திராவிட இயக்கமும் வேளாளரும் //BOOK REVIEW


 


திராவிட இயக்கம் மீதான எதிர்மறை விமரிசனங்கள் எல்லா காலகட்டங்களிலும்  தொடர்ந்து  நடந்தவண்ணம் இருப்பதென்பது வெள்ளிடைமலை. அந்தவகையில் இந்த ஆய்வு நூல் அத்தகைய முன்முடிவுகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும், வெள்ளாளர்களுக்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளையும் ஒற்றுமைகளை பகுப்பாய்வு செய்கிறது.  மேலும் "திராவிட இயக்கம் என்பது ஒரு வெள்ளாளர் இயக்கம்" போன்ற குருட்டு அபிப்ராயங்களுக்கு தரவுகளுடன் பதில் சொல்ல முற்படுகிறது. 


இங்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது அயோத்திதாசரிலிருந்தே தொடங்குகிறது என்று எடுத்துக்கொண்டாலும், பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதார் என்கிற இருமை என்பது நீதி கட்சி காலத்திற்கு பின்பு தான் கூர்தீட்ட படுகிறது. நீதி கட்சியின் தோற்றம் என்பது காங்கிரஸ் காட்சியிலும்  இத்தகைய இருமைகளை உண்டு செய்கிறது, இதன் விளைவாக “சென்னை மாகாணச் சங்கம்” என்ற அமைப்பு காங்கிரஸ் பார்பனரல்லாதார் மூலம் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சேரன்மாதேவி குருகுல போராட்டத்தின் காரண - விளைவுகளை புரிந்துகொள்ள முடிகிறது. 


1925 இல் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு விலகிய பெரியார், 1927இல்  சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்கிறார், சுயமரியாதை இயக்கத்தின் வருகை என்பது தமிழ்நாட்டரசியலின் முக்கியமான நிகழ்வு என்று சொன்னால் மிகையல்ல. ஒரு பகுத்தறிவு இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சுயமரியாதை இயக்கம் சமுகத்தில் நிலவிய அனைத்துவிதமான பிற்போக்குத்தனங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்த சூழலில் தான் சைவ சமய  இலக்கியங்களும் விமர்சனம் செய்யப்படுகிறது. பார்ப்பனர் எதிர்ப்பு மற்றும் வைணவ எதிர்ப்பு  என்கிற அடிப்படையில் சைவர்கள் சுயமரியாதை இயக்கத்தை ஏற்றுக்கொண்டாலும். சைவம் விமர்சிக்கப்படும்போது அதற்கான எதிர்வினைகள் வெவ்வேறு   வடிவங்களில் அதன் முக்கிய தலைவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. 


நவீன பகுத்தறிவு மற்றும் ஜனநாயக  கருத்தியல்களை முன்வைத்து சுயமரியாதை இயக்கம் தனது செயல்பாடுகளை முன்னெடுத்ததன் விளைவாக சைவ சமயமும் சில மாற்றங்களை அனுசரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. 


சைவர்களுக்கிடையிலேயே மூன்று பிரிவுகள் உருவானது துயிமைவாதம்(Purism) பேசிய சைவர்கள், மிதவாதிகள்(Moderates) மற்றும் சீர்திருத்த(Reformative) சைவர்கள். இதில் சீர்திருத்த சைவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் சில கொள்கைகளை அவசியமென கருதி சைவத்தில் மாற்றங்கள் வேண்டும் என்றார்கள். தூய்மைவாதம் பேசியவர்கள் சுயமரிதை இயக்கத்தை வைணவ இயக்கம் என்று விமர்சித்து மரபார்ந்த சைவத்தை முன்னிறுத்தினார்கள். 


சுயமரியாதை  இயக்க நடைவடிக்கைகளால், சைவர்கள் இத்தகைய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்கள். பார்ப்பனர்கள் இடத்தை தாங்கள் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை கொண்ட சைவர்களை, சுயமரியாதை இயக்கத்தின் இத்தகைய நவீன ஜனநாயக நடவடிக்கை திடுக்கிடவே செய்தது. இதன் விளைவாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் சைவர்களின் இடம் என்பது விளிம்புக்கு தள்ளப்பட்டது. 


இந்தி எதிர்ப்பு, பார்ப்பனர்/ பார்ப்பனிய எதிர்ப்பு  ஆகிய தளத்தில் இவ்விரண்டு இயக்கங்களும் சேர்ந்தே பயணித்தன. இத்தகைய போக்கை 1930 களுக்கு பின் பார்க்கமுடிந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் என்பது இந்தி எதிர்ப்பு என்ற அடிப்படையில் மட்டும் தான் அமைத்ததே ஒழிய அதை மீறிய  சமரசங்கள் சுயமரியாதை இயக்க தரப்பில் நடைபெறவில்லை. 1940களில் நடந்த பெரியபுராண எதிர்ப்பும் அதையொட்டி நடந்த விவாதங்களும் இவுண்மையை தெளிவுபடுத்தும். (மேலும் பார்க்க பேரறிஞர் அண்ணாவின் “தீ பரவட்டும்”)


1944க்கு பின் திராவிட இயக்கம் என்பது வெகுமக்கள் உள்ளடக்கிய இயக்கமாகவே அறியப்பட்டது. இதன் மூலம் திராவிட இயக்கத்தை வேளாளர் இயக்கம் என்று சொல்லுவது பகுதியளவு கூட உண்மை இல்லை என்பதை தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர். மேலும் அந்த  கால அரசியல் சூழலில் அடிப்படையிலே இவ்விரு இயக்க அரசியல் நடவடிக்கைகளும் அமைந்தது என்பதையும் இந்நூலை தெளிவுபடுத்துகிறது. 


திரு. MSS Pandian அவர்கள் எழுதிய  “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” என்கிற புத்தகம் சைவர்களுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையில் நிலவிய முரண்களை புரிந்துகொள்ள மற்றுமொரு துணை நூலாக அமையும். 


நவீன அரசியல் கருத்துக்களை பேசிய ஒரு இயக்கத்தை சாதி-மத-சமய அரசியல் இயக்கமாக சுருக்க நினைப்பது அப்பட்டமான காழ்ப்பே அன்றி வேறில்லை.


 வாய்ப்புள்ள நண்பர்கள் இந்நூலை அவசியம் வாசித்து தெளிவடையவும். 


Book: திராவிட இயக்கமும் வேளாளரும் 

Author: ஆ.இரா. வேங்கடாசலபதி

Publisher:  காலச்சுவடு 




Comments