இங்கு சிந்தனைகள் தான் பொருளியல் உலகத்தை வடிவமைக்கின்றன, சில சிந்தனைகள் பரவ வெளியையும் நிலைமைகளையும் அத்தகைய பொருளியல் உலகமே ஏற்படுத்திக்கொள்கிறது.
சுயமரியாதை சிந்தனை இதன் தொடர்ச்சியாக தான் ஜனநாயக தன்மை பெறுகிறது. அங்கீகாரம் பெற அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நிலை உருவாகிறது. பிரெஞ்சு புரட்சியில் தொடங்கிய சுயமரியாதைக்கான தேடல் இன்று வரை பல்வேறு வகையில் இயக்கங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கண்ணியத்திற்கான((Dignity) தேடலில் இரண்டு பிரிவுகள் உருவாகிறது, ஒன்று தனிமனித கண்ணியத்தை(Dignity of an Individual) அடிப்படையாக கொண்டது. மற்றறொன்று ஒரு குழுவின் கண்ணியத்தை(Collectivist Dignity) அடிப்படையாக கொண்டது. குழுவாத அடையாளங்கள் குறிப்பாக இந்துத்துவம், சாதியம், பாசிசம், நாசியிசம், இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவை எல்லாம் மரபார்ந்த இன, மத, மொழி பெருமைகளை கொண்டு உருப்பெறுகின்றன.
உலகமயமாக்கல் இந்த குழுவாத நடவடிக்கைகளை மேலும் கூர்தீட்டியுள்ளது. Brexit, America For Americans, இந்தி-இந்து- இந்தியா, தாலிபான்களின் எழுச்சி, தூய்மைவாத தமிழ் தேசியம், நவ-பார்ப்பனீயம் போன்றவை எல்லாம் இதன் விளைவாக ஏற்பட்டவையே.
நவீன தன்மை கொண்டு சிறு சிறு அடையாள அரசியல் இயக்கங்களுக்காக இடதுசாரிகள் குரல் கொடுக்க தொடங்கியதன் மூலம் தொழிலாளர் புரட்சியை ஏற்படுத்து நோக்கத்தில் இருந்து அவர்கள் விலகிவிட்டார்கள். இதன் காரணமாக உலகம் முழுக்கவே Have’s & Have-not’s இடையிலான அசமத்துவத்தின்(Inequality) இடைவெளி அதிகமாகி கொண்டே செல்கிறது. பொருளாதார துறையில் மட்டும்மல்லாமல் அரசியலிலும் அடிப்படைவாத வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்த தொடங்குகிறார்கள்.
இந்நிலை நீடிக்க தான் போகிறது, இதற்கான தீர்வுகளை கண்டடையும் சிந்தனைகளில் நாம் இறங்கியாக வேண்டும். நவீன அரசியல் தத்துவங்களை முன்னிறுத்தி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜனநாயக பண்புகளான சுதந்திரம்- சமத்துவம்- சகோதரத்துவம் போன்றவற்றை பாதுகாக்கும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.
அடையாளங்கள் என்பவை பிரிவினைக்காகவும் பயன்படுத்தப்படலாம் , ஒன்றிணைக்கவும் பயன்படுத்தப்படலாம், நமது அரசியல் லட்சியங்களை பொறுத்தே அவை அமையப்பெறும். அடிப்படைவாத சக்திகளை எதிர்க்க ஆக்கபூர்வ அரசியல் சக்திகளின் திரட்சி தான் உதவும்.
இந்த கட்டுரை Francis Fukuyama எழுதிய “Identity: Contemporary Identity Politics and the Struggle for Recognition” நூலின் அடிப்படையில் சுருக்கமாக சமகால எடுத்துக்காட்டுகளுடன் எழுதப்பட்ட ஒன்று. வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் இந்த புத்தகத்தை வாசித்து பயனடையவும்.
Comments
Post a Comment