காபியின் கதை
நாம் பருகும் டீக்கும் காபிகும் பின்னல் பல வரலாறு மறைந்து கிடப்பதை திரு . A.r. Venkatachalapathy எழுதிய “In those days there was no Coffee” என்ற வரலாற்று ஆய்வு கட்டுரையை வாசிக்கும் போது புரிந்தது. "துன்பக்கேணி" என்னும் புதுமைப்பித்தனின் சிறுகதை, திருநெல்வேலியில் இருந்து இலங்கை டீ தோட்டத்திற்கு(Plantation) பிழைப்புத்தேடி செல்லும் "மருதி" என்ற பெண்ணின் கதையை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும்.
மலேசியா, ஸ்ரீலங்கா, தென் ஆப்பிரிக்கா என பிரிட்டிஷ் காலனிய நாடுகளில் தோட்ட தொழிலார்களாக சென்றவர்கள் பெரும்பான்மையினர் தமிழர்களாகவே இருந்தனர். இவை எல்லாம் ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் அடிமை வர்த்தகத்திற்கு(Black Slave Trade) தடை செய்ததன் விளைவாக நடந்தவை. கூலி(Coolie) என்கிற வார்த்தையை உலகிற்கு கொடுத்தது தமிழ்நாட்டிலிருந்து சென்ற தோட்ட தொழிலாளர்கள் தான். (A R Venkatachalapathy). தலித்துகள், வன்னியர்கள், கள்ளர்கள் போன்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளை சார்ந்த மக்கள் அதிகளவில் கூலிகளாக சென்றார்கள், தோட்ட தொழிலார்களை நிர்வகிக்கும் கங்காணிகளாக(Agents) உயர்சாதியை சேர்ந்தவர்களே இருந்தார்கள். சாதியின் கட்டுமானம் கொஞ்சமும் குறையாமல் புலம்பெயர் தோட்ட தொழிலார்களிடம் நிறுவப்பட்டது. ( Z. Guilmoto,1993, epw) 17ஆம் நூற்றாண்டில் தான் காபி , டீ போன்ற பயிர்கள் தென்னிந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்குகிறது, மற்ற பிரிட்டிஷ் காலணிகளிலும் இந்த பயிர்கள் பயிரிடப்படுகின்றன. அந்த அளவுக்கான தேவை இந்த பானங்களுக்காக ஐரோப்பாவில் இருந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த பானங்கள் இங்குள்ள நடுத்தரவர்க்க மக்களின் வீடுகளில் நுழைய தொடங்குகிறது. பார்ப்பனர்களும், பார்பனரல்லாதாரில் சில வெள்ளாளர் சமூக மக்களின் வீடுகளிலும் காபி முதலில் நுழைகிறது. இந்திய தேசிய இயக்கமும் , தனி தமிழ் இயக்கமும் காபியை எதிர்மறையாகவே(Negative) அணுகியுள்ளார்கள். காபி நவீனத்தின் அடையாளமாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக, மரபார்ந்த பழக்கவழக்கங்களுக்கு எதிரியாகவுமே அணுகப்பட்டுள்ளது. பழையசோறு, நீராகாரம் என்றிருந்த மக்களிடம் காபியின் வருகை பெரியளவிலான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நவீனத்தின் அடையாளமாக மட்டுமல்லாமல் மேட்டிமைத்தனத்தோடும்(Elite) காபி சம்மந்தப்படுகிறது. இதற்கு எதிராக உழைக்கும் பானமாகவும் டீ தன்னை நிலைநிறுத்தி கொள்கிறது, அதற்க்கு காரணம் அதன் மலிவான விலை. நல்ல காபி என்பது பார்ப்பனர் ஹோட்டல்களிலும் , நல்ல டீ என்பதும் இஸ்லாமியர்களின் மிலிட்டரி ஹோடேல்களிலுமே கிடைக்கும் என்பது அந்த கால பொது புத்தியாக இருந்துள்ளது . தெரு ஓர “டீ கடை" என்று அழைக்கப்படுவதற்கு அதன் மலிவும் மக்களிடம் எளிதாக கிடைக்கப்பட்டதுமே காரணம். மாறாக காபி அப்படிப்பட்ட ஒன்றாக இருந்ததில்லை, என்னதான் டீ கடைகளில் காபி கிடைத்தாலும் அது “டீ கடை” என்றே அழைக்கப்படுகிறது. இரண்டு நுகர் பொருளுக்கும் பின்னாலும், பல எளிய புலம்பெயர் கூலிகளின் உழைப்பும், அங்கு நடந்த சுரண்டலும், சாதியத்தின் வடுவும் இடம்பெற்றுள்ளது.
Comments
Post a Comment