நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்// நூல் அறிமுகம்
கீழ்வெண்மணியை பேசுவோர், பேச தவிர்க்கும் "தீண்டாத வன்முறை" - நீடாமங்கலம் சாதி கொடுமை(1937) . இதற்கு பல காரணங்கள் சொல்லலாம், அந்த கால தலித் முகங்களாக அறியப்பட்ட அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் இதை பற்றி வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் தேசிய விடுதலை இயக்க அரசியல் என்கிற பெயரில் இந்த சாதிய கொடுமையை மூடி மறைக்க முயன்றது. தீண்டாமை ஒழிப்பை, சமபந்தி முறையை 1920களில் இருந்து பேசிய காங்கிரஸ் இயக்கம் தனது சொந்த மாநாட்டில் (தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸின் 3 வது அரசியல் மாநாடு) சமபந்தியில் அமர்ந்து உண்டார்கள் என்பதற்காக 20க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு மொட்டை அடித்தும், கரும்புள்ளி குத்தியும் தெரு முழுக்க இழுத்து சென்ற சாதிய வன்கொடுமையை எந்த ஒரு குற்றஉணர்ச்சியும் இன்றி மேற்கொண்டார்கள் காங்கிரஸ் இயக்கத்தினர். இந்த மாநாட்டிற்கு பி .ராமசாமி ரெட்டியார் தலைமைதாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வன்கொடுமையை மக்களுக்கு தெரியப்படுத்தியதில் சுயமரியாதை இயக்க தீரர்களே முன்னிலையில் இருந்துள்ளார்கள். சுயமரியாதை இயக்க நாளேடுகளான "குடிஅரசு" மற்றும் "விடுதலை" மூலமே இதற்கான மெனக்கெடலை மேற்கொண்டிருகிறார்கள். அதை பற்றி கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு பின் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூலக இந்நூல் வெளிவந்திருக்கிறது.
பூனா ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்த சமயம், இந்திய அரசு சட்டம் 1935 செயல்பாட்டுக்கு வந்து, மெட்ராஸ் மாகாண ப்ரீமியராக ராஜகோபாலாச்சாரி தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். இந்த சமயத்தில் தான் தஞ்சை ஜில்லா காங்கிரஸின் மாநாடு நடைபெறுகிறது. தேவசகாயம், ரெத்தினம், ஆறுமுகம் ஆகியோர் பந்தியில் அமர்ந்து உணவுண்ட காரணத்தால் அதே இடத்திலேயே டி.கே.பி சந்தன ராமசாமி உடையார் என்கிற நிலக்கிழார் தலைமையில் உயர்சாதி காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். அதற்கடுத்த நாளும் இந்த மூவர் உட்பட இருபது நபர்கள் மொட்டைஅடிக்கப்பட்டு தெருத்தெருவாக இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்கள். இதில் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்தை தழுவிய தலித்துகள்.
இந்த நிகழ்வை நீடாமங்கலம் சுயமரியாதை இயக்க தலைவர் அ. ஆறுமுகம் தான் வெளிக்கொண்டு வருகிறார். குடிஅரசு மற்றும் விடுதலை நாளிதழ்கள் மூலம் இது மக்களுக்கு தெரியப்படுத்த படுகிறது. இதற்க்கு எதிராக காங்கிரஸ் தலைமை தினமணி நாளிதழை வைத்து இந்த செய்தியை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.
ஆங்கில பத்திரிக்கைகள் இந்த நிகழ்வை பதிவுசெய்யாத காரணத்தால் அம்பேத்கர் போன்ற அகில இந்திய தலித் தலைவர்கள் இதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலித் தலைவர்களும் சரி, பூனா ஒப்பந்தத்தில் காந்திக்கு ஆதரவாக இருந்த எம்.சி.ராஜா போன்ற தலைவர்களும் எந்த எதிர்வினையும் ஆற்றியதாக தெரியவில்லை.
இந்த சாதிய கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளர்(தேவேந்திர குல வெள்ளாளர்) சமூக மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து "ஆதிதிராவிடன்" பத்திரிகை காங்கிரஸ் ஆதரவு தலித் தலைமைகளை கண்டித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.
சுயமரியாதை இயக்கம் தான் இந்நிகழ்வுக்காக கடைசி வரை களத்தில் நின்றுள்ளது, மேலும் தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம் ஆகிய மூவருக்கும் ஈரோட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை தொடர்ந்து நீட்டாமங்கலத்தில் சுயமரியாதை இயக்கத்தாரால் "சமஉரிமை ஹோட்டல்", "பெரியார் உணவு விடுதி", "திராவிடன் உணவு விடுதி", "சாதி ஒழிப்பு உணவகம்" ஆகிய பெயர்களில் உணவகங்கள் திறக்கப்பட்டு முற்போக்கு சமத்துவ நடைமுறைகள் பின்பற்ற பட்டுள்ளன. நீட்டாமங்கலத்தில் இந்நிகழ்வை தொடர்ந்து பிற்படுத்தாதபட்ட வகுப்பை சேர்ந்த சுயமரியாதை இயக்கத்தவருக்கும் தலித்துகளுக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததால், அங்கு சாதிய வன்முறைகள் அதன் பின் நடக்கவில்லை. அதே போல் மத மோதல்களும் நடைபெறவில்லை.
சுயமரிதை இயக்கத்தின் இத்தகைய செயல்பாடுகள்/ எதிர்வினைகள் எல்லாம் ஆய்வு நோக்கில் பதிவுசெய்யப்பட்ட வேண்டிய ஒன்றாகும். அந்தவகையில் இந்நூல் முக்கியமான ஒன்று, ஒரு சீர்திருத்த இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி சாதிய வன்முறையை அணுகியது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் எத்தகையவை. சுயமரியாதை இயக்க தத்துவங்கள் செயல்பாடுகளாக மாறும்போதும் அதன் பண்பை துளியும் மாற்றி கொள்ளாதது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
திராவிட இயக்கத்தின் நுண் வரலாறுகளை நாம் ஆய்வு நோக்கில் பதிவு செய்ய தொடங்க வேண்டும். மிக முக்கியமான புத்தகம், அறிவுபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்றாலும், வாசிக்கும் போது உணர்ச்சிகளை எழுவதை கட்டுப்படுத்த இயலவில்லை.
தமிழ்நாடு மைனஸ் திராவிட இயக்கம் என்பதை யூகித்து பார்க்கவே கொடூரமாக உள்ளது. நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பாக்கியவான்கள்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசித்து, தெளிவடையவும்.
Author: ஆ. திருநீலகண்டன்
Comments
Post a Comment