எம்.எஸ்.எஸ். பாண்டியன் -காலச்சுவடு கட்டுரைகள்




 திராவிட இயக்கம் பற்றி நான் வாசிக்க தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே எனக்கு MSS.Pandian அறிமுகமாகிவிட்டார், முதலில் அவரது “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” புத்தகத்தை தான் வாசித்தேன், இன்றைக்கும் இந்நூலை பலருக்கு பரிந்துரைப்பதுண்டு. அதன் பின் “Image Trap” மற்றும் அவரின் சில EPW கட்டுரைகளை வாசித்த அனுபவமுண்டு. பேராசிரியர் MSS.Pandian மூலம் தான் லட்சுமி நரசு, ராஜ் கௌதமன் போன்றவர்கள் எல்லாம் எனக்கு  அறிமுகமானார்கள். 


“பராசக்தி” திரைப்படத்திற்கு அதன் சமகால  அரசியல் நிகழ்வுகளோடு பொருத்தி ஒரு அபாரமான கட்டுரையை எழுதி இருப்பார். இடஒதுக்கீடு, தேசியம், தமிழ் பண்பாடு- கலாச்சாரம், நூல் அறிமுகங்கள், சினிமா விமர்சனங்கள், அரசியல் கட்டுரைகள் என பரந்துபட்ட எழுத்துக்கு சொந்தக்காரர்.  திராவிட இயக்கம் குறித்து இன்றைக்கு பல வட இந்திய ஊடகர்களும் அறிவுஜீவிகளும் பேச தொடங்கியுள்ளார்கள், ஆனால் 90 களின் தொடக்கத்தில் தன்னந்தனியாக நின்று பல ஆங்கில கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார் என்று நினைக்கும் போது உணர்வு ததும்புகிறது. தமிழ் ஆய்வுசூழலில் திரு MSS.Pandian அவர்களின்  பங்கு அளப்பரியது மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட  வேண்டிய ஒன்றாகும். 


EPW இதழில் அவர்  எழுதத்தொடங்கிய சமயத்தில் காலச்சுவடு சில கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது, அப்படி மூன்று கட்டுரைகள் மற்றும் திரு. MSS. பாண்டியன் அவர்களின் ”The Political Economy of Agrarian change : Nanchilnadu”(1990) நூல் அறிமுகம், அவர் முயற்சியில்  வெளியான “South Indian Studies” என்கிற ஆய்விதழ் பற்றிய ஒரு கட்டுரையும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 


"தேசிய பழமைவாதத்தை மறுதலித்தல்" என்ற கட்டுரை தேசியம் குறித்த பெரியாரின் நவீன பார்வைகளை முன்வைக்கிறது, பழமைவாதத்தின் அடிப்படையிலான தேசியத்தை அவர் மறுதலித்தவிதம் இந்திய தேசியத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ் தேசியத்திற்கும் பொருந்தி போகிறது, நவீன அரசியல் கருத்தியல்களான சுயமரிதை- பகுத்தறிவு -சமதர்மம்- ஜனநாயகம் என்பதன் அடிப்படையிலேயே பெரியார் தேசியத்தை அணுகினர் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. 


“தமிழ் திரைப்படங்களும் மேட்டுக்குடியினரும்” என்கிற கட்டுரை தொடக்ககால தமிழ் சினிமா மேட்டுக்குடி(Elite) வர்க்கத்தால்  எப்படி அணுகப்பட்டது என்பதை பற்றி பேசுகிறது. பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற கலைகளை மட்டும் உயர்நத அந்தஸ்து பொருந்திய ஒன்றாக பார்ப்பனர்கள் கருதினார்கள், சினிமா மேடை நாடகம்  போன்றவற்றை கீழான ஒன்றாகவே அவர்கள் கருதி இருந்தார்கள். பின்னாளில் சினிமா மூலம் உற்பத்தியான லாபத்தை கருத்தில்கொண்டும் அதன் சந்தை மதிப்பை நோக்கமாக கொண்டும் சில சமரசங்களுடன் பார்ப்பனர்கள் இந்த துறைகளில் நுழைகிறார்கள். இது போன்ற பல நுணுக்கமான கருத்துக்களை கொண்ட ஒன்றாக இந்த கட்டுரை அமைந்ததுள்ளது. 


“இருவர்- நுகர்பொருளாக மாறும் சரித்திரம்” என்கிற கட்டுரை அனைவரும்  வாசிக்க வேண்டிய ஒன்று, (குறிப்பாக மணிரத்னம் ரசிகர்கள்) Period சினிமாக்களும் வரலாற்று தரவுகளும் அதிக அளவில் திரை கதையாக்கப்படும் இந்த காலகட்டத்தில், இது போன்ற கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு அந்த சினிமாவை அணுகுவதே சரியான ஒன்றாக இருக்கும். 


AR வேங்கடாசலபதி அவர்கள் திரு பாண்டியன் அவர்களின் “”The Political Economy of Agrarian change : Nanchilnadu”(1990) நூலுக்கு ஒரு அறிமுகம் எழுதியுள்ளார், அதில் பாண்டியன் அவர்களின் கூர்மையான  பொருளாதார பார்வை வெளிப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். (இந்நூல் இப்போது பதிப்பில் இல்லை, மறுபதிப்பு வந்தால் சிறப்பாக இருக்கும்.) 


“South Indian Studies” என்ற பெயரில் ஒரு ஆய்விதழ் தொடங்கி, அதில் வெளியான தமிழ்நாட்டின் சமுக- அரசியல் -பொருளாதார - கலாச்சார - வரலாறு பற்றிய கட்டுரைகளும், சில நூல் அறிமுகங்களும் இந்த ஆய்விதலுக்கு பின்னணியில் இருந்த கனவுகளையும் ஒரு கட்டுரை விவரிக்கிறது. 


தமிழில் பெரிய அளவில் கட்டுரைகள் எழுதாத திரு.பாண்டியன் தொடக்க காலத்தில் பாமகவின் இதழ் ஒன்றிற்கு இரண்டு தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்ற செய்தி சுவாரிஸ்யமான ஒன்றாக இருந்தது.  


திரு. M.S.S பாண்டியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை எதிர்காலத்தில் யாரேனும் எழுதினால் நன்றாக இருக்கும், மேலும் அவரது ஆங்கில கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தமிழில் ஒரு தொகுப்பு நூலக வெளியிட்டால் அவருக்கு நாம் செலுத்தும் சிறப்பான அஞ்சலியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். 


 எது எப்படியோ திராவிட இயக்கம் பற்றிய எனது சிந்தனை போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகளில் MSS.பாண்டியன் முக்கியமானவராக இருப்பார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. 


வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசியுங்கள்.



Comments