பாரதி : கவிஞனும் காப்புரிமையும் // BOOK REVIEW


 


வரலாறு தான் தன்னுள் எத்தனை எழுதப்படாத சுவாரஸ்யங்களை கொண்டுள்ளது. புதிர்களை வெளிக்கொண்டுவரும் சாவிகளாக வரலாற்றாசிரியர்களே திகழ்கிறார்கள். வரலாறு பற்றிய இத்தகைய  வியப்புக்கு காரணம் திரு ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்  எழுதிய "பாரதி : கவிஞனும் காப்புரிமையும்" என்கிற புத்தகம் தான்.

 

பாரதியை நான் திராவிட இயக்க பார்வையில் அணுகியவன் , இப்பொழுதும் அப்படி தான். விமர்சனங்களோடு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்குள்ளதாகவே நினைக்கிறேன், பாரதி அதற்கு விதிவிலக்கல்ல.

 

பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமையாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் சமயத்தில், பெரியாரின் சமகாலத்தில் வாழ்ந்த, பெரியாரால் விமர்சிக்கப்பட்ட பாரதியின் படைப்புகள் எப்படி நாட்டுடைமையாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.

 

பெரியார் “குடிஅரசு” இதழை தொடங்கிய சமயத்தில் பாரதியின் பாடல்  வரிகளை பயன்படுத்தி இருந்தார் என்கிற செய்தி  புதுமையாக இருந்தது, “பாரதி பாதை” என்ற பெயரில் பேரறிஞர்  அண்ணா (திராவிட நாடு – 19-10-47) பத்திரிகையில் ஒரு நீண்ட நெடிய கட்டுரையும் எழுதியுள்ளார், அதுவும் 1940களிலேயே.  அது போலவே கலைஞரின் சுயசரிதையான " நெஞ்சிக்கு நீதி" தொகுப்பும் பாரதியின் வரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்றே.(உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத்தையும் குறிப்பிட்டு விடுகிறேன்)  புரட்சி கவிஞர் பாரதிதாசன், பாரதியாரின் மேல் கொண்டிருந்த பற்றை இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.  திராவிட இயக்க தலைவர்கள் பாரதியரோடு பல இடங்களில் முரண்பட்டாலும், அவரின் தாக்கத்தில் இருந்து விடுபட்டவர்களாக தெரியவில்லை.

 

இந்த புத்தகத்தின் கருவை வெளியிட்டால் சுவாரிஸ்யம் போய்விடும் என்பதால், இதுபோன்ற சில துணுக்கு செய்திகளை மட்டும் எழுதுகிறேன்.

 

ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தி.க. சண்முகம்(அவ்வை சண்முகம் என்றும் அழைக்கப்பட்டார்), தி.சு அவினாசிலிங்கம் செட்டியார், ஓமந்தூர் பி .ராமசாமி ரெட்டியார், விஸ்வநாத அய்யர் போன்ற முக்கிய ஆளுமைகளோடு இந்த நாட்டுடைமையாக்கப்பட்ட வரலாறு தொடர்பு கொண்டுள்ளது.

 

ஒருவர் இறந்து 60 ஆண்டுகளுக்கு பின் இயற்கையாகவே அவரின் படைப்புகளின் காப்புரிமை(Copyrights) உதிர்ந்துபோய்விடும்(wither), அதன் பின் அதை யார் வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம் . (அரசு தலையீடு இல்லாத பட்சத்தில் இது தான் நடைமுறை).

 

அரசே வலிந்து வந்து படைப்புக்களை அரசுடைமையாக்கும் நிகழ்வுகளும்  நடந்துள்ளது, சில அரசியல் காரணங்களுக்காக , காப்புரிமை நீடிக்கப்பட்டும் இருக்கிறது(தாகூர் விஷயத்தில் அப்படி தான்), அண்ணாவின் படைப்புக்களை 1995இல் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு முந்திக்கொண்டு அரசுடைமையாகியது என்பது புதிய செய்தி(எனக்கு). 

 

நாட்டுடைமையாக்குவதால் பல நன்மைகளும் சில தீமைகளும் இருக்க தான் செய்கின்றன.  மக்ககளிடையே  சிந்தனைகள் பரவும் என்பது நன்மை, உரையாடல் நடைபெறும் என்பது நன்மை, படைப்புகள் மலிவான விலையில் கிடைக்கும் என்பது நன்மை, ஆய்வுகளும் அதுசார்ந்த விவாதங்களும் நடக்கும் என்பது நன்மை. தரவுகள் திரிக்கப்படலாம், அரசால் சரியான முறையில் கையாளப்படாமல் போகலாம் என்பவை எல்லாம் சில தீமைகள். சிந்தனைகள் ஜனநாயகப்படவேண்டும் என்றல் நாட்டுடைமையாக்கம் அவசியமான ஒன்றாகும்.

 

பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயம் இருக்கிறது என்பது தெளிவு, அரசு தலையீடு இல்லாத பட்சத்தில் 2033க்கு பின் இயற்கையாகவே நாட்டுடைமையாகிவிடும். அரசு மரியாதை செய்ய நினைத்தால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட நூற்றாண்டில்(2025) அவரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி கௌரவிக்கலாம்.

 

பெரியாரும் பாரதியும் தமிழ் நிலத்தின் Organic intellectuals, (பாரதியின் வயதையும் கருத்தில் கொண்டே இந்த சொல்லாடலை பயன்படுத்துகிறன்). பாரதி மக்களிடம் சென்று சேர்ந்த அளவுக்கு பெரியாரின் சிந்தனைகள் சென்றுசேரவில்லை, அப்படி சென்று சேர, அவரின் சிந்தனைகள் பரவ நாட்டுடைமையாக்கம் அவசியம். அப்படி ஒரு நிகழ்வு அரசால் நிகழ்த்தப்பட்டால் பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்ட நிகழ்வின் சாட்சியாக நம் தலைமுறை இருக்கும்.

 

சலிப்புத்தட்டாத எழுத்துநடை, ஆழமான கருத்துக்கள், சுவாரிஸ்யம் நிறைந்த தரவுகள் . அனைவரும் அவசியம் வாசித்து பயனடைய வேண்டிய நூல் இது.  நண்பர்கள் தவறவிடாமல் வாங்கி படிக்கவும்.

 

 

 

"பாரதி : கவிஞனும் காப்புரிமையும்”

A.r. Venkatachalapathy

காலச்சுவடு

 

 

 

 



Comments